Published:Updated:

திமுக ஆட்சி குறித்த வைகோ பேச்சில் உண்மை வெளிவந்திருக்கிறது: கருணாநிதி

திமுக ஆட்சி குறித்த வைகோ பேச்சில் உண்மை வெளிவந்திருக்கிறது:  கருணாநிதி
திமுக ஆட்சி குறித்த வைகோ பேச்சில் உண்மை வெளிவந்திருக்கிறது: கருணாநிதி
திமுக ஆட்சி குறித்த வைகோ பேச்சில் உண்மை வெளிவந்திருக்கிறது:  கருணாநிதி

சென்னை: தமிழகத்தில், தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது என்று வைகோ பேசி இருப்பதற்கு கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பூந்தமல்லியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது என்றும், தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றும் பேசியிருக்கிறாரே?

உண்மை வெளி வந்திருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான முல்லைக் கொடியை தமிழக அதிகாரிகள் கேரள வனத்துறைக்குத் தாரை வார்த்து விட்டதாக பெரியாறு அணை மீட்புக் குழுவினர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்களே?.

கடந்த 3 ஆண்டுகளாகத் தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாரும் முல்லைக் கொடிக்குச் செல்லவில்லை. இதைச் சாதகமாக ஆக்கிக்கொண்ட கேரள வனத்துறையினர் முல்லைக்கொடிப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் முல்லைக் கொடிக்குச் சென்ற தமிழக அதிகாரிகளை கேரள வனத்துறையினர் கைது செய்வோம் என்று மிரட்டி உள்ளனர். இது கண்டனத்திற்குரியது. கண்காணிப்புக் குழு நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றெல்லாம் நாதன் கூறியிருக்கிறார். இதுபற்றி கடந்த மாதமே நான் குறிப்பிட்டிருந்தேன்.

நெய்வேலி நிலக்கரி நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறதே?

பணி நிரந்தரம் உட்பட 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். தற்போது, 5 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் பிரச்னை முடியவில்லை. நேற்றைய தினம் என்.எல்.சி. தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியலிலே ஈடுபட்டு, சுமார் ஆயிரம் பேர் கைதாகியிருக்கின்றனர். கடந்த 3 ஆம் தேதி இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்கள். நிர்வாகத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் போராட்டத்துக்குத் தடை உத்தரவு பெற்ற போதிலும், அதையும் மீறி 15வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. ஆனால், அவர்களின் போராட்டம் பற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

அனைத்து மொழிகளையும் சமமாகப் பாவிக்க வேண்டிய குடியரசுத் தலைவரே, “இந்தி”யைப் பிரபலப்படுத்த வேண்டுமென்று பேசியிருக்கிறாரே?

அதிர்ச்சியூட்டக்கூடிய செய்தி. இந்தியத் தலைநகரில், 14-9-2014 அன்று “இந்தி மொழி தினம்” கொண்டாடப்பட்டுள்ளது. அங்கே பேசும் போதுதான் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, “அரசியல் சாசனப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 21 இந்திய மொழிகளில் தனிச்சிறப்பு வாய்ந்த இடத்தில் இந்தி உள்ளது. இந்தியாவின் அலுவல் மொழியான இந்தியை பிரபலப்படுத்துவதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசின் துறைகள், அமைச்சகங்கள் ஆகியவற்றின் இணைய தளங் கள் விரைவில் இந்தி மொழியிலே உருவாக்கப்படும்” என்றெல்லாம் பேசியதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

அதே நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், “பிரதமர் மோடி வெளிநாட்டுப் பிரமுகர்களைச் சந்திக்கும் நேரங்களில் இந்தியிலேயே பேசுகிறார். ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் அவர் இந்தியில் உரையாற்றுவார். இந்திய மொழிகள் அனைத்துக்கும் தாய் சமஸ்கிருதம். இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகள் சமஸ்கிருதத்தின் சகோதர மொழிகள் ஆகும்” என்று பேசியிருக்கிறார். குடியரசுத் தலைவரின் கருத்து ஏற்புடையதல்ல; உள்துறை அமைச்சரின் கருத்து கண்டனத்திற்குரியது.

பேரறிஞர் அண்ணாவுக்கு “பாரத ரத்னா” விருது வழங்க வேண்டுமென்று பிரதமருக்குக் கடிதம் எழுதி இருந்தீர்களே; பதில் வந்ததா?

கடந்த மாதம் 24ம் தேதியன்று பிரதமருக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்திற்கு 8-9-2014 தேதியிட்டு பிரதமர் எழுதிய பதில் கடிதத்தில், என் கடிதத்தைப் பெற்றுக் கொண்டதாக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. அண்ணாவுக்கு விருது கொடுப்பது பற்றி எந்தவித உறுதிமொழியும் அந்தக் கடிதத்திலே தரப்படவில்லை.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.