Published:Updated:

லட்சக்கணக்கானவர் மனதைப் புண்படுத்தினாரா இந்தப் பெண்?

காற்றில் பறக்கும் கருத்து சுதந்திரம்!

லட்சக்கணக்கானவர் மனதைப் புண்படுத்தினாரா இந்தப் பெண்?

காற்றில் பறக்கும் கருத்து சுதந்திரம்!

Published:Updated:
##~##

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அரட்டை அடித்தவர்களை மிரட்டிவிட்டது மும்பை இளம்பெண்கள் கைது சம்பவம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இந்தக் கொடுமை! 

சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே கடந்த 17-ம் தேதி இறந்தார். மும்பை முழுவதும் கடை அடைப்புப் போராட்டம் நடந்து, மாநகரமே ஸ்தம்பித்தது. இது, அந்தப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்தது. தானே மாவட்ட பால்கர் நகரில் வசிக்கும் ஷாஹீன் தாடா என்ற 21 வயது கல்லூரி மாணவி, இந்தப் போராட்டம் குறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தனது சொந்தக் கருத்தை எழுதினார். 'உலகில் பல காரணங்களால் தினம் தினம் ஆயிரமாயிரம் பேர் இறக்கிறார்கள். அதேபோல்தான் இங்கேயும் ஒருவர் இயற்கையாக மரணம் அடைந்துள்ளார். இதற்காக ஊரே செயலற்று இருப்பது ஒன்றுக்கும் பிர யோஜனம் இல்லாதது. நம்நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய பகத்சிங், ஆஸாத், சுக்தேவ் போன்றவர்கள் இறந்ததற்கு எல்லாம் யாராவது இப்படிச் செய்தோமா? ஒருவர் மீதான மரியாதை, பணிவால் வரவேண்டும்; பயத்தால் வரக்கூடாது. இங்கு எல்லாருக்கும் பயத்தால்தான் மரியாதை வந்துள்ளது’ என்று, 18-ம் தேதி காலை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டேட்டஸ் போடவே... பற்றிக்கொண்டது பிரச்னை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லட்சக்கணக்கானவர் மனதைப் புண்படுத்தினாரா இந்தப் பெண்?

இந்த ஸ்டேட்டஸுக்கு ஷாஹீன் தாடாவின் தோழியான ரேணு ஸ்ரீனிவாசன் என்ற 20 வயது மாணவி லைக் கொடுத்து, அதைத் தன் ஃபேஸ்புக் பக்கத்திலும் ஷேர் செய்தார். கொதித்துப்போன சிவசேனா தொண்டர்கள், இரு பெண்களையும் தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்தனர்.

நிலைமையைப் புரிந்துகொண்ட ஷாஹீன் தாடா, 'நான் செய்தது தவறுதான். நான் பால் தாக்கரே என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பால் தாக்கரே நல்ல மனிதர். என்னை உங்கள் சகோதரியாக ஏற்றுக்கொண்டு மன்னியுங்கள்’ என்று மன்னிப்புக் கோரியதோடு, சர்ச்சைக்குரிய அந்த ஸ்டேட்டஸையும் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டார். இருந்தும் கோபம் தீராத சிவசேனா

லட்சக்கணக்கானவர் மனதைப் புண்படுத்தினாரா இந்தப் பெண்?

கட்சியைச் சேர்ந்த பூஷன் சங்கே என்பவர், 'லட்சக்கணக்கானோரின் மனதைப் புண்படுத்தி​விட்டார் இந்தப் பெண்’ என்று, போலீஸில் புகார் அளிக்க... அந்தப்புகாரின் பேரில் பால்கர் நகர போலீஸார், இரு பெண்களையும் கைது செய்தனர். மறுநாள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், நிபந்தனை ஜாமீனில் வந்தனர்.

இதற்கிடையில், இன்னொரு சம்பவம். ஷாஹீன் தாடா என்ற அந்தப் பெண்ணின் பாது​காவலரான அவருடைய மாமா அப்துல் தாடா ஒரு மருத்துவர். அவர் மும்பையில் எலும்பு மூட்டு மருத்துவமனை நடத்தி வருகிறார். ஞாயிறு இரவு அந்த மருத்துவமனையைச் சூழ்ந்த சிவசேனா கட்சி​யினர், அதை அடித்து உடைத்து சேதப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த விஷயங்கள் அனைத்தும் வெளியே வர... இந்தியா முழுவதும் இருந்து போலீஸாரின் நடவடிக்​கைகளைக் கண்டித்து எதிர்வினைகள் கிளம்ப ஆரம்​பித்தன. ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், மத்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில்சிபல் போன்றவர்கள், போலீஸாரின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்தனர். இந்திய பிரஸ் கிளப் தலைவர் மார்கண்டேய கட்ஜு, 'இது, அந்தப் பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம். இதற்காகக் கைது செய்தது சுதந்திரத்துக்கு எதிரான செயல். சட்டப்படிக் குற்றமும்கூட. சம்பந்தப்பட்ட போலீஸார் மீது மஹாராஷ்டிர முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியதோடு, முதல்வர் பிரித்விராஜ் சவானுக்கு கடிதமும் எழுதி இருக்கிறார்.

ஜாமீனில் வந்த ஷாஹீன் தாடா, 'அது என்னுடைய தனிப்பட்ட சொந்தக் கருத்துதான். இவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இனிமேல் ஃபேஸ்புக் பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்«​டன்’ என்று, தன் ஃபேஸ்புக் பக்கத்தையும் மூடி​விட்டார். கைது செய்யப்பட்ட அவரது தோழி ரேணு ஸ்ரீனிவாசன், 'எனக்கு அடுத்த மாதம் மேற்படிப்புக்கான நேர்முகத் தேர்வு சென்னையில் இருக்கிறது. போலீஸார் காவல்நிலையத்துக்கு வந்து கையெழுத்துப் போடச் சொல்கிறார்கள். இந்த நடவடிக்கையால் எனது படிப்பே கேள்விக்குறியாகி இருக்கிறது’ என்கிறார் கண்ணீர் மல்க.

ஷாஹீன் தாடாவின் மாமா அப்துல் தாடாவைத் தொடர்பு கொண்டு பேசினோம். ''இந்த வழக்கை இன்னும் போலீஸார் முடிக்கவில்லை. இருவரும் இப்போது ஜாமீனில்தான் இருக்கிறார்கள். மாநில முதல்வரிடம் பேசிக்கொண்டு இருக்கிறோம். விரைவில், அனைத்து பிரச்னைகளையும் முடித்து விட்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவே முயற்சி செய்கிறோம். இரண்டு பெண்களின் எதிர்காலம் மிகவும் முக்கியம். மருத்துவமனை தாக்கப்பட்டதில் கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதையும் இன்ஷூரன்ஸ் மூலமாகத்தான் பெறப்போகிறோம். சிவசேனா கட்சியை எந்த வகையிலும் எதிர்க்கப்போவது இல்லை. இனி, எந்தப் பிரச்னைக்கும் நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்'' என்றார் தெளிவாக. கருத்துச் சொல்வதற்கே பயப்படும் காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதற்கு மும்பை ஓர் உதாரணம்!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism