Published:Updated:

தேர்தல் ஆணையர் மீது வழக்கு தொடர அனுமதி கோரி ஜனாதிபதியிடம் தி.மு.க. மனு!

தேர்தல் ஆணையர் மீது வழக்கு தொடர அனுமதி கோரி ஜனாதிபதியிடம் தி.மு.க. மனு!
தேர்தல் ஆணையர் மீது வழக்கு தொடர அனுமதி கோரி ஜனாதிபதியிடம் தி.மு.க. மனு!
தேர்தல் ஆணையர் மீது வழக்கு தொடர அனுமதி கோரி ஜனாதிபதியிடம் தி.மு.க. மனு!

சென்னை: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சாதகமான செயல்பட்ட தேர்தல் ஆணையர் மீது வழக்கு தொடர அனுமதி கோரி தி.மு.க. சார்பில் ஜனாதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், ஜனாதிபதிக்கு அளித்துள்ள மனுவில், ''தமிழ்நாட்டில் 14வது நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியதில் இந்திய தலைமை தேர்தல் ஆணையரும், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரும் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு வழிவகுப்பதற்காக தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் தீயநோக்குடன் மிகவும் ஒருதலைப்பட்சமாகவும், நியாயமற்ற முறையிலும் நடந்துகொண்டனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து அதிமுகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாலும் அக்கட்சி செய்த முறைகேடுகளைக் கட்டுப்படுத்தாததாலும் அது 37 இடங்களில் வென்றுள்ளது. வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் எந்த வேட்பாளருக்கும் அல்லது கட்சிக்கும் பொத்தானை அழுத்தினாலும் அ.தி.மு.க.வுக்கே வாக்கு பதிவாகும் வண்ணம் ‘நினைவு தில்லுமுல்லு’ இயந்திரங்களில் செய்யப்பட்டிருந்தது என்று பல்வேறு தரப்புகளில் சந்தேகம் எழுந்துள்ளது.

அதேபோல், 2011ஆம் ஆண்டு தேர்தலின்போது டி.ஜி.பி.யாக இருந்த லத்திகா சரணை மாற்றிய தேர்தல் ஆணையம், தற்போது ராமானுஜத்தை மாற்றாமல் இழுத்தடித்து தாமதமாக 5.4.2014ல்தான் அனூப் ஜெய்ஸ்வாலை நியமித்தது. இருப்பினும், தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடுவதும், மிரட்டப்படுவதும், பிரசார பணிகளை தடுப்பதும் தொடர்ந்தது. இப்படி தமிழகத்தில் 2 டி.ஜி.பி.க்கள் செயல்பட்டனர். இவை அனைத்தும் அ.தி.மு.க.வுக்கு சாதகம் செய்ய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டன.

தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆளுங்கட்சியினர் தங்குதடையின்றி பணம் விநியோகிக்க வழிவகுக்கப்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் கூட வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டலாம் என்று பிரவீண் குமார் கூறினார். இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவையனைத்தும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையரும், தலைமைத் தேர்தல் அதிகாரியும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக தங்களது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இது ஊழல் தடுப்பு சட்டம் 13 (1) (பீ)ன் கீழ் தண்டணைக்குரிய குற்றமாகும்.

எனவே தாங்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் மீது சட்டப்படி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இந்த விசாரணை முடியும் வரை ‘தவறான இயந்திரங்கள்’ என்று கருதப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிக்கக்கூடாது, பாதுகாக்கப்படவேண்டும். மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அனுமதி வழங்கவும் கேட்டுக்கொள்கிறோம். தலைமைத் தேர்தல் அலுவலர் பிரவீண் குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரைக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்'' எனக் கூறியுள்ளார்.

இந்த கோரிக்கை மனுவை, தி.மு.க. எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி, தங்கவேலு ஆகியோர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து அளித்தனர்.