Published:Updated:

தைரியமாக ரத்தம் கொடுங்கள்!

கோவில்பட்டி கோரிக்கை

தைரியமாக ரத்தம் கொடுங்கள்!

கோவில்பட்டி கோரிக்கை

Published:Updated:
##~##

விபத்தில் காயம்பட்டவர்களை அள்ளிக்​கொண்டு வந்து போடுகிறது ஆம்புலன்ஸ். ஆஸ்பத்திரியில், 'எப்படியாவது காப்பாற்றுங்க’ என உறவினர்கள் கதறுகிறார்கள். பரிசோதிக்கிற டாக்டர், ''நிறைய ரத்தம் போயிடுச்சு. உடனே ஏற்பாடு பண்ணுங்க'' என்கிறார். நடுக்கத்தில் இருக்கும் அந்த உறவினர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்கள். அந்த இடத்தில், ''ரத்தம்தானே வேணும்..? நான் தருகிறேன்'' என, ஒருவர் தானாகவே முன்வந்து சொன்னால் அவரை 'காக்கும் கடவுளே’ என்றுதானே சொல்வார்கள்? அந்த வேலையைச் செய்வதற்கு ஊருக்கு ஊர் அமைப்புகள் உருவாகி வருகின்றன. 

'அப்துல் கலாம் ரத்த தானக் கழகம்’ என்ற அமைப்பு  ஆபத்துக்கு உதவும் நண்பனாக வளர்ந்து வருகிறது. இதுவரை 14 ஆயிரம் பேருக்கு இந்த அமைப்பு ரத்தம் கொடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த எல்.ராஜேந்திரன் என்பவர் இதற்கான தூண்டுகோலாக இருந்து

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தைரியமாக ரத்தம் கொடுங்கள்!

வருகிறார். ''நான், லாரி டிரைவராக இருந்தபோது திருச்சியில் ஒரு விபத்தில் சிக்கினேன். அங்குள்ள ஆஸ்பத்திரியில் யார் என்றே தெரியாத ஒரு ஹோட்டல் தொழிலாளி எனக்கு ரத்தம் கொடுத்தார். விபத்தில் சிக்குபவர்களுக்கு ரத்தம் எவ்வளவு அவசியம் என்பது அப்போதுதான் புரிந்தது.

அதற்காக அரசையோ, அடுத்தவர்களையோ எதிர்​பார்ப்பதை விட்டுவிட்டு நானே என் அளவில் ரத்தம்கொடுக்க ஆரம்பித்தேன். ஆனாலும் தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் நான் மட்டும் அதைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. கல்லூரி மாணவர்களிடம் போனேன். தியாக உணர்வுள்ள மாணவர்கள் இசைந்தனர். அதனால், எத்தனையோ பேர் உயிர் பிழைத்தனர். அந்த சந்தோஷம் என்னை மேலும் மேலும் ஊக்கப்படுத்தியது. நான் முழு நேர சேவையாக இதில் இறங்கினேன். சந்திரசேகர், கனகராஜ் உள்ளிட்ட சில நண்பர்களோடு இணைந்து 'அப்துல் கலாம் ரத்த தானக் கழகம்’ என்ற அமைப்பை உருவாக்கினேன். 24 மணி நேரமும் உதவக் காத்திருக்கிறேன். எங்களுடைய ஆர்வத்தைப் பார்த்த கலெக்டர், மாவட்ட மருத்துவ இணை இயக்குநருக்குப் பரிந்துரைத்ததன் பேரில், அரசு ஆஸ்பத்திரியில் ஒரு பகுதியில் நாங்கள் அலுவலகம் வைத்துக்கொள்ள அனுமதி தந்தனர். கடந்த 2002 முதல் இதுவரை எந்தவித தொய்வும் இல்லாமல் பலருக்கு உதவிசெய்து வருகிறோம். உதவும் நோக்கமுள்ள மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் பலரும் ரத்தம் கொடுக்கிறார்கள். ஆண்டுக்கு 1,500 பேருக்கு மேல் எங்கள் அமைப்பு மூலமாக ரத்தம் கொடுக்கிறார்கள். இதுவரை 14,000 பேருக்கு ரத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 12 மாவட்டங்களுக்கு எங்கள் அமைப்பை விரிவுபடுத்தியிருக்கிறோம். தேவைப்படுவோர் எங்கே இருக்கிறார்களோ, அங்கே கொடுப்பவர்களையும் உருவாக்கி வைத்திருக்கிறோம்.

தைரியமாக ரத்தம் கொடுங்கள்!

போதிய விழிப்பு உணர்வு இல்லாமல்தான் ரத்தம் கொடுக்க மக்கள் தயங்குகிறார்கள். ரத்தம் கொடுப்பது உடலுக்கு நல்லதுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அரசு, விழிப்பு உணர்வு விளம்பரங்களைச் செய்ய வேண்டும். இதுவரை 54 தடவை நானே ரத்தம் கொடுத்திருக்கிறேன். அதன் மூலம் நிறையப் பேரைப் பிழைக்கவைத்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. இது மட்டுமில்லாமல் எங்கள் அமைப்பின் சார்பில் நிறைய மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்துள்ளோம். இதை அறிந்து ஆர்வத்துடன் பொதுமக்கள் ரத்தம் கொடுக்க முன்வருகிறார்கள். ஒவ்வொரு மனிதன் மத்தியிலும் அர்ப்பணிக்கிற தன்மை, உதவுகிற எண்ணம் இன்னும் வளர வேண்டும்'' என்றார்.

ஊக்குவிப்போம் நண்பரே.

- எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism