Published:Updated:

ஈமுவுக்குத் தமிழ்ப் பெயர் என்ன?

தேனியில் இன்னமும் கஞ்சா இருக்கிறதா?கலெக்டர்களிடம் முதல்வர் கேள்வி மழை!

ஈமுவுக்குத் தமிழ்ப் பெயர் என்ன?

தேனியில் இன்னமும் கஞ்சா இருக்கிறதா?கலெக்டர்களிடம் முதல்வர் கேள்வி மழை!

Published:Updated:
##~##

லெக்டர்கள் - காவல் துறை அதிகாரிகள் மாநாட்டை மூன்று நாட்களுக்கு நடத்திய​தோடு, 343 அறிவிப்புகளையும் வெளியிட்டு அதிரடி கிளப்பியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. மாநாட்டில் நடந்த சுவாரஸ்யங்களைத் திரட்டி​னோம். 

மாறிய பூக்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 மொத்த மாநாட்டையும் ஒன் வுமன் ஆர்மி போல நடத்தியவர் ஜெயலலிதா. தி.மு.க. ஆட்சியில் நடக்கும் கலெக்டர் மாநாடுகளில் அமைச்சர்கள் எல்லாம் அடிக்கடி குறுக்கிட்டுப் பேசுவார்கள். ஆனால் இங்கே அமைச்சர்கள் ஒருவர்கூட வாயைத் திறக்கவில்லை. பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்திலேயே பேசியதால், கலெக்டர்கள் தங்கள் துறையைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்பதைக்கூட அறியாமல் பல அமைச்சர்கள் தேமே என உட்கார்ந்து இருந்தார்களாம்.

 மேடையில், முதல்வர் ஜெயலலிதாவோடு தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறை செயலாளர் ராஜகோபால், டி.ஜி.பி. ராமானு​ஜம் ஆகியோர் அமர்ந்திருந்தனர். ஜெயலலிதாவின் மேஜைக்கு எதிரே இரண்டு பக்கம் கண்ணாடிக் குடுவையில் பூக்களை அழகாக வைத்திருந்தனர். தினமும் அதை மாற்றி வைத்தனர்.

ஈமுவுக்குத் தமிழ்ப் பெயர் என்ன?

பதற வைத்த ஹோட்டல் ஊழியர்

 முதல் நாள் மாநாட்டில் கலெக்டர்களும் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். சட் டம் ஒழுங்கு பற்றிய விவாதம் நடந்தது. இரண்​டாவது நாள் மாநாட்டில் வளர்ச்சித் திட்டங்களும் மூன்றாவது நாள் மாநாட்டில் காவல் துறை தொடர்பான விஷயங்களும் அலசப்பட்டன. ஒவ் வொருவராக பேச அழைத்தார் முதல்வர். ஒவ்வோர் ஆண்டும் மாநாட்டில் உணவு ஏற்பாட்டை சுற் றுலாத் துறையின் தமிழ்நாடு ஹோட்டல்தான் கவனிக்கும். இந்த ஆண்டு ஸ்டார் ஹோட்டலில் இருந்து உணவு ஏற்பாடு செய்திருந்தனர். விவாதம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே ஸ்டார் ஹோட்டல் ஊழியர்கள் காபி விநியோகம் செய்ய ஆரம்பித்தனர். அப்போது, ஜெயலலிதா முன்பு ஒருவர் காபி கோப்பையைக் கை தவறிக் கீழே போட... அது சுக்கு நூறாக உடைந்தது. மொத்த மாநாடும் சில விநாடிகள் ஸ்தம்பித்துப்போனது. முதல்வர் அமைதியாக உற்றுப்பார்க்க... உடனே, பரபரவென இடத்தைச் சுத்தப்படுத்தினர். அந்த ஊழியருக்கு வெளியே செம டோஸ்.

ஈமுவுக்குத் தமிழ்ப் பெயர் என்ன?

 கோட்டை நாமக்கல் கவிஞர் மாளிகை​யின் 10-வது தளத்தில்தான் மாநாடு நடந்தது. இரண்டாவது நாள் மாநாட்டு நேரத்தில் 9-வது மாடியில் இருந்த மின்சார கேபிளில் மின்கசிவு காரணமாக பவர்கட் ஏற்படவே, பதறிப்போய் சரிசெய்ததோடு, மாநாடு நடந்த இடத்தில் அதன்பிறகு மின்சாரம் தடைபடாமல் பார்த்துக்கொண்டனர். முதல் நாள் மாநாட்டின்போது நாமக்கல் மாளி​கைக்குப் பக்கத்தில் சிறிய தீயணைப்பு வண்டி நிறுத்தப்பட்டு இருந்தது. மின்கசிவுக்குப் பிறகு, பல மாடி உயரத்துக்குச் செல்லும் ஹைட்ராலிக் லிஃப்ட் வசதி உள்ள தீயணைப்பு வண்டியைக் கொண்டுவந்து நிறுத்தினர்.  

 அரியலூர் கலெக்டர் செந்தில்குமார், புதுக்கோட்டை கலெக்டர் மனோகரன், தர்மபுரி கலெக்டர் லில்லி, திண்டுக்கல் கலெக்​டர் வெங்கடாசலம் ஆகியோர் முதல்வரை அம்மா என்றுதான் அழைத்தனர். மனோகரன் வைத்த ஐஸ்தான் அதிகம். திருவள்ளூர் எஸ்.பி. அமீத் குமார் சிங் பேச்சில் வார்த்​தைக்கு வார்த்தை 'மேடம்’.

கலவரம் குறைய கலைக் கல்லூரி வேண்டும்

'சாதி மோதல்கள் ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம்’ என்று ஜெயலலிதா கேட்டபோது ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார், 'ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர்கல்வி கற்றவர்கள் 12 சதவிகிதத்துக்கும் குறைவுதான். கல்வி, வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் சாதி மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியும். எனவே முதுகுளத்தூர், திருவாடனையில் கலைக் கல்லூரிகள் அமைத்துத் தர வேண்டும்’ என்று ஆலோசனை சொன்னார். அதையும் அறிவிப்பாக வெளி யிட்டார் முதல்வர்.

 விருதுநகர் கலெக்டர் ஹரிஹரன் பட்டாசுத் தொழிற் சாலைகளைப் பற்றி விவரித்தார். அதில் குறுக்கிட்ட ஜெய லலிதா, 'தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டால் அபாய ஒலி எழுப்பிக் கட்டடத்தின் தளத்தில் இருந்தே தண்ணீர் கொட்டும் வசதியைப் பட்டாசுத் தொழிற்​சாலை களில் கட்டாயமாக்கலாம்’ என்றார்.

காலணி முதல் கம்ப்யூட்டர் வரை..

 ஈரோடு கலெக்டர் சண்முகம் முதல்வரைத் தனித்தனி​யாகப் பாராட்ட அவகாசம் இல்லாதவராக,

ஈமுவுக்குத் தமிழ்ப் பெயர் என்ன?

'காலணி முதல் கம்ப்யூட்டர் வரை மாணவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசை இந்தியாவே ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கிறது’ என்று ஆரம்பித்தார். தொடர்ந்து ஈமு கோழிப் பண் ணையைப் பற்றி பேசினார். குறுக்கிட்ட முதல்வர் 'ஈமுவுக்குத் தமிழ்ப் பெயர் என்ன?’ என்றார். இதைக் கொஞ்சமும் எதிர்பாராமல் தவித்துப்போனார் கலெக்டர். யாருக்கும் தமிழ்ப் பெயர் தெரியவில்லை. முதல்வரின் கேள்விக்குப் பதில் சொல்லாமல், 'ஈமு கோழியை வளர்த்தால் பெரிய அளவில் பணக்காரர் ஆகலாம் என விளம்பரம் செய்து சில நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டன. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்’ என பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டு அமர்ந்தார்.  

துணிச்சல் கலெக்டர்

 காஞ்சிபுரம் கலெக்டர் சித்திரசேனன், 'உங்கள் ஆட்சியில் இலவசக் கறவை மாடுகள் வழங்கியதால், மக்கள் ஏக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஆக் கிரமிப்புகள் அதிகம் உள்ள மாவட்டமாக காஞ்சிபுரம் உள்ளது’ என்று சொல்லிக்கொண்டே போனவர், 'எங்கள் மாவட்டம் மூன்றாவது இடத்​தில் உள்ளது’ என்றதும், ஆக்கிரமிப்பில்தான் மூன்றாவது இடத்தில் இருக்கிறதா என சந்தேகம் அடைந்த முதல்வர், 'எதில் மூன்றாவது இடம்?’ என கேட்டார். உஷாரான கலெக்டர், 'மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதில் மூன் றாவது இடத்தில் இருக்கிறோம்’ என திருத்திச் சொன்னார்.

டெங்கு நோயால் யாருமே உயிர் இழக்கவில்லை; வைரஸ் நோயால்தான் இறந்து இருக்கிறார்கள் என்பதுதான் தமிழக அரசின் உறுதியான முடிவு. இந்தநிலையில், தனது மாவட்டத்தில் சிலர் டெங்குவால் இறந்து போனார்கள் என்று சித்திரசேனன் தைரியமாகச் சொன்னது பலருக்கும் ஆச்சர்யம்.

 'மேற்குக் கடற்கரையை ஒட்டி இருக்கிறது கன் னியாகுமரி மாவட்டம். இதன் அருகில் வங்காள விரிகுடா உள்ளது’ என கன்னியாகுமரி கலெக்டர் நாகராஜன் சொல்ல இடைமறித்த ஜெயலலிதா, 'அது அரபிக் கடல்’ என திருத்தம் செய்தார்.

செயலரை அதிரவைத்த முதல்வர்

 பெரம்பலூர் கலெக்டர் தாரேஸ் அகமது 'மருதை ஆற்றின் குறுக்கே தடுப்பணை வேண்டும் என்பது பல வருடக் கோரிக்கை. இதற்காகத் திட்டம் தயாரித்து அரசிடம் அனுப்பி இருக்கிறோம்’ என்றார். உடனே பொதுப்பணித் துறை செயலாளர்  சாய்குமாரிடம் விளக்கம் கேட்டார் ஜெயலலிதா. 'பரிசீலித்துக்​கொண்டு இருக்கிறோம்’ என்று அவர் சொல்ல, 'எத்தனை மாதங்கள் வரை பரிசீலனை செய்வீர்கள்? சீக்கிரம் முடிவு எடுங்கள்’ என்றார் ஜெயலலிதா.

தமிழுக்கு சபாஷ்

 மதுரை எஸ்.பி. பாலகிருஷ்ணன் எடுத்த எடுப்பிலேயே 'சங்கத் தமிழ் வளர்த்த மதுரையை மீட்ட அம்மா அவர்களே’ என்றார். அமைச்சர்கள் கைதட்டினர். 'சாதி மோதலைத் தூண்டும் வகையில் பேசுபவர்களை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்கிறோம். ஆனால், அவர்களை நீதி மன்றத்தில் நிறுத்தி நடவடிக்கை எடுக்கக் கால தாமதம் ஏற்படுகிறது. இதற்குக் காரணம், சட்டத்தில் உள்ள ஒரு பிரிவுதான். அதைநீக்க அம்மா நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றவர் அடுத்துச் சொன்ன விஷயம்தான் பலரையும் மிரட்டியது.

'தென் மாவட்டங்களில் சாதி உணர்வு மக்களிடம் மேலோங்கி இருக்கிறது. ஒரு சாதியினர் நடத்திய போராட்டத்தின்போது, இன்னொரு சாதித் தலைவரின் படத்தை சாலையில் வரைந்து அதில் சிறுவன் ஒருவன் சிறுநீர் கழித்தான். காந்தி, கண்ணகி, நேரு படத்தை எல்லாம் பள்ளி மாணவர்களின் பனியனில் பொறித்து அவர்களை சாதிப் பெயருடன் எழுதுகிறார்கள். ஆகவே பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாதிக் கூட்டங்களில் கலந்துகொள்ள அரசு தடை விதிக்க வேண்டும். சாதி சிந்தனையைப் போக்கும் விதமாக பாடத்திட்டத்தில் பாடங்கள் சேர்க்க வேண்டும்’ என்றார். தமிழில் பேசிய எஸ்.பி-யை 'நன்றாகத் தமிழ் பேசுகிறீர்கள்’ என்று ஜெயலலிதா பாராட்டினார்.    

அம்மா செய்த புண்ணியத்தால் இட்லி, தோசை

 வேலூர் கலெக்டர் சங்கர், 'அரசின் விலையில்லா அரிசியால் பசி என்ற வார்த்தையே இப்போது இல்லாமல் போய்விட்டது. இந்தப் புண்ணியம் அம்மாவைத்தான் சேரும். பழைய சாதத்தையும் ஊறுகாயையும் கல்லூரிக்கு எடுத்துச்சென்ற மாணவர்கள், அம்மாவின் இலவச கிரைண்டர், மிக்ஸியால் இட்லி, தோசை கொண்டு செல்கிறார்கள். இது, அம்மாவின் ஆட்சியில் நடந்த அதிசயம்’ என்று அமைச்சர்களையே தூக்கிச் சாப் பிட்டார்.

 தஞ்சை கலெக்டர் பாஸ்கரன், 'நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தஞ்சாவூரில் கடந்த ஓர் ஆண்டாக சட்டம், ஒழுங்கு சீராகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சம்பா பயிருக்காக 12 மணி நேரம் மின்சாரம் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி​யில் இருக்கிறார்கள். உங்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்'' என்று அடுக்கிக்கொண்டே போனார். பயிர்கள் கருகியதால் அங்கு விவசாயிகள் தற்கொலை செய்தது பற்றி அவர் வாயே திறக்கவில்லை.

தேனியில் கஞ்சா பயிரிடப்படுகிறதா?

 நக்சலைட் நடவடிக்கை பற்றி தேனி எஸ்.பி பிரவின்குமார் அபினபு பேசினார். அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா, 'தேனி மாவட்டத்​தில் கஞ்சா செடிகள் பயிரிடப்படுகிறதா?’ என்று கேட்டார். உடனே பிரவின்குமார், 'கஞ்சா பயிரிடுவது தடை செய்யப்பட்டு விட்டது. ஆனால், கேரளாவில் இருந்து கஞ்சா கடத்தப்படுவதால், விற்பனை அதிகமாகி இருக்கிறது. தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். செக் போஸ்ட்களில் கூடுதல் வசதிகள் செய்துகொடுத்தால், முற்றிலுமாகத் தடுக்க முடியும்’ என்றார்.

நான்தான் சொல்லிட்டேனே...

 'சென்னையின் பால் தேவையில் பாதிக்கும் மேல் திருவண்ணாமலைதான் பூர்த்தி செய்கிறது. அந்த அளவுக்குப் பால் உற்பத்தி ஆகும் எங்கள் மாவட்டத்தில் பால் கூட்டமைப்பு ஒன்றை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்’ என்றார் திருவண்ணாமலை கலெக்டர் பிங்காலே விஜய் மாருதி. உடனே செய்து தருவதாக முதல்வர் சொன்னார். அதைக் கலெக்டர் கவனித்தாரா என தெரியவில்லை. மீண்டும் அதே விஷயத்தை கலெக்டர் வலியுறுத்த... 'நான்தான் செய்து கொடுக்கிறேன்னு சொல்லிட்டேனே. கண் டிப்பாக செய்துகொடுக்கிறேன்’ என்றபோது சிரிப்பலை.

 'நீலகிரி மாவட்டம் மலைப் பிரதேசம் என்பதால், ஆசிரியர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் நீலகிரி மாவட்டத்துக்கு மட்டும் கடினமான கேள்விகள் இல்லாமல் தேர்வு நடத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு இரண்டு விதமான உடைகள் வழங்கப்படுகின்றன. இதை மாற்றி அமைக்க வேண்டும்’ என நீலகிரி கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறினார். 'என்ன இரண்டு மாதிரி உடைகளா?’ என ஆச்சர்யமாகக் கேட்டார் முதல்வர். 'சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்குத் தனி உடையும் மற்றவர்களுக்கு வேறு உடையும் உள்ளது’ என்று விளக்கம் கொடுத்தார். 'அப்படிப் பாகுபாடு இருக்கக்கூடாது. இனி ஒரே மாதிரி உடைகள்தான் இருக்க வேண்டும்’ என்றார் ஜெயலலிதா. 'நீலகிரி குளிர்ப் பிரதேசம் என்பதால், மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்கலாம்’ என்று ஆலோசனை சொன்னார் கலெக்டர். ' குளிர் பிரதேசங்களில் மின் விசிறிக்குப் பதில் அடுப்பு கொடுப்பதுபோல நீலகிரிக்கு மட்டும் ஸ்வெட்டர் கொடுக்கலாம்’ என்றார் முதல்வர்.

மக்களுக்குத் தேவையான பல்வேறு கோரிக்கைகளை இந்த மாநாட்டில் கொண்டு​வந்து கொட்டினர் கலெக்டர்கள். ஆனால் 'அம்மா’, 'அம்மா’ என்று இத்தனை பவ்யம் வேண்டுமா?!

- எம். பரக்கத் அலி

படங்கள்: சு.குமரேசன், வீ.நாகமணி