Published:Updated:

அணைப் பாதுகாப்பு மசோதா: பிரதமருக்கு ஜெ. கடிதம்

Vikatan Correspondent
அணைப் பாதுகாப்பு மசோதா: பிரதமருக்கு ஜெ. கடிதம்
அணைப் பாதுகாப்பு மசோதா: பிரதமருக்கு ஜெ. கடிதம்

சென்னை, ஜூலை 30,2011

அணைப் பாதுகாப்பு மசோதா: பிரதமருக்கு ஜெ. கடிதம்

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 4 அணைகளும் கேரளாவின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடுவதை தடுக்கும் வகையில், அணை பாதுகாப்பு சட்ட மசோதாவில் உரிய திருத்தங்களையும், சேர்க்கைகளையும் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அமைச்சகத்துக்கு உத்தரவுகள் வழங்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். ##~~##

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

"நீர் வளங்கள் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள அணை பாதுகாப்பு சட்ட மசோதா 2010-ன் சில பிரிவுகள் தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக இருப்பதை தங்களுடைய கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

இந்த மசோதாவின் உப பிரிவு 26(1)ல் அனைத்து குறிப்பிடப்பட்ட அணைகளும் அவற்றின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் அணை அமைந்துள்ள மாநிலத்தின் மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் வரம்பிற்குள் வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

'அணை அமைந்துள்ள மாநிலம்' என்று இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டிருப்பதானது ஒரு மாநில அரசுக்கு சொந்தமான மற்றும் அதன் பராமரிப்பில் உள்ள அணை மற்றொரு மாநில பகுதியில் அமைந்திருந்தால் அது அணை பாதுகாப்பில் குறுக்கிடுவதாக அமையும்.

முல்லைப் பெரியாறு அணை, பரம்பிக்குளம் அணை, துணக்கடவு அணை மற்றும் பெருவாரிபள்ளம் அணை ஆகிய இந்த 4 அணைகளும் தமிழக அரசுக்கு சொந்தமானவை. தமிழக அரசால் பராமரிக்கப்படுபவை.

ஆனால் இந்த அணைகள் கேரள மாநில பகுதியில் அமைந்துள்ளன. நாடாளுமன்றத்தில் அணை பாதுகாப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த 4 அணைகளும் கேரளாவின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும். 

அணைகளின் பாதுகாப்பு, செயல்பாடு மற்றும் பராமரிப்பில் இது பல்வேறு நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த பிரச்னைகளை கருத்தில் கொண்டு அணை பாதுகாப்பு சட்ட மசோதாவின் 26(1) மற்றும் 26(2) ஆகிய உப பிரிவுகள் திருத்தப்பட வேண்டும்.

இதேபோல சட்ட மசோதாவின் உப பிரிவு 26 (3), 26 (4) மற்றும் பிரிவு 13 ஆகியவையும் திருத்தப்பட வேண்டும். அத்துடன் சட்ட மசோதாவில் குறுக்கீடுகள் இன்றி அணைகள் பாதுகாப்பை உறுதி செய்ய  26(6) என்ற உப பிரிவையும்  புதிதாக சேர்க்க வேண்டும்.

எனவே, தமிழ்நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்த அணை பாதுகாப்பு சட்ட மசோதாவில் உரிய திருத்தங்கள் மற்றும் சேர்க்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அமைச்சகத்துக்கு உத்தரவுகளை வழங்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.