Published:Updated:

விவசாயமும் அன்னியர்களுக்குப் போகிறதா?

பிரதமருக்கு எதிராக விவசாயிகள்

விவசாயமும் அன்னியர்களுக்குப் போகிறதா?

பிரதமருக்கு எதிராக விவசாயிகள்

Published:Updated:

'விவசாயிகள் விவ​சாயத்தை​விட்டு வெளி​யேறி வேறு தொழில்களில் வேலைவாய்ப்பைத் தேட வேண்டும். விவசாயத்தைக் குறைவான மக்கள் சார்ந்து இருக்கும்போதுதான் விவசாயத்தின் மூலம் வரும் தனிநபர் வருமானம் குறிப்பிடத்தக்க அளவிலும், போதுமான அளவிலும் அதிகரிக்கும்’ - இப்படிப் பேசி இருப்பவர் நம் பாரத பிரதமர் மன்மோகன் சிங். பிரதமரின் இந்தப் பேச்சு விவசாயிகள் மத்தியில் கடும் கோபத்தைக் கிளப்பி இருக்கிறது! 

விவசாயமும் அன்னியர்களுக்குப் போகிறதா?
விவசாயமும் அன்னியர்களுக்குப் போகிறதா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காவிரி மீட்புக் குழுவின் தலைவர் பெ.மணியரசன், ''நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தபோதே, விவசாயிகளை வயலில் இருந்து வெளியேற்ற மன்மோகன் சிங் திட்டம் போட்டார். இப்போது அதை வெட்கத்தைவிட்டு பகிரங்கமாகச் சொல்லி இருக்கிறார். அவருடைய எண்ணம் எல்லாம் விவசாயிகளை வெளியேற்றிவிட்டு, அந்த இடங்களை மனைகளாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் பண் ணை​களாகவும் மாற்றுவதுதான். இதற்காகத்தான் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை விவசாயிகளுக்குக் கொடுத்துக்கொண்டே இருக்​கிறார்கள். உதாரணமாக, தானியங்களுக்குப் போதிய விலை கொடுக்காதது, உரக் கம்பெனிகளுக்கும், பூச்சி மருந்துகளுக்கும் மானியத்தைக் கொடுத்து வயலை மலடாக்குவது போன்றவை. மேலும், விவசாயக் கடன்களுக்காக ஜப்தி வரை சென்றனர். இதற்கெல்லாம் அஞ்சி விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டு வெளியேற​வில்லை. அதனால் இப்போது, நேரடியாகவே வெளியேறுங்கள் என்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், நிதிநிலை அறிக்கையில் ப.சிதம்பரமும் இதைக் குறிப்பால் உணர்த்தி இருந்தார். தேசத்தின் ஒட்டு மொத்த விவசாயிகளும் அகதிகளாக அலைய வேண்டும் என்பதுதான் நம் பிரதமரின் எண்ணம்'' என்று வேதனையில் பொங்கினார்.

''போதிய விலை கிடைக்காதது, கந்துவட்டிக் கடனில் மூழ்கியிருப்பது போன்ற காரணங்களால் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்கிறார் பிரதமர். இந்த இரண்டுக்கும் காரணம் யார்... விவசாயிகளா? தேசத்தை ஆளும் அவர்களா? 2006-ல் விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டியின் அறிக்கை​யில், 'விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவைவிட 50 சதவிகிதம் அதிகம் வைத்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்ததை ஏன் இதுவரை செயல்படுத்தவில்லை. அதை மட்டும் செய்திருந்தாலே போதிய விலை கிடைத்து இருக்குமே? விவசாயிகள்கந்து​வட்டிக்குக் கடன் வாங்கியிருக்க மாட்டார்​களே! அவர்கள் செய்யவேண்டிய எதையுமே செய்யாமல் விவசாயத்தின் குரல்வளையை நசுக்கிவிட்டு, எங்களை நிலத்தை விட்டு வெளி யேறச் சொல்வது எந்தவிதத்தில் நியாயம்? இப்படிப்பட்ட நாட்டில் இருக்கிறோம் என் பதே வெட்கமாக இருக்கிறது'' என்கிறார் தமிழக உழவர் முன்னணியின் தலைவர் கி.வெங்கட்ராமன்.

''பொருளாதார மேதையான மன்மோகன் சிங், இப்படி முட்டாள்தனமான கருத்​தைச் சொல்லியிருக்கிறாரே'' என்று கவலைப்படுகிறார் பாலாஜி சங்கர். இவர், ஆஸ்திரேலியாவில் சாஃப்ட்வேர் இன்ஜி​னீயராகப் பணிபுரிந்தவர். விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தால், வேலையை உதறி​விட்டு தமிழ்நாட்டுக்கு வந்து விவசாயம் செய்கிறார். ''விவசாய நாட்டில் விவசாயத்​தை விட்டு வெளியேறுங்கள் என்றால், அத்தனை பேருக்கும் என்ன மாற்றுத் தொழில் வைத்திருக்கிறார் மன்மோகன்? 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் நிறுவனங்களில் அதிகபட்சம் 5,000 பேருக்குத்தான் வேலை

விவசாயமும் அன்னியர்களுக்குப் போகிறதா?

கொடுக்க முடியும். அப்படி வேலை தேடி கிராம மக்கள் நகரங்களை நோக்கி நகர்ந்தால், இப்போதே வீங்கிக்கிடக்கும் நகரங்களால் அதைத் தாங்க முடியுமா? கிராமத்தில் அரிசி, தண்ணீர், காற்று, காய்கறி, கீரை, பால், தயிர், பயிறு போன்றவற்றைக் காசு கொடுத்து வாங்க மாட்டார்கள். நகரத்தில் இவை அத்தனையும் அன்னிய முதலீட்டு நிறுவனங்களிடம் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்றுதான் அரசாங்கம் நினைக்கிறதா?

ஒட்டுமொத்த இந்திய நாட்டுக்கும் சோறுபோடும் விவசாயிகளுக்குத் தேவை​யானவற்றை செய்துகொடுக்க வேண்டியது​தான் நல்ல அரசாங்கத்தின் கடமை. முதலில் தன் கடமையைச் செய்துவிட்டு பிறகு விவ சாயி​களுக்கு ஆலோசனை சொல்லட்டும்'' என்று எச்சரிக்​கிறார்.

காவிரி டெல்டா விவசாயிகள் கூட்ட​மைப்பும் பிரதமரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம், ''ஒவ்​வொரு துறை யாக அன்னியர்களிடம் விற்பனை செய்துவரும் மத்திய அரசு, இப்போது விவசாயத் துறையையும் விலை பேசத் தயாராகிறது. எங்களை நிலத்தில் இருந்து வெளியேறச் சொல்ல எந்தக் கொம்​பனுக்கும் அதிகாரம் இல்லை. அப்படி வெளியேறச் சொல்கிறவர்கள் முதலில் இந்த நாட் டைவிட்டு வெளியேறட்டும். மக்களைக் காப்பாற்றாத மன்னன் இருந்து என்ன பிரயோஜனம்?'' வார்த்தைகளில் கோபம் தெரிக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞான​தேசிகனிடம் பிரத​மரின் பேச்சு பற்றிக் கேட்டோம். ''பிரதமர் அந்த அர்த்தத்தில் பேசி இருக்க ​மாட்டார். விவசாயிகள் மற்ற வேலைகளுக்கும் செல்லவேண்டும் என்றுதான் அவர் பேசியதாக நான் கேள்விப்​பட்டேன். விவசாயிகளுக்கு யாரோ தவறானத் தகவலைச் சொல்லி இருக்கிறார்கள். விவசாயிகளுக்கோ விவ​சாயத்துக்கோ காங்கிரஸ் அரசு எதிரானது கிடையாது'' என்று விளக்கம் கொடுத்தார்.

- கரு.முத்து, படங்கள் எம்.ராமசாமி