Published:Updated:

`அம்மா ஆன்மா' என்பது பொய் ஆடிட்டர் சொன்னதே மெய்! பன்னீர் தர்மயுத்தம் 3-ம் ஆண்டு நினைவு தினம்!

ஜெயலலிதா சமாதியில் பன்னீர் தர்மயுத்தம்
ஜெயலலிதா சமாதியில் பன்னீர் தர்மயுத்தம்

துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர், மகன் எம்.பி எனப் பன்னீர்செல்வம் பெற்ற பதவிகள் அனைத்துக்கும் விதையாய் இருந்தது அவர் நடத்திய தர்மயுத்தம். அதன் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று. மூன்றாண்டில் நடந்த அரசியல் நாடகங்களை அலசுகிறது இந்தக் கட்டுரை!

''வெங்கைய நாயுடுவும் குருமூர்த்தியும் செய்த அரசியலால்தான் பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். சசிகலா முதல்வர் ஆக முடியாமல் போனது.''

- துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, ஆடிட்டர் குருமூர்த்தி, ரஜினி ஆகியோர் பங்கேற்ற 'துக்ளக்' பொன் விழாவில்தான் இரண்டு அரசியல் புள்ளிகள் தங்களுக்குள் இப்படிப் பேசிக் கொண்டார்கள்.

துக்ளக் விழாவில் வெங்கைய நாயுடு, குருமூர்த்தி, ரஜினி
துக்ளக் விழாவில் வெங்கைய நாயுடு, குருமூர்த்தி, ரஜினி
http://www.pictureperfect.studio

ஆர்.சி.சக்தி இயக்கத்தில் ரஜினி நடித்து 1979 ஜூன் 29-ம் தேதி வெளியான 'தர்மயுத்தம்' திரைப்படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியது. 38 ஆண்டுகள் கழித்து, ஓ.பன்னீர்செல்வம் நடித்து, மூன்று ஆண்டுகளாக அரசியலில் ஓடிக்கொண்டிருக்கிறது ஜெயலலிதா சமாதியில் அரங்கேறிய `தர்மயுத்தம்! '

ரஜினியின் தர்மயுத்தம்
ரஜினியின் தர்மயுத்தம்

2017 பிப்ரவரி 7-ம் தேதி ஜெயலலிதா சமாதியில் திடீரென பன்னீர்செல்வம் மெளன விரதம் இருந்து, இன்றோடு மூன்றாண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. 'தர்மத்தின் தலைவன்' பன்னீர்செல்வம் இந்த மூன்றாண்டில் என்ன சாதித்தார்?

2016 டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, அமைச்சரவையில் நம்பர் 2-வாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார். டான்சி வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயலலிதா முதல்வர் ஆக முடியாத நிலையில், அந்த வாய்ப்பு இரண்டு முறை பன்னீருக்கு வாய்த்தது. ஜெயலலிதா இறந்த பிறகு, மூன்றாவது லட்டும் கிடைத்தது. அதற்கு முந்தைய இரண்டு லட்டுகளும் தற்காலிகமானவை. ஆனால், ஜெயலலிதா இறந்த பிறகு ஆட்சி முடியும் வரையில், 'முதல்வர் நாற்காலி'யில் அமரலாம் என்கிற பன்னீரின் ஆசையில் வெந்நீரை ஊற்றினார் சசிகலா.

சசிகலா, பன்னீர்
சசிகலா, பன்னீர்

2017 பிப்ரவரி 5-ம் தேதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் அவசரக்கூட்டம் கூடியது. அடுத்த முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல்வர் ஆவதற்காகப் பன்னீர்செல்வம், தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த 48 மணி நேரத்தில் என்ன மாயம் நடந்ததோ ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து 'தர்மயுத்தம்' தொடங்கினார். 'அவமானப்படுத்தப்பட்டேன். கட்டாயப்படுத்தி ராஜினாமா வாங்கினார்கள்'' எனச் சொல்லி சசிகலாவுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினார்.

ஜெயலலிதாவின் மர்ம மரணம்தான் 'தர்மயுத்த'த்தில் சொல்லப்பட்ட முக்கியமான விஷயம். பன்னீர்செல்வம் 'தர்மயுத்தம்' நடத்தியபோது முதல்வராகத்தான் இருந்தார். அப்போது, ''ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்'' எனச் சொன்னார் பன்னீர்செல்வம். 'தர்மயுத்தம்' முடிவுக்கு வந்து, ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணிகள் இணைந்து, பன்னீர்செல்வம் துணை முதல்வர் ஆனார். ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷனை பன்னீர்செல்வம் அமைத்திருக்கலாம்? நினைத்த மாத்திரத்தில் பிரதமர் மோடியைச் சந்திக்கும் பன்னீருக்கு இதற்கு நேரம் இல்லாமல் போய்விட்டதா?

நீதிபதி ஆறுமுகசாமி
நீதிபதி ஆறுமுகசாமி

ஜெயலலிதா சமாதியில் 'தர்மயுத்தம்' நடத்திய பிறகு, ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கோரி 2017 மார்ச் 8-ம் தேதி பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருந்தார். அதன் பின் எடப்பாடி ஆட்சியில் துணை முதல்வர் ஆனார். அதன்பிறகுதான் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகங்களை எழுப்பிய பன்னீர்செல்வத்திடம் விசாரிக்கச் சம்மன் அனுப்பியது ஆறுமுகசாமி ஆணையம். 'தர்மயுத்த நாயகன்' அங்கே ஆஜராகவில்லை. ஒன்றல்ல... இரண்டல்ல 6 முறை விசாரணைக்கு வரச் சொல்லி சம்மன் அனுப்பியும் பன்னீர் போகவில்லை.

விசாரணை ஆணையம் மீது பன்னீர்செல்வம் வைத்திருக்கும் நம்பிக்கை இவ்வளவுதானா? ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு... உண்ணாவிரதம் இருந்து... தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வம், அதற்காக நடக்கும் விசாரணையில் ஆஜர் ஆவதற்குக் காட்டும் அக்கறையா இது? நீதி விசாரணை கேட்டு அன்றைக்குப் பன்னீர் நடத்திய உண்ணாவிரதம், தலைவிக்கா... இல்லை அவர் கட்சியின் தலைமையேற்கவா?

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

காமராஜரை, 'பச்சைத் தமிழன்' எனப் புகழாரம் சூட்டினார் பெரியார். அதற்குப் பிறகு அந்தப் பட்டம் பன்னீருக்குக் கிடைத்தது. ''பச்சைத்தமிழர் பன்னீர்செல்வம்'' என முரசொலியில் எழுதியிருந்தார் கருணாநிதி. அந்த 'பச்சைத் தமிழர்' ஜெயலலிதாவுக்குச் செய்தது பச்சைத்துரோகம் என்று குமுறுகிறார்கள், தர்மயுத்தநாளில் அவரைக் கொண்டாடிய தொண்டர்கள். ஆறு முறை விசாரணைக்கு அழைத்தும் ஆறுமுகசாமி ஆணையத்தில் போய் ஆஜராகாமல் இருக்க.. பன்னீரை யார் தடுத்தார்கள்? நீதி விசாரணை கேட்டவர் அல்லவா முதலில் ஆணையத்துக்குப் போய் ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மங்களைச் சொல்லியிருக்க வேண்டும்.

'தலைவியின் மரணத்தில் மர்மம்' எனச் சொல்லி ஊர் ஊராகப் போய் கூட்டம் போட்டுப் பேசிவிட்டு, விசாரணை ஆணையத்துக்கு மட்டும் போகாமல் மட்டம் போட்டது ஏன்? அங்கே கேட்கப்படும் குறுக்கு விசாரணையில், தான் ஏற்கெனவே சொன்ன விஷயங்கள் அனைத்தும் பொய்யாய்ப் போகும் . அவை அம்பலத்துக்கு வரும் என்ற அச்சமா... தலைவியின் மரணத்தில் இருக்கும் மர்மம் விலகுவது பற்றிக்கூடப் பன்னீர்செல்வத்துக்குக் கவலையில்லை. தன்னுடைய இமேஜுக்கு சரிவு வந்துவிடக் கூடாது என்பதில் அவர் காட்டும் அக்கறை மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

'தர்மயுத்தம்' நடத்திய பிறகு, தன் தலைமையில் ஆட்சி அமைக்க கவர்னர் வித்யாசாகர் ராவிடம் முயற்சிகள் எடுத்தார் பன்னீர்செல்வம். ஆனால், கூவத்தூரில் இருந்த அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பன்னீர் பக்கம் போகவில்லை. எடப்பாடி முதல்வர் ஆனார். சசிகலா தயவால் முதல்வர் ஆன எடப்பாடி ஆட்சி, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது அந்த ஆட்சிக்கு எதிராகப் பன்னீர்செல்வம் வாக்களித்தார். எடப்பாடி ஆட்சிக்கு எதிராக வாக்களித்துவிட்டு, அதே ஆட்சியில் துணை முதல்வராகப் போய் ஒட்டிக்கொள்வது எல்லாம் ''துடைத்து விட்டுப் போவேன்'' என நாஞ்சில் சம்பத் சொன்னதற்கு நிகர்தானே என்று கேட்கிறார்கள் பன்னீரை நம்பிச் சென்று கண்ணீரை அறுவடை செய்தவர்கள்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

நீங்கள் நடத்திய தர்மயுத்தத்தை நம்பி உங்களுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாம் (அப்)பாவிகளா? எடப்பாடி ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் வைத்த 18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்கிறார்கள். எடப்பாடி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து ஓட்டுப் போட்ட பன்னீர்செல்வத்துக்குப் பதவி கொடுக்கிறார்கள். அந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு மட்டும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு எம்.பி சீட் வாங்க முயன்று தோற்றுப்போனார் பன்னீர்செல்வம். ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனுக்கு தென்சென்னை தொகுதியைக் கொடுத்தார் ஜெயலலிதா. ''ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனுக்கு அம்மா சீட் கொடுத்தாங்க... உங்க மகனுக்கு உங்களால் ஒரு தொகுதியை வாங்க முடியாதா? சபாநாயகராக இருந்த ஜெயக்குமாரை அந்தப் பதவியில் இருந்து நீக்கிய பிறகும்கூட அவரால் தன் மகனுக்கு எம்.பி சீட்டை வாங்க முடியும் என்றால், உங்களை முதல்வராக அமர வைத்த அம்மாவிடம் மகனுக்காகச் சீட்டு வாங்கியிருக்க முடியுமே'' எனக் குடும்பத்தினர் பன்னீர்செல்வத்திடம் குமுறினார்கள்.

ரவீந்திரநாத் குமாருடன் பன்னீர்
ரவீந்திரநாத் குமாருடன் பன்னீர்

ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் மகனுக்குத் தேர்தலில் சீட் வாங்க முடியாத பன்னீர்செல்வம், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஆனபிறகுதான் மகனுக்குத் தேனி தொகுதியைப் பெற முடிந்தது. இல்லை எடுத்துக்கொள்ள முடிந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் எல்லாத் தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி தோற்றாலும் தேனியில் மட்டுமே ஜெயிக்கிறது என்றால் அது பன்னீர்செல்வம் போட்ட சூத்திரம்.

ஜெயலலிதா சமாதியில் பன்னீர் தியானம்
ஜெயலலிதா சமாதியில் பன்னீர் தியானம்

ஆட்சிக்கு மேல் 'மெஜாரிட்டி' என்கிற கத்தி தொங்கிக் கொண்டிருந்த சூழலில், நாடாளுமன்றத் தேர்தலைவிட 22 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெல்வதுதான் ஆட்சியாளர்களின் லட்சியமாக இருந்தது. தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளில் கட்சி ஜெயிப்பதைவிட மகன் ஜெயிப்பது பன்னீர்செல்வத்துக்கு முக்கியமாகத் தெரிந்தது. ஆண்டிபட்டியிலும் பெரியகுளத்திலும் அ.தி.மு.க தோற்கிறது. தேனியில் ஜெயிக்கிறது. பன்னீரின் பக்கா அரசியல் இது.

தர்மயுத்தத்தின்போது ''சசிகலா குடும்பத்தினர் கட்சியிலும் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள்'' என்றார் பன்னீர்செல்வம். அவரே தன் மகன் ரவீந்திரநாத் குமாரை எம்.பி ஆக்குகிறார். எடப்பாடி ஆட்சி கவிழ்ந்தாலும் பரவாயில்லை தன் மகன் ஜெயிக்க வேண்டும் எனப் பன்னீர் செய்தது தர்மமா, இல்லை எடப்பாடி ஆட்சிக்கு எதிராக நடத்திய யுத்தமா?

பன்னீரும் எடப்பாடியும்
பன்னீரும் எடப்பாடியும்

''சசிகலா குடும்பம்தான் அ.தி.மு.க-வை 30 வருடம் மறைமுகமாக இயக்கியது'' எனச் சொல்கிறார் பன்னீர்செல்வம், பிறகு எதற்கு அந்தக்கட்சியில் இருந்து கொண்டு பதவிகளை அனுபவிக்கிறார்? மகனை மக்கள் பிரதிநிதி ஆக்கியாச்சு. அடுத்து மத்திய மந்திரி ஆக்குவதற்காக மனதுக்குள் 'தர்மயுத்தம்' நடத்திக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட வேலூர் எம்.பி தொகுதி தேர்தலில் எப்படியாவது ஏ.சி.சண்முகம் ஜெயித்துவிட வேண்டும் எனக் களமாடினார் எடப்பாடி. ஏ.சி.சண்முகம் ஜெயித்தால் மக்களவையில் அ.தி.மு.க-வின் எம்.பி.க்கள் இரண்டாகும். ரவீந்திரநாத் குமாரைவிட ஏ.சி.சண்முகம் சீனியர். ஒரு மாநிலத்தில் உள்ள கூட்டணிக் கட்சி எம்.பி-களான இரண்டு பேருக்கும் மந்திரி பதவி கிடைக்காது. தன் மகனுக்கு ஏ.சி.சண்முகம் போட்டியாக வந்துவிடக் கூடாது என நினைத்தார் பன்னீர். 'ஏ.சி.சண்முகத்தைவிட என் மகன்தான் பி.ஜே.பி-க்கு பெட்டராக இருப்பான்' என்பதை முத்தலாக் தடை மசோதாவில் வெளிப்படுத்தியும்விட்டார் பன்னீர்செல்வம்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

``முத்தலாக் மசோதா பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமைகளையும் நல் வாய்ப்புகளையும் ஈட்டித்தரும். பாலின சமத்துவத்துக்கு, இந்த முத்தலாக் சட்டத் திருத்த மசோதா மேலும் வலுச் சேர்க்கும்'' என நாடாளுமன்றத்தில் பேசினார் ரவீந்திரநாத் குமார். முத்தலாக் மசோதாவை ரவீந்திரநாத் ஆதரித்துப் பேசுவதற்குச் சரியாக 211 நாள்களுக்கு முன்புதான் அந்தச் சட்டத்தை அதே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பி அன்வர் ராஜா எதிர்த்துப் பேசினார். கடந்த நாடாளுமன்றத்தில் எதிர்த்துவிட்டு இந்த நாடாளுமன்றத்தில் ஆதரித்துப் பேசுவது எவ்வளவு பெரிய முரண்பாடு. ஆனால், அப்படிப் பேசுவதற்குக் காரணம் மகனுக்கு மகுடம் சூட்டத்தானே என்று எதிர்க்கட்சியினர் கேட்ட கேள்விக்கு பன்னீரிடமிருந்து இன்று வரை பதில் ஏதுமில்லை.

ஏ.சி.சண்முகத்துக்கு பிரசாரம் செய்யும் எடப்பாடி
ஏ.சி.சண்முகத்துக்கு பிரசாரம் செய்யும் எடப்பாடி

வேலூர் தொகுதியில் அடங்கியிருக்கும் ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம். வேலூரை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காகத்தான் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிமான முஹம்மது ஜானை ராஜ்யசபா எம்.பி ஆக்கினார் எடப்பாடி. முஸ்லிம்களின் ஓட்டுகளைக் குறி வைத்து எடப்பாடி நடத்திய சாணக்கியத்தனத்தை முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு அளித்து சுக்கு நூறாக்குகிறார் பன்னீர்செல்வம். வேலூரில் முஸ்லிம் ஓட்டுகளை எடப்பாடி அறுவடை செய்ய நினைத்தார்; பன்னீரோ பதம் பார்த்தார். பழிவாங்கல்கள், துரோகங்கள் அரசியலின் அரிச்சுவடிகள். ஆனால், சொந்தக் கட்சியின் கொள்கைகளுக்கே குழி வெட்டுவது யாருமே செய்யத் துணியாத செயல்.

சசிகலாவுக்கு எதிராகத் 'தர்மயுத்தம்' தொடங்கியபோது பன்னீர்செல்வத்தின் பக்கம் நின்றவர்கள் பலர் இப்போது அவருடன் இல்லை. அந்தத் தர்மயுத்தத்தின்போது பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க-வின் அடிமட்ட தொண்டன் தொடங்கி, கட்சியின் மூத்த நிர்வாகிகள் வரை பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். அப்போது தனக்கு அரணாக நின்றவர்களுக்கு அங்கீகாரத்தைக்கூடப் பெற்றுத் தர முடியாதவர் பன்னீர்செல்வம். மாறாக அவர்களைப் பலி கொடுத்துதான் துணை முதல்வர் நாற்காலியிலும் ஒருங்கிணைப்பாளர் பதவியிலும் வந்து அமர்ந்தார்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

தர்மயுத்தம் தொடங்கியபோது பன்னீருக்கு முதன்முதலில் ஆதரவு அளித்தவர் மைத்ரேயன். பன்னீர்செல்வத்துக்கு டெல்லியின் கருணையைப் பெற்றுத் தந்து, அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பை வாங்கிக்கொடுத்தவர் மைத்ரேயன். ஆனால், இன்றைக்கு அவரின் நிலை பரிதாபம். நாடாளுமன்றத் தேர்தலிலும் ராஜ்ய சபா தேர்தலிலும் போட்டியிட வாய்ப்புத் தரவில்லை எனப் புலம்பும் நிலைக்கு மைத்ரேயனை தள்ளினார் பன்னீர்செல்வம்.

ஓ.பி.எஸ்ஸுக்காக ஓங்கிக் குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர்கள் மோகன், நத்தம் விசுவநாதன், ஜெயபால், பொன்னையன் ஆகியோர் இப்போது எந்த இடத்தில் இருக்கிறார்கள்? தன்னை வாரித் தூற்றிய அ.ம.மு.க-வில் இருந்து வந்த சசிரேகாவை செய்தித் தொடர்பாளர் ஆக்கினார் எடப்பாடி. சீனியரான பொன்னையனும் அதே செய்தித் தொடர்பாளர் பதவிதான். பன்னீரின் சாதனைக்கு இது ஒன்றே பதம்.

பன்னீர்
பன்னீர்

கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தத் தகுதியானவர் எனச் சொல்லி பன்னீர் பின்னால் திரண்ட 18 எம்.பி-க்களும் 11 எம்.எல்.ஏ-க்களும் கடைசியில் எடப்பாடியிடம்தான் புகலிடம் தேடிப் போனார்கள். தர்மயுத்தத்தின்போது பன்னீர் பக்கம் நின்றவர்கள்... அவருக்காகச் சொத்துகளை விற்று செலவு செய்தவர்கள்... உழைப்பைச் சிந்தியவர்கள் யாருமே முன்னுக்கு வரவில்லை. அவர்களுக்காகப் பன்னீரும் எதையும் செய்யவில்லை. தன் தம்பி ஓ.ராஜாவை மதுரை மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தேர்தலில் தலைவர் ஆக்கினார். மகனை எம்.பி ஆக்கினார். அ.தி.மு.க-வில் சேர விருப்பம் தெரிவித்த தங்க தமிழ்ச்செல்வனை தன் மகனுக்காக தி.மு.க-வுக்கு விரட்டியடித்தார்.

தர்மயுத்தத்தால் பன்னீர்செல்வம் சாதித்தது அனைத்தும் சுயநலமே. பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச் செயலாளராக நியமனம் செய்யும் தீர்மானத்தை வழிமொழிந்துவிட்டு... `சசிகலா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்றுவோம்’ எனப் பொதுக்குழுவில் பொங்கிவிட்டு... தீர்மானத்தைக் கொண்டு போய் சசிகலா கரங்களில் அளித்து, 'தலைவியே தலைமையேற்க வா' எனச் சொல்லிவிட்டு... அவர் பொதுச் செயலாளராகப் பதவியேற்றபோது காலில் விழுந்து வணங்கிவிட்டு... அவர் முதல்வர் ஆவதற்காகப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு... இத்தனையும் 'சின்னம்மாதாசனாக' மாறி நடத்திவிட்டு... ''சசிகலா தலைமையை யாரும் ஏற்கவில்லை’’ என ஜெயலலிதா சமாதியில் பொங்கினார். இவை அத்தனையும் நாடகம்தானே!

சசிகலாவை முதல்வராகத் தேர்வு செய்யும் கூட்டத்தில் சிரித்தபடியே பன்னீர்...
சசிகலாவை முதல்வராகத் தேர்வு செய்யும் கூட்டத்தில் சிரித்தபடியே பன்னீர்...

சசிகலாவை முதல்வராகத் தேர்வு செய்யும் கூட்டத்தில் சசிகலாவுக்குப் பக்கத்தில் சிரித்தபடியே இருந்த பன்னீர்செல்வத்துக்கு அடுத்த இரண்டு நாள்களுக்குள் என்ன நடந்தது? ஏன் ஜெயலலிதா சமாதிக்குப் போனார்? அங்கே யார் சொல்லி நாடகம் போட்டார் என்பதெல்லாம் பிறகு சந்தி சிரித்தது.

மக்களைச் சந்தித்து தர்மயுத்தத்துக்கு ஆதரவு திரட்ட பன்னீர் பயணம் கிளம்பினார். அப்போது காஞ்சிபுரத்தில், ''தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறும்'' என்றார். 'ஆட்சியே போகும்' என்பதுதான் அதன் அர்த்தம். அப்படிப் பேசிவிட்டு அந்த ஆட்சியிலேயே அமர்வதற்கு என்ன பெயர் வைப்பது... மானம், அவமானம் பார்த்தால் 'மாண்புமிகு' ஆக முடியுமா?

பன்னீர்
பன்னீர்

ஓ.பன்னீர்செல்வம் தனி அணி நடத்திக்கொண்டிருந்தபோது, ''அணிகள் இணைவதற்காக, தான் வகிக்கும் நிதியமைச்சர் பதவியையும் விட்டுக்கொடுக்கத் தயார்'' என அமைச்சர் ஜெயக்குமார் சொன்னார். இதற்கு 2017 மே மாதம் திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பதில் கொடுத்தார் பன்னீர்செல்வம்.

''ஜெயக்குமாருக்கு எவ்வளவு திமிர். நிதியமைச்சர் பதவியை விட்டுத் தருவதாகக் கூறுவதற்கு ஜெயக்குமாருக்கு என்ன தகுதி இருக்கிறது'' எனக் காட்டமாகக் கேட்டார் பன்னீர்செல்வம். இப்படிப் பேசிவிட்டு, அந்த நிதி அமைச்சர் பதவியில்தான் இப்போது பன்னீர்செல்வம் உட்கார்ந்திருக்கிறார். நாற்காலிக்காக நாக்கு எத்தனை சுழற்று சுழற்றுகிறது?

விஜயபாஸ்கருடன் பன்னீர்
விஜயபாஸ்கருடன் பன்னீர்

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, நீதி விசாரணை கேட்டு, உண்ணாவிரதம் இருந்தார் பன்னீர்செல்வம். அப்போது பேசிய பன்னீர்செல்வம், ''அம்மா மர்ம மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் வைத்தால் முதல் குற்றவாளியாக விஜயபாஸ்கர் சிக்குவார்'' என்றார். அந்த முதல் குற்றவாளியும் இருக்கும் கேபினெட்டில்தான் இப்போது பன்னீரும் பம்மிக் கிடக்கிறார்.

''ஜெயலலிதாவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்க மறுத்தது யார்?'' எனத் தர்மயுத்த நாள்களில் கேள்வி எழுப்பினார் பன்னீர்செல்வம். அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோது முதல்வர் பொறுப்பைப் பன்னீர்செல்வத்திடம் அளித்திருந்தார்கள். மத்திய அரசிடம் சொல்லி தலைவிக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப் பன்னீர் உதவியிருக்கலாமே.

அணிகள் இணைப்பு
அணிகள் இணைப்பு

அதற்காக அவர் என்ன முயற்சிகள் எடுத்தார்? தன் சகோதரர் உடல் நலம் குன்றி, மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை அழைத்துச் செல்ல மத்திய அரசிடம் பேசி ராணுவ ஆம்புலன்ஸ் விமானத்தைப் பெங்களூரில் இருந்து மதுரைக்கு வரவழைக்கத் தெரிந்த பன்னீர்செல்வத்துக்குத் தலைவி விஷயத்திலும் தலையாய கடமையை நிறைவேற்றியிருக்கலாம். ''அம்மாவின் ஆன்மா உந்தியது. அதனால்தான் அவருடைய சமாதிக்கு வந்து தியானம் செய்தேன்'' எனத் தர்மயுத்தத்தின்போது சொன்னார். அப்போலோவில் இருந்த தலைவியைக் காப்பாற்ற உங்கள் மனசாட்சி ஏன் உந்தவில்லை. அப்போது ஏன் தர்மயுத்தம் நடத்தவில்லை?

ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்துவிட்டு மீடியாவிடம் பன்னீர்செல்வம் பேசியபோது, ''அம்மா மறைவுக்குப் பிறகு முதல்வர் ஆனேன். சில தினங்கள் கழித்து, சசிகலா முதல்வராக வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். செல்லூர் ராஜு, செங்கோட்டையன், தம்பிதுரை ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தினார்கள். ``முதல்வர் பதவியில் என்னை உட்காரவைத்துவிட்டு, எனக்குக் கீழ் இருக்கும் அமைச்சரை வைத்து என்னை முதல்வர் பதவியிலிருந்து விலகச் சொல்வது நியாயமா? என்னை அசிங்கப்படுத்துவதுபோல் பேசினர். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்திவிட்டது'' என்றார். அப்படி அவமானப்படுத்தியவர்கள் இருக்கும் அமைச்சரவையில் போய்ச் சேர என்ன அவசியம் ஏற்பட்டது? ''எனக்குக் கீழ் இருக்கும் அமைச்சரை வைத்து...'' எனப் பேசிவிட்டு அந்தக் கீழே இருக்கும் அமைச்சர்களோடு பன்னீர் இன்றைக்குப் பணி செய்துகொண்டிருக்கிறாரே...

ஜெ. சமாதியில் பன்னீர்
ஜெ. சமாதியில் பன்னீர்

''பிரதமர் மோடி அறிவுறுத்தலால்தான் அ.தி.மு.க இணைப்புக்குச் சம்மதித்தேன்'' என அணிகள் இணைப்புக்கு விளக்கம் கொடுத்தார் பன்னீர்செல்வம். இந்த இடத்தில் அம்மாவின் ஆன்மாவைக் கேட்காமல்... கட்சியினரின் விருப்பத்தை அறியாமல்... இன்னொரு கட்சியின் தலைவர் சொன்னார் என்பதற்காகச் சேர்ந்தேன் எனச் சொல்கிறார்.

''ஊழல் ஆட்சி நடக்கிறது'' எனச் சொல்லி எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து போராட்டம் அறிவிப்பு வெளியிட்டார் பன்னீர்செல்வம். அதற்குள் அணிகள் இணைப்பு நடந்துவிட்டது. ''ஊழல் ஆட்சி'' என்றவர்; அதற்காகத் தேதி குறித்தவர்; ஏன் தடம் மாறினார். அதே ஊழல் ஆட்சியில் ஏன் அமர வேண்டும்?

மோடியுடன் பன்னீர்
மோடியுடன் பன்னீர்

2018 ஜனவரி 17-ம் தேதி மன்னார்குடியில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், ''ஜெயலலிதா மறைந்தபோது அப்போலாவில் மத்திய அரசின் கழுகு ஒன்று இருந்தது. அந்தக் கழுகுக்கு வேண்டப்பட்டவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் எனச் சிபாரிசு செய்தது. அவர் உயர்ந்த பதவிக்குச் சென்றுவிட்டதால் அவர் பெயரைச் சொல்ல முடியாது'' என்றார். அப்போது மத்திய அமைச்சராக இருந்த வெங்கைய நாயுடுதான் அந்தக் கழுகு என்பது பிறகு சொல்லப்பட்டது.

``சசிகலா முதல்வர் ஆவதற்கான பணிகள் நடைபெற்றபோது ஓ.பன்னீர் செல்வம் என்னிடம் வந்தார். 'நீங்கள் எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க' என்று கேட்டேன். நான் கூறியதால்தான் பன்னீர்செல்வம் சமாதியில் அமர்ந்து தியானம் செய்தார். அதன்பிறகு தமிழகத்தில் காட்சிகள் மாறின. ஒரு மாற்றம் ஏற்பட்டது'' என இரண்டு மாதத்துக்கு முன்பு சொன்னார் ஆடிட்டர் குருமூர்த்தி.

குருமூர்த்தி, வெங்கைய நாயுடு, ரஜினி
குருமூர்த்தி, வெங்கைய நாயுடு, ரஜினி
http://www.pictureperfect.studio

வெங்கைய நாயுடுவும் குருமூர்த்தியும் நடத்திய மூவ்வும் அதன்பின் பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தமும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் நடந்த முக்கியமான திருப்புமுனை.

``அம்மாவின் ஆன்மா உந்தியது. அதனால்தான் அவருடைய சமாதிக்கு வந்தேன்'' என்பது பொய்.

ஆடிட்டர் உந்தியதால்தான் பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதிக்குப் போனார்.

அடுத்த கட்டுரைக்கு