Published:Updated:

அடங்காத மாணவர் போராட்டங்கள்!

அமைதியானது ஜெனிவா...

##~##

ழத் தமிழ் மக்களுக்காக​தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தீவிரமாக இருந்தாலும்... திருச்சி சட்டக் கல்லூரி மற்றும் பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி மாணவர்கள் 10 நாட்களைக் கடந்தும் போராட்டத்தை விடாப்பிடியாகத் தொடர்ந்தனர்.   

திருச்சி திகுதிகு...

சுட்டெரிக்கும் வெயில், தணலாய் கொதிக்கும் தரை, இவற்றைப் பொருட்படுத்தாமல் மார்ச் 12 அன்று தரையில் ஒரு துணி விரிப்பைப் போட்டு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள். அவர்கள் போராட்டத்தைத் தொடங்கியபோது, 'ஓரிரு நாளில் முடித்துவிடுவார்கள்’ என அனைவரும் எதிர்பார்த்தனர். 13 தினங்கள் தொடர்ந்த உண்ணாவிரதப் போராட்டத்தைப் பார்த்து அரசியல் இயக்கத் தலைவர்கள் அசந்தேபோனார்கள். வைகோ, நெடுமாறன், திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை போனில் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவித்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தை மார்ச் 24 அன்று மாலை முடித்துக்கொண்டு, போராட்டத்தை வேறு வடிவில் எடுத்துச் செல்லப்போவதாக அறிவித்துள்ளனர்.

அடங்காத மாணவர் போராட்டங்கள்!

அன்று திருச்சியில் கூடிய தமிழக அளவிலான தமிழீழத்துக்கான மாணவர் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் இந்த மாணவர்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால், உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ள முன்வந்தனர். ஆர்.டி.ஓ., போலீஸ் துணை கமிஷனர், கல்லூரி முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் கேட்டுக்கொண்டபோதெல்லாம் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்த மாணவர்கள், சக மாணவர்களின் வேண்டுகோளுக்கு மட்டும் மனம் இறங்கினர்.

''உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் வெயிலில் வாடுகிறார்களே என்பதற்காக, ஷாமியானா பந்தலுக்கு ஏற்பாடு செய்தோம். ஆனால், அதற்கு வாடகை கொடுக்க காசு இல்லாததால், ஏழாம் நாளே பந்தலைப் பிரித்துச் சென்றுவிட்டார்கள். எந்தக் கட்சியினரிடமும் காசு வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததால், கடும் வெயிலைப் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தோம்'' என்றார் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பாரதி லிங்கம். அவரே தொடர்ந்து, ''மே 1-ம் தேதிக்குள் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை இந்திய அரசு அகற்ற வேண்டும் அப்படி செய்யத் தவறினால், மாணவர் சக்தி அந்த அலுவலகத்தை அகற்றும்'' என்று எச்சரித்தார்.

அடங்காத மாணவர் போராட்டங்கள்!

நெல்லை விடாப்பிடி...

பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி மாணவர்கள் 25 பேர், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள திலீபன் அரங்கில் கடந்த 11-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். 5-வது நாள் அதனை தொடர் உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றி, தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள்  உண்ணாவிரதத்தில் அமர்ந்தனர். தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு என்கிற பெயரில் போராடிய இவர்களுக்கு ஆதரவாக நகரில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் போராட்டம் நடத்தினர். 10 நாட்களாகத் தொடர்ந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க 20-ம் தேதி முடிவுக்கு கொண்டுவந்தனர்.பல்கலைக்கழகத் தேர்வுகள் தொடங்கிவிட்ட நிலையில், 'கல்வி பாதிக்காத வகையில் அடுத்தக் கட்டப் போராட்டம் தொடரும்’ என்று அறிவித்துள்ளனர். அந்தப் போராட்டங்களாவது இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதோர் விடிவை ஏற்படுத்தித் தரட்டும்!

- ஆண்டனிராஜ், அ.சாதிக் பாட்ஷா

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், எல்.ராஜேந்திரன்