Published:Updated:

சாதியும் காதலும்!

சாதியும் காதலும்!

சாதியும் காதலும்!

சாதியும் காதலும்!

Published:Updated:
சாதியும் காதலும்!

ர்மபுரி சம்பவத்துக்குப் பிறகு, காதல் மற்றும் கலப்புத் திருமணங்கள் மிகப்பெரும் விவாதப் பொருளாகி நிற்கின்றன. சாதிப்பற்று நிரம்பிய சமூகத்தில், காதல் என்பது எத்தனை கொடுமையான விஷயமாகவும், கலவரக் காரணியாகவும் இருந்திருக்கிறது என்பதை அறியும்போது நரம்புகள் அதிர்கின்றன.

 இந்த விவகாரம் தர்மபுரியில் மட்டுமா... கொங்கு மாவட்டங்கள், தென்தமிழகம், மேற்கு மண்டலம் எனத் தமிழகம் முழுக்கவே பகையும் புகையுமாக இருக்கிறது. 'மலரினும் மெல்லியது’ என்று கொண்டாடப்படும் காதலில் ஏன் இவ்வளவு வன்மம் என்று வெவ்வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாதியும் காதலும்!
##~##

தர்மபுரிக் கலவரத்துக்கான தூண்டுகோல் என்று விமர்சிக்கப்படும் காடுவெட்டி குரு நம்மிடம், ''இந்த குரு காதலுக்கு எதிரானவன் இல்லை. என்னை வேண்டுமென்றே அப்படிச் சித்திரிக்கிறார்கள். நான் விளக்கமாகவே பேசுகிறேன். மாமல்லபுரத்தில் நான் பேசியது திரித்து அர்த்தப்படுத்தப்பட்டது என்பதுதான் உண்மை. 'நம்ம வன்னிய சமுதாயப் பெண்கள் மேற்படிப்பு மற்றும் பணிகளுக்காக வீட்டை விட்டு வெளியுலகம் வந்து, அந்தச் சூழ லில் இயங்க ஆரம்பிச்சிருக்காங்க. அவர்களைக் காதல் உள்ளிட்ட பல பிரச்னைகளில் இருந்து பக்குவ​மாகவும் பத்திரமாகவும் பாதுகாத்தாகணும். அதனால், ரொம்பவும் விழிப்போடு இருங்க பெண்ணைப் பெத்தவங்களே’ அப்படின்னு அறிவூட்டல் அர்த்தத்தில்தான் பேசினேன். எங்க சமூகப் பெண்களின் பாதுகாப்பு குறித்து நான் அச்சப்படுவதற்கான அவசியம் அதிகமாகவே இருக்கிறது. ஏனென்றால், வன்னியர்களை வம்புக்கு இழுப்பதையே முழுநேரக் குறிக்கோளாக ஒரு குறிப்பிட்ட சமுதாயம் கொண்டுள்ளது. அதற்காக இவங்க செய்யக்கூடிய மாஸ்டர் பிளான்தான் 'காதல்’. ரொம்ப நல்லவனாகவும் நியாயமானவனாகவும் தன்னைக் காட்டிக்கிட்டு எங்க சமுதாயப் பெண்களை காதல் வலையில் வீழ்த்துவதும், போலீஸ் ஸ்டேஷன், கோயில்களில் கல்யாணம் பண்ணிக்கிறதும், சில நாட்களில் அந்தப் பெண்ணைக் கைகழுவி அவங்க வாழ்க்கையை சீரழிக்கிறதும் அதிகம் நடக்குது. இதற்கு பல ஆதாரங்களை என்னால் காட்ட முடியும். இன்னைக்குக் காதலை இதயபூர்வமாகவும், மரியாதைக்கு உரியதாகவுமா செய்றாங்க? அந்தப் பொண்ணு காதலுக்கு ஓகே சொன்ன சில நாட்களிலேயே உடலுறவுக்கான சூழலை உருவாக்​கிடுறாங்க. அந்தக் கருமத்தை மொபைலில் பதிவு செய்து வச்சிக்கிறாங்க. அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி, பணம் கேட்டு டிமாண்ட் செய்வதில் தொடங்கி, பல வகைகளில் அந்தப் பெண்ணையும், அவளைப் பெத்தவங்களையும் சித்ரவதை செய்றாங்க. நிலைமை இப்படி இருக்க, எங்க மேலே குற்றம் சொல்வது என்ன நியாயம்? காதலனே சாமின்னு நம்பிட்டுப் போற பொண்ணு ரெண்டே மாசத்தில் சீரழிஞ்சு வந்து நிற்கிற கொடுமையைச் சொல்லி, மற்ற குடும்பங்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத் துறோம் அவ்வளவுதான்.

சாதியும் காதலும்!

எங்களைக் குறை சொல்றவங்களைப் பார்த்து நான் கேட்கிறேன், தலித்களுக்கு உள்ளேயே பாகு​பாடு

சாதியும் காதலும்!

வெறி இருக்கத்தானே செய்யுது. அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பையனை, மற்ற பிரிவு பொண்ணு காதலிச்சாலோ, திருமணம் செஞ்சாலோ ஏத்துக்கிறாங்களா? அவங்களுக்கு உள்ளேயே இவ்வளவு பாகுபாடு வச்சுகிட்டு, மத்தவங்க மேலே மண்ணை வாரித் தூற்றுவது அசிங்கம். கடைசியா ஒண்ணு சொல்றேன், தர்மபுரியில் நடந்தது தலித்கள் மீது வன்னியர் மட்டும் நடத்திய தாக்குதல் இல்லை. தலித்களால் பாதிக்கப்பட்ட பல சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றுசேர்ந்து நடத்தியதுதான்'' என்கிறார்.

பிற சமுதாயத்தினருடன் காதலோ, கலப்பு மணமோ கூடவே கூடாது என்பதை வலியுறுத்தி, 'கலப்புத் திருமண மறுப்பு உறுதிமொழி ஏற்புக் கூட்டம்’ என்ற பெயரில் கோவையில் தடபுட​லாக ஒரு விழாவே நடத்தப்பட்டது. இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த கொங்கு வேளாளக் கவுண்​டர்கள் பேரவை அமைப்பின் மாநிலத்தலைவர் மணிகண்டனிடம் பேசினோம். ''கவுண்டர் சமுதாயத்துக்குன்னு ஒரு பெரிய பாரம்பரியமும், மரியாதையும், கலாசாரமும் இருக்குதுங்க. ஆனா, காதல் மற்றும் கலப்புத் திருமணத்தால் எங்க சமுதாய அடையாளம் அநியாயத்துக்கு அழிஞ்சுபோகுது. இந்தச் சீரழிவைத் தடுத்து நிறுத்தியே ஆகணும்கிற முயற்சியாகத்தான் இந்தக் கூட்டத்தை நடத்தினோம். நாங்க இவ்வளவு தீவிரமாக் களம் இறங்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருப்பதுதான் உண்மை. 'கவுண்டச்சியைக் கட்டுவோம், கவுண்டனை வெட்டுவோம்’னு சூளுரையோட செயல்படு​றாங்க குறிப்பிட்ட சில சமூகப் பசங்க. காதல், சாதி மறுப்புத் திருமணம்னு தடம் மாறிப்போயி சீரழிஞ்ச எங்க பொண்ணுங்களோட எண்​ணிக்கை கொத்துக்கொத்தாக் கிடக்குதுங்க. எதையும் ஆதாரம் இல்லாம நான் சொல்லலை. இந்த வருஷத்தில் (2012) இது​வரை 936 கவுண்டர் சமுதாயப் பெண்கள், தலித் பையன்களைத் திருமணம் செய்து இருக்காங்க. அதில், 716 திருமணங்கள் மண​முறிவை சந்திச்சிருக்குது. 12 பொண்ணுங்க தற்கொலை செய்திருக்காங்க, 36 பெற்றோர் தற்கொலை செய்திருக்காங்க. இதையெல்லாம் பார்த் துட்டுத்தான் இந்தத் தற்காப்பு முடிவுக்கு வந்திருக்கோம்'' என்கிறார்.

தலித்கள் மீதான இந்த சாடல்கள், கலப்புத் திருமண துவேஷம் போன்ற விவகாரங்கள் குறித்து எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குனரான கதிரிடம் பேசினோம். ''தீண்டாமைக் கொடுமையின் உச்சம்​தான், 'பிளான் போட்டு லவ் பண்றாங்க, சீரழிச்சு தெருவில் விடுறாங்க’ என்று சொல்லப்படும் குற்றச்சாட்டுகள். 10 ஆண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் பொன்னருவி என்ற தலித் பெண், சேகர் என்ற வன்னியப் பையனைக் காதலித்து, திருமணம் செய்தார். அதன் பிறகு, அந்தப் பெண் மர்மமான முறையில் இறந்துபோனாள். அந்த இறப்புக்கு முன், பாலியல் பலாத்காரம் செய்யப்​பட்டாள். திட்டம் போட்டு நடத்தப்பட்ட இந்த வன்மத்தை என்னவென்று சொல்வது? இப்படிப் பல உதாரணங்கள் கொடுக்க முடியும். கௌரவக் கொலைகளும் இந்தச் சூழலில்தான் அடங்குகிறது.

சாதியும் காதலும்!

இந்த அக்கிரமங்களுக்கான பின்னூட்டத்தைப் பார்த்தால், பல விஷயங்கள் தெளிவாகப் புலனாகும்.

முக்கியமாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தலித்கள் முன்னேறுவதை, அவர்களை அடக்கி ஆண்ட சாதியால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்பதுதான் மிக முக்கியக் காரணம். அடுத்த விஷயம் சில அரசியல்வாதிகள் தங்களுடைய சமுதாய வாக்கு வங்கியைச் சிதறாமல் பாதுகாப்பதற்காக இந்த துவேஷத்தைத் தூண்டி விடுகிறார்கள். சமுதாயத்தில் சாதி மறுப்புத் திருமணங்கள் நிகழ்ந்து சமத்துவம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் ராமதாஸ், காடுவெட்டி குரு போன்றவர்கள் எல்லாம் இந்த அநாகரிக அரசியலுக்கான அடையாளங்கள்.

இவ்வளவு வன்மத்தை மனதில் வைத்துக்கொண்டு, தலித்களுக்கு இடையே ஒற்றுமை இல்லைன்னு காடுவெட்டி குரு அழுவது, ஓநாய் அழுகைதான். 'தர்ம​புரியில் தலித்களுக்கு எதிராக முதலியார், நாயுடுகள், வன்னியர், குறும்பர்கள் எல்லாம் சேர்ந்தாங்க’ என்று இவர்கள் சொல்வது, தலித்களை முற்றிலுமாவே சமூகக் கட்டமைப்பில் இருந்து ஒதுக்கி வைப்பதற்கான வார்த்தை ஜாலங்கள்.

'கையை வெட்டுவேன், மானமுள்ள அண்ணனா இருந்தா தற்கொலை பண்ணிப்பான்’ அப்படின்னு சமூக அமைதிக்குப் பங்கம் விளைவிக்கிற மாதிரி பேசும் இவர்களை இன்னமும் குண்டாஸ் சட்டத்தில் போடாமல் இருப்பதுதான் தவறு. ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகச் சூழல் உருவாகணும்னா, காதல் மற்றும் கலப்புத் திருமணங்களே மிகமுக்கிய வழி. அதுதான் இந்தச் சிக்கல்களுக்கான விடிவு'' என்கிறார்.

பெரியார்கள் இன்னும் நிறையவே தமிழகத்துக்குத் தேவையாக இருக்கிறார்கள்!

- எஸ்.ஷக்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism