Published:Updated:

பள்ளத்துக்குள் பணம்?

ஆஸ்பத்திரியில் பி.ஆர்.பி.என்ன ஆகும் கிரானைட் வழக்கு?

பள்ளத்துக்குள் பணம்?

ஆஸ்பத்திரியில் பி.ஆர்.பி.என்ன ஆகும் கிரானைட் வழக்கு?

Published:Updated:
##~##

'சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கற்களை வெட்டிக் கடத்தி விற்ற வகையில் 9,793 கோடி ரூபாய்க்கான சொத்துக்களைப் பறிமுதல் செய் யவும் குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்​கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ - மாவட்ட கலெக்டர்கள் - எஸ்.பி-க்கள் மாநாட்டில் முதல்வர் இப்படி அறிவித்த அதே தினத்தில்தான் பாளையங்கோட்டை சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை ஆனார் 'கிரானைட் கிங்’ பி.ஆர்.பி.! 

''யாரும் என்னைப் பார்க்க வர வேண்டாம்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆகஸ்ட் 17-ல் தொடங்கிய 123 நாட்கள் சிறைவாசம் பி.ஆர்.பி. உடல்நிலையை ரொம்​பவே பாதித்து இருக்கிறது. மாலை 6.30 மணிக்கு பாளை சிறையில் இருந்து விடுதலை ஆனவர், நேராக வந்தது மதுரை அப்போலோ மருத்துவ​மனைக்குத்தான். அப்போது, இரவு மணி 10.30. ரத்த அழுத்தமும் சர்க்கரை அளவும் வரம்பை மீறி இருந்ததால், கால்கள் வீங்கிப்போய் நடக்கக்கூட முடியாமல் தள்ளாடினார் பி.ஆர்.பி. அவரது வக்கீல்​கள் கைத்தாங்கலாகத்தான் அவரை லிஃப்ட்டுக்கு அழைத்து வந்தனர். வி.ஐ.பி-க்களுக்கு சிகிச்சை அளிக்கும் விஸ்தாரமான பிளாட்டினம் வார்டில் அவரை அட்மிட் செய்த டாக்டர்கள், உடனே சிகிச்சையைத் தொடங்கினர். சர்க்கரை அளவு 200-ஐயும் ரத்த அழுத்தம் 170-ஐயும் தாண்டி இருந்ததால், ஒருவிதப் பட படப்போடு இருந்தா​ராம். மதுரை வி.ஐ.பி-க்கள், நலம் விரும்பிகள் எனப் பலரும் அவரைப் பார்க்கக் கிளம்பி இருக்கிறார்கள். 'சேம்பர் ஆஃப் காமர்ஸில் இருந்து உங்களைப் பார்க்க வர்றோம்னு சொல்றாங்கய்யா’ என்று டாக்டர்கள் சொன்னதற்கு, கையைத் தலைக்கு மேலே தூக்கிப் பெரிதாக ஒரு கும்பிடு போட்டவர், 'யாரும் என்னைப் பார்க்க வர வேண்டாம். என்னைத் தொந்தரவு செய்யாமல் தனியாக இருக்கவிடுங்கள்’ என்று கறராகச் சொல்லி​ விட்டாராம்.  

பள்ளத்துக்குள் பணம்?

மன அழுத்தத்தில் பி.ஆர்.பி.!

அப்போலோவில் அட்மிட் ஆன பி.ஆர்.பி. வீட்டுச் சாப்பாட்டைக் கூட மறுத்து, 'எனக்கு ஆஸ்பத்திரி சாப்பாடே போதும்’ என்று சொல்லிவிட்டாராம். சிறை அந்த அளவுக்கு அவரை சீர்படுத்தி இருக்கிறது. காலையில் ஒரு டம்ளர் ஓட்ஸ் கஞ்சி, 8.30 மணிக்கு இரண்டு இட்லியும் சாம்பாரும், 11 மணிக்கு ஒரு கிளாஸ் பால், மதியம் காய்கறியுடன் ஒரு கப் சாதம், மாலையில் தேவைப்பட்டால் ஒரு கப் டீ, இரவு 8.30 மணிக்கு இரண்டே இரண்டு கோதுமை தோசை - இதுதான் பி.ஆர்.பி-யின் இப்போதைய மெனு. 'ஆஸ்பத்திரி சாப்பாடு உப்புச்சப்பு இல்லாமத்தான் இருக்கு. ஆனாலும் பரவாயில்லை; இதையே கொடுங்க’ என்றாராம். இதுவரை சந்தித்து அறியாத சிறை வாழ்க்கையும், தன்னுடைய குடும்பத்தாருக்கு போலீஸ் கொடுத்த டார்ச்சரும் பி.ஆர்.பி-யின் மன தைரியத்தை ரொம்பவே தகர்த்து விட்டதாகச் சொல்கிறார்கள். 'ஒருவிதமான மன அழுத்தத்துக்கு ஆளாகி இருப்ப​வரை, அதில் இருந்து மீட்பதற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்று அட்வைஸ் கொடுத்து இருக்கிறார்களாம் மருத்து​வர்கள்.

அத்தனை பேரும் வெளியே...

'மதுரை மாவட்டக் குற்றப் பிரிவு அலுவலகத்தில் தினமும் காலையில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும்’ என்பது பி.ஆர்.பி-க்கு கோர்ட் விதித்து இருக்கும் ஜாமீன் நிபந்தனை. 18-ம் தேதி காலையில் இருந்து இந்த நிபந்தனையை நிறைவேற்றுகிறார். துரை தயாநிதியுடன் முன்ஜாமீன் பெற்ற சிந்து கிரானைட் அதிபர் பி.கே.செல்வராஜ், அவரது மனைவி, மகன் உள்ளிட்டோர் 17-ம் தேதி மேலூர்

பள்ளத்துக்குள் பணம்?

கோர்ட்டில் சரண்டர் ஆகி, 18-ம் தேதியில் இருந்து கீழவளவு போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போடுகிறார்கள். கிட்டத்தட்ட கிரானைட் வழக்குகளில் வளைக்கப்பட்ட அத்தனை பெரும் புள்ளிகளும் இப்போது வெளியே வந்து விட்டனர். பி.ஆர்.பி. உள்ளிட்டோர், 'நிலுவையில் இருக்கும் வழக்குகளிலும் புதிதாகப் பதிவு செய்யக் காத்திருக்கும் வழக்குகளிலும் தங்களைக் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கோரி மனு போட்டதால், அவர்களைக் கைது செய்ய ஜனவரி 21-ம் தேதி வரை தடை விதித்து இருக்கிறார் நீதிபதி சி.டி.செல்வம். இதனிடையே, துரை தயாநிதிக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்துசெய்யக் கோரி 14-ம் தேதியே சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து விட்டது அரசு. அடுத்ததாக, பி.ஆர்.பி-யின் ஜாமீனை எதிர்த்தும் அப்பீலுக்குப் போகிறார்களாம்.

நெருங்கும் க்ளைமாக்ஸ்!

''மொத்தம் உள்ள 175 குவாரிகளில் 86 குவாரிகளில் விதிமுறை மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இதில் 64 குவாரிகளை அளவீடு செய்ததில் 9,783 கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தண்ணீர் தேங்கி நிற்பது உள்ளிட்ட காரணங்களால் இன்னும் 22 குவாரிகளில் அளவீட்டுப் பணிகள் முடியாமல் உள்ளன. அங்கே நடந்திருக்கும் விதிமுறைமீறல்களைக் கணக்கு எடுத்தால், முறைகேட்டின் அளவு 16 ஆயிரம் கோடியைத் தாண்டும். முதல் கட்டமாக 50 குவாரிகளுக்கான லைசென்ஸை ரத்து செய்திருக்​கிறோம். இழப்பீட்டுத் தொகையை வசூல் செய்வது தொடர்பாக பி.ஆர்.பி., சிந்து, மதுரா உள்ளிட்ட 16 கிரானைட் நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். ஜனவரி 3 மற்றும் 4-ம் தேதிகளில் இவர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். ஜனவரி இறுதிக்குள் 86 குவாரிகளுக்கும் நோட்டீஸ், விசாரணை சம்பிரதாயங்களை முடித்து அதன்பிறகு, அபராதம் விதிப்பது குறித்து முடிவெடுப்போம்'' என்கிறார் மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா.

   ''கிடுகிடுவெனப் போய்க்கொண்டு இருந்த கிரானைட் வழக்குகள் ஸ்திரம் இழந்து விட்டதாக பொதுமக்களே பேச ஆரம்பிச்சிட்​டாங்களே'' என்று அவரைக் கேட்டதற்கு, ''யாரும் அப்படி சந்தேகப்படவேண்டியது இல்லை. சட்டத்தில் உள்ள சலுகைகளைப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளியில் வந்திருக்கிறார்கள். அதை நம்மால் தடுக்க முடியாது. அதே சமயம் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதும் இல்லை. துல்லியமாக முறைகேடுகளைக் கண்டுபிடித்து அதற்கான இழப்பீட்டுத் தொகையை வசூலிக்கவும் குற்றவாளிகளுக்கு அதிக​பட்சத் தண்டனை வாங்கித் தரவும் உரிய நடவடிக்​கைகளை நாங்கள் தொய்வின்றி எடுத்துக் கொண்டு இருக்கிறோம். கூடிய சீக்கிரம் க்ளைமாக்ஸ் வந்துவிடும்... கவலைப்படாதீர்கள்'' என்றார்.

பள்ளத்துக்குள் பணம்?

இருக்கிறதா அதிர்ச்சி வைத்தியம்?

போலீஸ் தரப்பிலோ, ''பி.ஆர்.பி. மீது மொத்​தம் 33 வழக்குகள் இதுவரை பதிவாகி இருக் கின்றன. 19 வழக்குகளில் ஜாமீன் வாங்கி இருக் கின்றனர். ஒன்பது வழக்குகளில் முன்ஜாமீன் மனு விசாரணையில் இருக்கிறது. இந்த ஒன்பது வழக்குகளில் பி.ஆர்.பி-யைக் கைதுசெய்ய மேலூர் கோர்ட் வாரன்ட் பிறப்பிக்க மறுத்துவிட்டது. மேலும் ஐந்து வழக்குகளில் ஜனவரி 21 வரை பி.ஆர்.பி உள்ளிட்டோரைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்திருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. ஒலிம்பஸ் குவாரியில் நடந்திருக்கும் முறைகேடுகள் பற்றிய முழு விவரங்கள் மட்டுமே இதுவரை எங்களுக்கு அறிக்கையாகத் தந்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். மற்ற குவாரிகள் பற்றி இன்னும் இறுதி அறிக்கை எங்களுக்கு வரவில்லை. இழப்பீடுகளைச் சரிக்கட்டும் வகையில் கிரானைட் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட சொத்துக்களை முடக்கி அரசுடமை ஆக்குவதற்கான முயற்சிகள் வேகமாக நடக்கிறது. கிரானைட் வழக்குகளில் முக்கியக் குற்றவாளிகள் சிலரை எங்களால் கைது செய்து விசாரிக்க முடியவில்லை. இப்போது அவர்கள் எல்லாம் சட்டப் பாதுகாப்புடன் வெளி​யில் வந்து விட்டதால் விசாரணையை விரைந்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது எங்களுக்கு ஈஸிதான். ஜாமீனில் வந்துட்டா மட்டும் தப்பி விட முடியாது. அத்தனை பேருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க நாங்களும் அதிரடித் திட்டம் வச்சிருக்கோம்'' என்று த்ரில் கொடுக்கிறார்கள்.

    ரெண்டு கன்டெய்னர்களில் பணம்?

''கீழவளவு வீரகாளியம்மன் கோயிலுக்குப் பின்புறம் ஓடைக்கால் புறம்போக்கை ஆக்கிரமித்து பி.ஆர்.பி. நிறுவனத்தின் அலுவலகக் கட்டடம் ஒன்றைக் கட்டி இருக்கிறார்கள். இதன் முக்கால் பகுதி ஆக்கிரமிப்பில் இருப்பதாகச் சொல்லி, அதை இடித்துத் தள்ள அனுமதி கேட்டு கலெக்டருக்குக் கோப்பு அனுப்பினர். கீழ்மட்ட அதிகாரிகள் சிலர் அதை கலெக்டருக்கே காட்டாமல் 'இப்போதைக்கு நடவடிக்கை தேவையில்லை’னு குறிப்பு எழுதிக் கிடப்பில் போட்டார்களாம். கீழையூர் சி.சி.கண்மாய் பகுதியில் ஒரு குவாரியில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்த பள்ளத்தில் மீண்டும் கற்களைப் போட்டு மூடி இருக்கிறார்கள். இந்தக் குவாரியை கிரானைட் நிறுவனத்தின் செக்யூரிட்டிகள் ஷிஃப்ட் முறையில் காவல் காக்கிறார்கள். ஐந்து நாட்களுக்கு முன்னதாக ஒயின் ஷாப் பாரில் கிரானைட் தொழிலாளிகள் இருவர், 'நாங்கதான் அந்த குவாரிக்குள்ள ரெண்டு கன்டெய்னர் நிறையப் பணத்தை வெச்சு பொதைச்சி வச்சோம். அங்க எடுக்குறதுக்கு ஆளில்லாம அனாமத்தாக் கெடக்​குது பணம். ஆனா, எங்களுக்கு சம்பளத்துக்கு வழியில்​லை’னு போதையில் உளறி இருக்கிறார்கள். இந்த விஷயம் மேலதிகாரிகள் வரை போயிருக்கிறது. ஆனாலும், இதுவரை அந்தக் குவாரி பக்கம் யாருமே போகவில்லை. இந்தப் பணத்தை வெச்சுத்தான் நினைத்ததை எல்லாம் சாதிக்கிறாங்க'' என்று வருத்தப்படுகிறார்கள் களத்தில் உள்ள வருவாய்த் துறையினர்.

பள்ளத்துக்குள் பணம்?

அமையுமா தனி நீதிமன்றம்?

'கிரானைட் வழக்குகளில் வெவ்வேறு நீதிமன்​றங்களில் வெவ்வேறு வகையான தீர்ப்புகள் வெளியாகிக்கொண்டு இருப்பதால் கிரானைட் வழக்குகள் அனைத்தையும் ஒரே இடத்தில் விசாரிக்கும் விதமாக தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும்’ என்று பொதுநல மனு ஒன்று தாக்கல் ஆகலாம் என்று நாம் ஏற்கெனவே சொல்லி இருந்தோம். அதன்படியே, மேலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சோமசுந்தரம், கடந்த 18-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.

நம்மிடம் பேசிய அவர், ''பல்லாயிரம் கோடிக்கு கிரானைட் ஊழல் நடந்திருக்கிறது. கண்மாய்கள், நீர் ஆதாரங்கள் கபளீகரம், பொதுச் சொத்துக்கள் நாசம், விவசாய நிலங்கள், தொன்மைச் சின்னங்கள் அழிப்பு, பஞ்சமி நிலங்கள் பறிப்பு, அத்துமீறிக் கற்களை வெட்டி எடுத்து இயற்கை வளத்தை சுரண்டுதல் என்று ஏகப்​பட்ட முறைகேடுகள் நடந்திருக்கிறது. இவற்றை விரைந்து விசாரணை நடத்தினால்தான், தப்புச் செய்தவர்களுக்குத் தண்டனை கிடைக்கும். அதனால்தான் தனி நீதிமன்றம் அமைக்கக் கோரி இருக்கிறோம். பி.ஆர்.பி. தரப்பு வைத்திருக்கும் நிலங்கள் மட்டுமே 20 ஆயிரம் ஏக்கர் என்று கணக்கு எடுத்திருக்கிறார்கள். பினாமிகள் கணக்கையும் எடுத்தால் 35 ஆயிரம் ஏக்கரைத் தாண்டும் என்று போலீஸ் அதிகாரிகளே சொல்கிறார்கள். இதற்கான ஆவணங்களைத் திரட்டிக்கொண்டு இருக்கிறோம். கைக்கு வந்ததும், நில உச்சவரம்புச் சட்டத்தை அமல்படுத்தி, அந்த நிலங்களை அரசே கையகப்படுத்தி நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கக் கோரி இன்னொரு மனுவையும் தாக்கல் செய்வோம்'' என்றார்.

   மீண்டும் கிடுகிடுக்கிறது கிரானைட் தேசம்!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பா.காளிமுத்து