Published:Updated:

மாணவர் போராட்டம்...

உடைந்தது அறுபது ஆண்டு மெளனம்!

மாணவர் போராட்டம்...

உடைந்தது அறுபது ஆண்டு மெளனம்!

Published:Updated:
மாணவர் போராட்டம்...

ந்தி ஆட்சி மொழியாக்கப்படுவதை எதிர்த்து தமிழகத்தில் 1965--ல் மாணவர் போராட்டம் வெடித்தது. 'மதுரையில் இரண்டு நாட்களில் அறுபத்து மூன்று முறை தடியடி நடத்தினேன்’ என்று ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர் சொன்னது போல அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் பெருமிதத்துடன் சொன்னார். அன்றைய மொழிப் போர்க் கிளர்ச்சி மூன்று விபரீதமான நகர்வுகளை இந்திய அரசிடம் உருவாக்கியது.

1. இந்திய விடுதலைக்குப் பிறகு, மாநிலங்களில் நுழைந்திராத (காஷ்மீர் தவிர) இந்திய ராணுவம், முதன் முதலாக தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டது. ராணுவத்தின் கரகரத்த பூட்ஸ் ஓசையை தங்களது சொந்த பூமியில் தமிழக மக்கள் கேட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2. முதன்முதலாக தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் தணிக்கை செய்யப்பட்டது. அஞ்சல் நிலையம் ஒவ்வொன்றும் காவல் நிலையமாக மாறியது. போலீஸ்காரர்கள் ஒவ்வொரு கடிதத்தையும் பிரித்துப் படித்தனர்.

3, முதன் முதலாக மாணவர்கள் மீது பாய்ந்தது இந்தியத் தேசியப் பாதுகாப்புச் சட்டம் (Defence of  India rules). மாணவர் தலைவர்கள் 10 பேர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்​பட்டனர்.

##~##

அன்று மாணவர் கிளர்ந்தெழுதலின் பின்னணியில் செயல்பட்டதாகக் கருதப்பட்ட அரசியல் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம், ''போராட்டத்தைக் கைவிடுங்கள்; தமிழினப் பாதுகாப்பும் இந்தி எதிர்ப்பும் எங்கள் கைகளில் பத்திரமாக இருக்கும்'' என மாணவர்களிடம் உறுதியளித்தது. அவர்கள் அடுத்து வரவிருக்கும் 1967 பொதுத் தேர்தலில் அரியணை ஏறுவது நிச்சயம்; இந்தி எதிர்ப்பை நடுவணரசுடன் மோதி முன்னெடுப்பார்கள் என்று அன்றைய மாணவர்களாக இருந்து போராடிய நாங்கள் நம்பினோம்; நம்பி ஏமாந்தோம். அதுதான் உண்மையான வரலாறு.

அதிகாரச் சுகிப்பு மனமும் போர்க்குணமும் ஒருபோதும் ஒன்றிணையாது. ஆட்சியதிகாரம், போராட்டக் குணத்தை புலம்பெயரச் செய்துவிடும் என நாங்கள் அப்போது அறியவில்லை. ஓரிரு ஆண்டுகள் கடந்ததும் அந்த உண்மை எங்களுக்குப் புலனானபோது 1969-ல் இந்தி எதிர்ப்புப் போரில் மீண்டும் தீவிரம்கொண்டோம். அதன் உச்சம் கோவை அரசுப் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள், தனித் தமிழ்நாடு கொடியை ஏற்றி விடுதலை முழக்கம் எழுப்பினர். நாற்காலிக்காரர்கள் மாணவர்களிடம் மறுபடியும் ஓடி வந்தனர். துப்பாக்கிகளோடு அல்ல; துயரம் தோய்ந்த முகத்தோடு; கெஞ்சுதல்

மாணவர் போராட்டம்...

சொற்களோடு. ''இப்போது ஆட்சியில் நாங்கள்தானே இருக்கிறோம்; உங்களின் ரத்தம்தானே! எங்களை நீங்கள் நம்பவில்லையா?' என்றனர். மீண்டும் ஒருமுறை நாங்கள் ஏமாந்தோம். 1965 இந்தி எதிர்ப்பு மௌனிக்கப்பட்டது.

அதிகார அரசியலை மாணவர்களால் இனம் கண்டுகொள்ள முடியாமல்போனாலும், அதிகார மனிதர்களைக் கீழே இறங்கி வரவைக்க மாணவர்களால் முடியும் என்பதை உணர்ந்தோம்.

அன்று அடக்கப்பட்ட மாணவர்களின் உணர்ச்சி இன்று பீறிட்டுக் கிளம்புகிறது.

'தனித் தமிழீழம் அடையும் வரை ஓய மாட்டோம். தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்து’ என்ற முழக்கத்தை இன்றைய மாணவர்கள் முன்வைக்கின்றனர். 'கொலைகாரர்​களின் நாடாக இலங்கை இருந்துவிட்டுப் போகட்டும். கொலை செய்யப்பட்டவர்களின் ஈழப் பகுதி விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்பது மாணவர்களின் கோரிக்கை. 'ஈழத்தைத் தனி நாடாக ஆக்க, ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்’ என்றும் இவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அரசியல்வாதிகள் வைக்கும் போலி வாக்குறுதிகளைப் போல அல்லாமல் தீர்க்கமாக இருக்கின்றன இவர்களது முழக்கங்கள்.

அல்ஜீரிய மக்கள், பிரான்சின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினர். மக்களின் போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தில் சேருமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தது பிரெஞ்சு அரசு. 'அல்ஜீரிய மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக நிற்போம். ராணுவத்தில் சேர மாட்டோம்’ என்றனர் இளைஞர்கள். மிகப்பெரிய எழுத்தாளரும் பிரெஞ்சு அறிஞருமான ழீன் பால் சார்த்தர், 'இளைஞர்களின் இந்த மறுப்பு நியாயமானது. தேசபக்தியின் பெயரால் நடக்க இருந்த மோசடியை முறியடித்து விட்டனர்’ என்று பாராட்டினார். இன்றைய தமிழக மாணவர் போராட்டத்தைக் கவனிக்கும்போது இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

ஈழ மண்ணுக்காக இந்த மாணவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, இலங்கை நட்டுவைத்த உலகக் கொடுமையின் உயரமான விருட்சம் வேறெங்கும் துளிர்விடக் கூடாது என்ற மானுடநேயப் பார்வைகொண்டவர்களாய் மாணவர்கள் வெளிப்படுகிறார்கள்.    .

'ஈழத் தமிழர்க்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் ஓயாது’ எனத் தமிழகம் முழுவதும் பற்றிப் பரவிய தீ 1965-ஐ நினைவூட்டுகிறது. 60 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் துருப்பிடித்துப் போகாத உணர்வுகளைக் காலம் தனது கைகளில் ஏந்தி மாணவர்களிடம் வழங்கியிருக்கிறது. 'போர்க் குற்றம் பற்றிப்பேச அமெரிக்காவுக்கு என்ன அருகதை இருக்கிறது?’ என்று கேட்டதுதான் இன்றைய மாணவர்களின் தீர்க்கதரிசனத்துக்கு உதாரணம்.

மாணவர் போராட்டம்...

சென்னை லயோலா கல்லூரி மாணவர்களின் இந்த முன்மொழிதல்கள் தீப்பொறிகளாக விதைக்கப்பட்டன. அவர்களைத் தொடர்ந்து அனைத்துக் கல்லூரிகளிலும் வெப்பம் தெறித்தது. இதுபோன்ற உணர்வுவசப்பட்ட தன்னெழுச்சிகள் நீண்ட காலம் தாக்குப்பிடிக்காதென்று சில மேல்மட்ட அறிவாளிகள், படிப்பாளிகள் சிந்திக்கிறார்கள். போராட்டத்தின் நோக்கம் சரியாக இருக்கும்போது அந்த வடிவத்தை மேலும் செழுமைப்படுத்த எண்ணாமல், பழி சுமத்த முயலும் போக்கே  இவர்களிடம் வெளிப்படுகிறது. இன்னும் சிலரோ 'கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மட்டுமே ஈடுபடுகிறார்கள். தொழிற்கல்விக் கூடங்கள், பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பெரும்பான்மை மாணவர்கள் போராட்டக் களத்தில் இல்லை’ என்று உட்பெருமிதம் கொள்கிறார்கள்.

1965-ன் தொடக்கத்திலும் இப்படித்தான் நேர்ந்தது. சமூகத்துக்குப் பயன்படாத கல்வி எங்களுக்கு மட்டும் ஏன் என்று மனசாட்சி குத்தியெடுக்க, இந்தத் தொழிற்கல்வி மாணவர்​களும் பின்னர் இணைந்தனர் என்பது வரலாறு. சில காலங்களில் சில பிரச்னைகள் தன்னெழுச்சி​யாகவே மேலெழும். அந்த எழுச்சியை வழிநடத்தத் தலைமையும் அமைப்பும் இருக்கிறதா என்பதே முக்கியமானது. 1965 போராட்டத் தன்னெழுச்சியினூடாக தலைமையும் மாணவர் அமைப்பும் உருக்கொண்டன. பேரணி, வகுப்புப் புறக்கணிப்பு, அஞ்சலக முற்றுகை, ரயில் மறியல் எனக் கட்டம் கட்டமாகத் திட்டமிட்டு அறிவித்​தோம். தை, மாசி, பங்குனி என்ற இளவேனில் மாதங்கள் இந்தப் போராட்டத்தில் கரைந்துபோயின.

இன்றைய போராட்டத்தில் இத்தகையத் தலைமையும் வழிகாட்டுதலும் உருவாகி இருக்கிறது என்று நான் காண்கிறேன். பல பகுதிகளிலும் போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர் அமைப்புகள் அவர்களுக்குள் கலந்துபேசி கோரிக்கைகளுக்கு வடிவம் கொடுக்கின்றனர். பொழுதுபோக்குக் கலாசாரத்துக்கும், போக்கிரித்​தனத்துக்கும் ஆளாகாமல், தன் பிள்ளை நேர்மைகொண்ட நெஞ்சினராய் நீதிக்குப் போராடுகிறான் என்பதால், பெற்றோரும் பிள்ளை​களின் வசமாகிவிடுகிறார்கள். குடும்பங்களின் ஆதரவும் அவர்களுக்குக் கிடைத்தது. இதன் முன்னுதாரணம் 1967 பொதுத் தேர்தலில் சாட்சியமாகியது.

மாணவர் போராட்டம்...

போராடும் மாணவ சக்தியை ஒருபோதும் ஆட்சியாளர்களாலோ ஆதிக்கச் சக்திகளாலோ அடக்கிவைக்க முடியாது. ஆனாலும் மயக்கிவைக்க பல்வேறு வழிகளைக் கையாளுகிறார்கள். 60 ஆண்டு நெடிய மயக்கநிலை உடைந்திருக்கும் காலம் இது. மாணவர்களின் எழுச்சியை வெறுமனே ஈழத் தமிழர்களுக்கான குரலாக மட்டும் பார்த்துவிடக் கூடாது. அதன் பெயரால் அவர்கள் அரசியல் உணர்வும் பெற்றுள்ளனர். அது வளர்த்தெடுக்கப்பட வேண்டியது. தமிழக மாணவர்களின் எழுச்சியை உலகின் கவனத்துக்கு எடுத்துச்செல்லும் ஊடகங்கள், குறிப்பாக வடஇந்திய ஊடகங்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கின்றன. டெல்லி மாணவி பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதன் தொடர்பில் டெல்லி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை, வட இந்திய ஊடகங்கள் உலகின் கவனத்துக்குக் கொண்டுசென்றன. ஈழத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் சிங்கள ராணுவத்தால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டதை, இன்றும் வன்புணர்ச்சிக் கொடுமை தொடர்வதை வடக்கிலும், கிழக்கிலும் 90 ஆயிரம் விதவைகள் வதைபடுவதை வட இந்திய ஊடகங்கள் கண்டுகொள்வதே இல்லை. அமெரிக்க அரசியலைப் புரிந்துகொண்ட மாணவர்களுக்கு இது புரியாமல் இருக்காது.

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்ற நாங்கள், அப்போது 20-களில் இருந்தோம். இப்போது 60-களில் நிற்கிறோம். இன்று களம் கண்ட மாணவர்கள் 20-களில் நிற்கிறார்கள். 20-களிலேயே வெல்வார்கள். களத்தில் நிற்கும் மாணவர்களுக்கு நாங்கள் சொல்வது இதுதான்;

'போராடுவதற்காகக் கற்றுக்கொள். கற்றுக்கொள்​வதற்காகப் போராடு.’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism