Published:Updated:

ஆக.1 போராட்டத்தை நசுக்க அரசு முயற்சி: ஸ்டாலின்

Vikatan Correspondent
ஆக.1 போராட்டத்தை நசுக்க அரசு முயற்சி: ஸ்டாலின்
ஆக.1 போராட்டத்தை நசுக்க அரசு முயற்சி: ஸ்டாலின்

சென்னை, ஜூலை 29,2011

ஆக.1 போராட்டத்தை நசுக்க அரசு முயற்சி: ஸ்டாலின்

ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறவுள்ள திமுகவின் மாநிலம் தழுவிய போராட்டத்தை நசுக்கும் வகையிலேயே கைது நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ##~~##

திருவாரூர் சென்று கொண்டிருந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை போலீஸார் இன்று கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்ட திமுக செயலர் கலைவாணனை ஒப்படைக்குமாறு அவரிடம் போலீஸார் கேட்டனர். அதற்கு, என்ன வழக்கு என்று சொல்லாமல் ஒப்படைக்க முடியாது என்று ஸ்டாலின் வாதிட்டார்.

இதுதொடர்பாக விளக்கம் தர மறுத்த போலீஸாரை கண்டித்து ஸ்டாலின் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவரை போலீஸார் கைது செய்தனர்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் அழகு திருநாவுக்கரசு, மதிவாணன், விஜயன் எம்.பி. உள்ளிட்ட திமுகவினர் சுமார் 300 பேர் கைது செய்து, அவர்களை போலீஸார் திருவாரூருக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர், பிற்பகல் 2 மணியளவில் ஸ்டாலின் உள்பட 300 பேரை போலீஸார் விடுவித்தனர்.

ஸ்டாலின் பேட்டி...

இதனிடையே, இந்தக் கைது நடவடிக்கை தொடர்பாக செய்தித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு ஸ்டாலின் அளித்த தொலைபேசி பேட்டியில் கூறியது:

"எங்களை கைது செய்த போலீஸார், திருவாரூர் அழைத்துச் செல்வதாக கூறியிருக்கின்றனர். அவர்கள் எங்கு கொண்டு செல்கிறார்கள் எனத் தெரியவில்லை.

அதிமுக அரசின் அடக்குமுறை தர்பார் - அராஜக நடவடிக்கைகள் - பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குகளை போடுவது போன்றவற்றை கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுக ஆகஸ்ட் 1-ம் தேதி  மாநிலம் தழுவிய அளவில் அறப்போர் நடத்துவுள்ளது.

அன்றையதினம் மாவட்டத் தலைநகரங்களில் அந்தந்த மாவட்டங்களின் சார்பில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களின் முன்னால் ஆர்ப்பாட்ட அறப் போரினை நடத்தப்படும்.

இந்த போராட்டத்தை நசுக்கும் வகையில் தான் திமுகவினர் மீது இப்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திமுக மூத்த தலைவர்கள் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இது, திமுகவினர் மீதான பழிவாங்கல் மற்றும் பயமுறுத்தும் நடவடிக்கை.

நாங்கள் எதற்கும் அஞ்சுபவர்கள் அலல். வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி போராட்டம் நடைபெறும். அதை வெற்றியடைய விடாமல் செய்யவே அரசு முயற்சிக்கிறது.

காவல்துறையினரை குறை சொல்ல முடியாது. அவர்கள் மேலிடத்தின் உத்தரவின்படியே நடந்துகொண்டிருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலிடம் தான் காரணம்," என்றார் மு.க.ஸ்டாலின்.

மாணவனின் மரணம் காரணமா?

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் தூண்டுதலின் பேரில் கொறடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை வகுப்புக்கு செல்லாமல் திமுகவினர் நேற்று தடுத்துள்ளனர் என்பது குற்றச்சாட்டு.

அந்த மாணவர்களில் சிலர் வலுக்கட்டாயமாக பேருந்தில் ஏற்றி அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த பேருந்து மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் விஜய் என்ற மாணவன் பரிதாபமாக மரணமடைந்தார். இது அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பள்ளி மாணவன் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

இதனைத் தொடர்ந்து திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து திருத்துறைப்பூண்டி அருகே அவரை இன்று கைது செய்ய சென்றுள்ளனர்.

அப்போது, இந்தக் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்ட ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர்.