Published:Updated:

உலகை விட்டுப் பறந்த வினோதினி!

உலகை விட்டுப் பறந்த வினோதினி!

உலகை விட்டுப் பறந்த வினோதினி!

உலகை விட்டுப் பறந்த வினோதினி!

Published:Updated:
உலகை விட்டுப் பறந்த வினோதினி!

ருவேளை, வினோதினி உயிர் பிழைத்து இருந்தால் அவள் இந்தச் 'சமூகத்தின் குழந்தையாகி’, இருப்பாள். ஆம், வினோதினி கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரது நலம் விரும்பிகள் வருங்காலத்தில் ஆசிட்வீச்சு பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களுக்கான உதவி களை மேற்கொள்ளும் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டு இருந்தனர். மேலும் அவரின் சிகிச்சைக்காக

உலகை விட்டுப் பறந்த வினோதினி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெளிநாடுகளில் ஆசிட் வீச்சு பாதிப்புக்கு என்றே இருக்கும் சிறப்பு மருத்துவமனைகள், அமைப்புகள் ஆகிய வற்றையும் தொடர்பு கொண்டனர். எல்லாம் கைகூடி வந்த நிலையில்தான் இப்படி ஒரு சோகம்.

ஆசிட் வகைகளில் வீரியம் மிக்கவை சல்பியூரிக் ஆசிட் மற்றும் நைட்ரிக் ஆசிட். சல்பியூரிக் ஆசிட் இரும்பு உருக்கு தொழிலிலும் நைட்ரிக் ஆசிட் பட்டாசுத் தொழிற்சாலை, உரத் தொழிற்சாலை மற்றும் ராக்கெட் ஏவுகணைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் மிக அதிக வீரியம் கொண்டது நைட்ரிக் ஆசிட்தான். வினோதியின் மீது வீசப்பட்டதும் இதுவே. ஏற்கெனவே உலக அளவிலும் சரி, இங்கும் சரி பல்வேறு பெண்கள் மீது ஆசிட் வன்முறை நிகழ்த்தப்பட்டு இருந்தாலும் வினோதினியின் மீது ஊற்றப்பட்ட ஆசிட்டின் அளவும் கான் சென்ட்டிரேட் எனப்படும் வீரியமும் மிகமிக அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள். அரை லிட்டர் ஹார்லிக்ஸ் பாட்டிலில் முழுமையாக இருந்த நைட்ரிக் ஆசிட்டை மிகநெருங்கி வந்து நேரடியாக முகம் முழுக்க ஊற்றப்பட்டதில் முகத்தில் இருந்து வழிந்த ஆசிட் அவரது உடல் முழுவதும் பரவி இருக்கிறது. வழக்கமான எந்த ஒரு தாக்குதலின்போதும் அனிச்சையாக மூடிக்கொள்ளும் கண் இமைகளும் ஏனோ அன்று திறந்த நிலையில் இருந்ததும் வினோதினியின் துரதிர்ஷ்டமே. அதனால், நேரடியாக ஆசிட் அவரது இரு கண்களையும் தாக்கியது. இதில் அவரது கண்களின் பாப்பாக்களும் உருகி சதைப் பிண்டமாகிப் போயின.

இவை தவிர, வினோதினியின் இடது காது, மூக்கு, முதுகின் பின்புறம், வலது கை, இடுப்பு, மார்பு என அவரது உடலில் 38 சதவிகிதம் ஆசிட் வீச்சில் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. பொதுவாக, நெருப்பு மற்றும் மின் தாக்குதல் போன்றவற்றில் 40 சதவிகிதம் பாதிக்கப்பட்டால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. 30 சதவிகிதம் பாதிப்பு இருந்தால் ஓரளவுக்குச் சமாளிக்க முடியும். அதிலும் நெருப்பு மற்றும் மின் தாக்குதல் வகைக்கும் ஆசிட் வகை தாக்குதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆசிட் தாக்குதல் மனிதனின் மூன்று அடுக்குகள் கொண்ட தோல் படிமங்களையும் ஊடுருவி அடுத்த படிமமான கொழுப்பையும் உருக்கி விடும் தன்மை கொண்டது. வினோதினிக்கு நடந்ததும் அதுவே. வினோதினிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் கூற்றுப்படி வினோதினி உடலின் மேற்பரப்பில் இருந்த புண்கள் 98 சதவிகிதம் ஆறிவிட்டது. ஆனாலும் அவரது தோலின் உட்புறத்தில் இருந்த புண்களின் பாதிப்பு சற்றும் குறையவில்லை. எனவேதான் மேற்புற புண்ணில் இருந்து கண்ணுக்கு தெரியாத சில துணுக்குகள் அழுகி ரத்தத்தில் கலந்துள்ளது. இதனால்,

உலகை விட்டுப் பறந்த வினோதினி!

ஆரோக்கியமான மனிதருக்கு இருக்க வேண்டிய புரோட்டீன் அளவு ஆறு சதவிகிதம் என்பதில் இருந்து வினோதினிக்கு அது ஒரு சதவிகிதமாக குறைந்தது. புரோட்டீன் அளவை அதிகரிக்க அவருக்கு உடனடியாக பிளாஸ்மா எனப்படும் வெள்ளை அணுக்கள் செலுத்தப்பட்டது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ளும் தன்மையை அவரது ரத்த நாளங்கள் இழந்ததைத் தொடர்ந்து அன்று இரவு அவர் அடுத்தடுத்து மூன்று இதயத் தாக்குதல்களை எதிர்கொண்டார். முதல் இரண்டு இதயத் தாக்குதல்களில் இருந்து தப்பியவரால் மூன்றாம் தாக்குதலில் இருந்து மீள முடியாமல் பிப்ரவரி 12-ம் தேதி காலை இறந்து போனார். மறக்க முடியாத மனுஷியாக மாறியும் போனார்.

கேட்டி பைப்பர். லண்டனின் அழகான பிரபல மாடல் அழகி. கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் இவரை பலாத்காரம் செய்த இவரது ஆண் நண்பர் டேனியல் லைன்ச், அப்போதும் ஆத்திரம் அடங்காமல் இரண்டாம் நாளே அவர் மீது சல்பியூரிக் ஆசிட்டை வீசி விட்டார். அதில் அவரது இடது கண்ணை இழந்தார். அவருக்கு 35 சதவிகிதத்துக்கும் அதிகமான புண்கள். ஆசிட் உருச்சிதைவு சிகிச்சை நிபுணரான பாகிஸ்தானைச் சேர்ந்த லண்டன் வாழ் டாக்டர் முகமது அலி ஜாவித், கேட்டி பைப்பரை குணப்படுத்துவதைச் சவாலாக எடுத்துக்கொண்டார். ''எனது 16 ஆண்டுகால பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சையில் இப்படி ஒரு சிக்கலான சிகிச்சையை நான் செய்தது இல்லை...'' என்று சொன்னவர், கேட்டிக்கு மூன்று ஆண்டுகளில் 40 அறுவை சிகிச்சைகளை செய்தார். இன்று, கேட்டி நலமாக இருக்கிறார். அதுமட்டுமல்ல... அவர் தொடங்கிய 'கேட்டி பைப்பர் ஃபவுண்டேஷன்’ இப்போது இதுபோல் பாதிக்கப்படும் பெண்களுக்கான உதவிகளை இலவசமாக செய்து வருகிறது.

மேற்கண்ட தகவல்களை திரட்டிய வினோதினியின் நலம் விரும்பிகள், கடந்த டிசம்பர் மாத இறுதியில் வினோதினியின் உடல் நிலை குறித்து கேட்டி பைப்பருக்கு மெயில் அனுப்பினர். அங்கிருந்து வினோதினியின் உடல்நிலை குறித்த படங்களையும் மருத்துவ அறிக்கையையும் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. நம்பிக்கை ஊற்றெடுக்க... அவையும் மெயில் அனுப்பப்பட்டது. தொடர்ந்து பேசிய கேட்டி பைப்பர், சில சட்ட நடைமுறைகளால் தன்னால் இந்தியாவில் இருக்கும் வினோதினிக்கு நேரடியாக உதவ முடியாது என்று, இன்னொரு அமைப்பை பரிந்துரைத்தார்.

உலகை விட்டுப் பறந்த வினோதினி!

இந்தியா, பாகிஸ்தான், பங் களாதேஷ் பகுதிகளில் நடக்கும் ஆசிட் தாக்குதல்களுக்கு உள்ளாகும் பெண்களுக்காக மருத்துவர் கான் உள்ளிட்டோர் அரபு எமிரேட்ஸில் நடத்தும் 'இஸ்லாமிக் ஃபவுண்டேஷன்’ அது. உடனே, அந்த அமைப்பைத் தொடர்பு கொண்டு வினோதினியின் விவரங்கள் அனுப்பட்டன. அவர்களும் உடனே வினோதினி தரப்பை தொடர்பு கொண்டனர். தமிழகத்தில் முதலுதவி சிகிச்சை முடிந்த பிறகு, துபாயில் இருக்கும் தங்களது மருத்துவமனை அல்லது 'ஆசிட்’ அமைப்பு (Acid survivors international trust - ASIT) மூலம் இந்தியா - புனேவில் இருக்கும் தங்களது அமைப்பின் கிளை மருத்துவமனையில் டாக்டர் எம்.ஹெச்.கோனேரியாவின் குழுவினர் மூலம் இலவச சிகிச்சை அளிப்பதாக உறுதி அளித்து இருந்தனர்.

ஒருபக்கம், வினோதினிக்கு உலகம் முழுவதும் இருந்து நிதி உதவிகள் குவிந்துக் கொண்டிருக்க... இன்னொரு பக்கம் அவருக்கு உலகத்தரமான சிகிச்சைக்கான ஏற்பாடுகள் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில்தான் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி காலை அவர் இறந்து விட்டார். ஒருவேளை, வினோதினி மீண்டு வந்திருந்தால் அவரும் கேட்டி பைப்பர் போல ஓர் அறக்கட்டளையை தொடங்கி இருப்பார். வினோதினியின் மரணத்தின் மூலம் அதற்கான முதல் வித்தை நாம் இழந்து விட்டோம்!

- டி.எல்.சஞ்சீவிகுமார்

படங்கள்: ஜெ.வேங்கடராஜ், செ.சிவபாலன்.

''சட்டங்களும் தண்டனைகளும் வக்கற்றவை!''         

  வினோதினி உடல் மதியம் சுமார் 2 மணி அளவில் தனியார் மருத்துவமனையில் இருந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. குற்றம் நடந்த இடம் காரைக்கால் என்பதால் அங்கிருந்து போலீஸார் வந்து சில சட்ட நடைமுறைகளை முடித்த பிறகே, பிரேதப் பரிசோதனை செய்ய இயலும். எனவே, மறுநாள் 13-ம் தேதி காலை பிரேதப் பரிசோதனை முடிந்து அவரது சொந்த ஊரான திருக்கடையூருக்கு எடுத்துச் சென்று 14-ம் தேதி காலை தகனம் செய்யப்பட்டது.

வினோதினி குறித்து ஜி.ராமகிருஷ்ணன் சொல்லும் கருத்து கவனிக்கத்தக்கது. ''இதை தனி நபர் தாக்குதலாக பார்க்கக்கூடாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் ஒரு பகுதியே இது. நமது சட்டங்களும் தண்டனைகளும் இவற்றைக் கட்டுப்படுத்த வக்கற்றவையாக இருக்கின்றன. நீதிபதி வர்மா குழு, பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க சில பரிந்துரைகளை வழங்கி உள்ளது. அதன்படி, பெண்களுக்கு எதிராக யார் குற்றம் இழைத்தாலும் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதுபோன்ற அரிதினும் அரிதான வழக்குகளுக்கு மரண தண்டனையை அக்குழு பரிந்து ரைத்துள்ளது. எனவே, உடனடியாக வர்மா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்'' என்றார்.

உளவியல் ரீதியாக இந்த விஷயத்தை அணுகுகிறார் உளவியல் நிபுணர் பிரபாகர். ''தனிப்பட்ட ஒரு மனிதன் செய்த கொடுமை, ஒரு சமூகத்தின் மனச்சிதைவையே பிரதிபலிக்கிறது. கோபம், பழி வாங்குதல், ஆசை, காமம் போன்ற குணங்களில், பழி வாங்கும் உணர்ச்சி அதிகம் உள்ள மனிதர்களே இதுபோன்ற கொடூரங்களைச் செய்கின்றனர். தன்னை ஏமாற்றியவரை பழி வாங்கினால் மட்டுமே தங்களின் வாழ்க்கை அர்த்தப்படும் என்பது அவர்களின் உளவியல். அவர்களின் மனதில், குற்றம் செய்தால் உடனே கடும் தண்டனைக்கு ஆளாவோம்; மரண தண்டனை கூட கிடைக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு சட்டங்களில் மாற்றம் தேவை. அதேசமயம் பெற்றோரும் கல்வி நிறுவனங்களும் தங்கள் பிள்ளைகளிடம் சகிப்புத்தன்மை மற்றும் மன்னிக்கும் மனப்பான்மையை கற்றுத்தர வேண்டும்'' என்றார்.

தேசிய அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 47 பெண்கள் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி இருக்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பாக வாழ தகுதி இல்லாத நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் இந்தியா இருக்கிறது என்கிறது இன்னொரு புள்ளி விவரம். இதுபோன்ற சூழலில் வர்மா கமிட்டியின் பரிந்துரைகளை உடனே பரிசீலிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!

- ஜோ.ஸ்டாலின், செ.திலீபன்

''என்னைத் தூக்குல போடுங்க!''

உலகை விட்டுப் பறந்த வினோதினி!

காரைக்கால் சிறையில் இருக்கும் சுரேஷ§க்கு வினோதினி இறந்த தகவலை சிறைக் காவலர்கள் சொன்னார்களாம். அதிர்ந்துப்போன அவன், மயங்கி விழுந்திருக்கிறான். தொடர்ந்து, ''என் வினோவை நானே கொன்னுட்டேன். என்னையும் கொன்னுடுங்க. என்னை உடனே தூக்குல போடுங்க...'' என்று அலறி வருகிறானாம். சுரேஷ்  தற்கொலைக்கு முயலவும் கூடும் என்பதால் அவனுக்குப் பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறார்கள் சிறை அதிகாரிகள்!

- கரு.முத்து