Published:Updated:

தேசிய பாதுகாப்புச் சட்டம்... மீளுமா பா.ம.க.?

ஜெலட்டின் குச்சிகள்... பெட்ரோல் குண்டுகள்... குண்டர் சட்டம்..

தேசிய பாதுகாப்புச் சட்டம்... மீளுமா பா.ம.க.?

ஜெலட்டின் குச்சிகள்... பெட்ரோல் குண்டுகள்... குண்டர் சட்டம்..

Published:Updated:
##~##

மாமல்லபுரத்து சித்திரை முழு நிலவுப் பெருவிழாவின் விளைவுகள் இப்படி பூமராங்காக தங்களைத் தொடர்ந்து சுழற்றியடிக்கும் என்று பா.ம.க-வினர் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா பக்கம் பக்கமாக தங்கள் மீது குற்றப் பத்திரிகை வாசித்தபோதும்கூட, அதைக் கண்டுகொள்ளாமல் விழுப்புரம் ஆர்ப்பாட்டத்துக்குக் கிளம்பிய ராமதாஸைக் கைதுசெய்து கணக்கைத் தொடங்கிய ஜெயலலிதா... சட்டமன்ற விடுதியில் இருந்த காடுவெட்டி குருவில் ஆரம்பித்து, ஜி.கே.மணி, அன்புமணி என்று உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டத் தொண்டர்கள் வரை அள்ளி உள்ளே வைத்தார். அப்படிக் கைதுசெய்யப்பட்ட தலைவர்கள் பலரும் அடுத்தடுத்து ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுவிட, தமிழகமெங்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பொறுப்​பாளர்கள் பலரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்படுகின்றனர். அடுத்து, அவர்களில் ஆறு பேர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்சி அதிரவைத்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேசிய பாதுகாப்புச் சட்டம்... மீளுமா பா.ம.க.?

தேசப் பாதுகாப்புக்கு குந்தகம் செய்தனர் என்று குற்றம்சாட்டி  எந்தவித விசாரணைகளும் தீர்ப்பும் இன்றி  ஒருவருடம் வரை உள்ளேயே வைத்திருக்க வகை செய்கிறது இந்த தேசியப் பாதுகாப்பு சட்டம். இதனால், மாநில அரசின் மீது பா.ம.க. தொண்டர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

வன்னியர் சங்கத் தலைவரும் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு, தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் மூக்கனூர்பட்டியைச் சேர்ந்த சுகேந்திரன் மற்றும் தீர்த்தலிங்கம், காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறன் மற்றும் அந்த ஊராட்சியின் கிளை உறுப்பினர்கள் மாரி, இளங்கோ ஆகிய ஆறு பேரும்தான் இதுவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளவர்கள். இவர்களில் காடுவெட்டி குரு தவிர மீதம் உள்ளவர்கள் அவ்வளவாக வெளியில் தெரியாதவர்கள். கட்சியில் முக்கியப் பொறுப்புக்களில் இல்லாதவர்கள். அப்படி இருக்கும்போது அவர்கள் மீது தேசியப் பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது எப்படி?

சுகேந்திரன் மற்றும் தீர்த்தலிங்கம்

முதலில் சுகேந்திரன் மற்றும் தீர்த்தலிங்கம் ஆகிய இருவரும் என்ன செய்தனர் என்று பார்ப்போம். ராமதாஸ் கைதானதும் மிக அதிகமான எதிர் விளைவுகள் ஏற்பட்ட ஏரியா... சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்தான். இங்கு போக்குவரத்து என்பதே மிகவும் குறைந்துபோனது. சில பகுதிகள் மொத்தமாக முடங்கியது. அப்படி இருக்கும்போது, தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் பகல் நேரத்தில் கொஞ்சம் வாகனப் போக்குவரத்து இருந்ததை அங்குள்ள பா.ம.க. இளைஞர்கள் சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் குழுக்கள் குழுக்களாகக் கிளம்பிப்​போய், போக்குவரத்தை நிறுத்தவும் கடைகளை அடைக்​கவும் செய்தனர். அதில் ஒரு குழுதான் இந்த சுகேந்திரனும் தீர்த்தலிங்கமும். இவர்கள் இருவரும் மூக்கனூர்பட்டியில் இருக்கிற எல் அண்ட் டி கம்பெனியின் யார்டில் காவலாளிகளாக வேலை பார்க்கிறார்கள்.

தேசிய பாதுகாப்புச் சட்டம்... மீளுமா பா.ம.க.?

''ராமதாஸ் கைதுக்கு எப்படி எதிர்ப்பைத் தெரிவிப்​பது என்று யோசித்த இவர்கள், தங்கள் பகுதியில் எளிதாகக் கிடைக்கும் ஜெலட்டின் குச்சிகள் கொஞ்சமும் பாறைகளைப் பிளக்கப் பயன்படுத்தப்படும் வெடிமருந்து கொஞ்சமும் வாங்கிக்கொண்டனர். கருத்தான்குளத்தில் இருக்கும் ஒரு சிறிய பாலத்தை வெடிவைத்துத் தகர்க்கத் திட்டமிட்டனர். நல்லவேளை... அனுபவம் இல்லாததால், அவர்கள் முயற்சி தோல்வியில் முடிந்தது. கொஞ்சம் சத்தமும் நிறையப் புகையும்தான் வந்தது. ஒன்றிரண்டு கல் சிதறியதே தவிர, பாலத்துக்கு ஒன்றும் ஆகவில்லை. விடியலில் அங்குகிடந்த ஜெலட்டின் குச்சிகள், பாலத்தைத் தகர்க்க நடந்த முயற்சிகளை எங்களின் கவனத்துக்குக் கொண்டு​வந்தது'' என்கின்றனர் மொரப்பூர் போலீஸார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்.பி-யான ஆஸ்ரா கர்க், தீவிர விசாரணை நடத்தி சுகேந்திரனையும் தீர்த்தலிங்கத்தையும் கைதுசெய்தார். ஒரு வாரம் கழித்து அவர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்ய கலெக்டர் லில்லிக்குப் பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக்கொண்ட கலெக்டர், கடந்த 8-ம் தேதி அவர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்ய ஆணை பிறப்பித்தார். அன்றே சேலம் சிறையில் இருந்தவர்களிடம் உத்தரவு நகல் அளிக்கப்பட்டது. கட்சியில் எந்த முக்கியப் பொறுப்பிலும் இல்லாத இவர்கள், இதுவரை அடிதடி, வம்பு வழக்கு என்று எதிலும் சிக்காதவர்கள். இப்போதுதான், அரசுப் பேருந்தை சேதப்படுத்தினர் என்று இன்னொரு வழக்கும் அவர்கள் மீது போடப்பட்டுள்ளது.

மாரி, இளங்கோ மற்றும் மணிமாறன்

கடந்த 30-ம் தேதியன்று இரவு தாம்பரத்தில் இருந்து சென்னை சென்ற அரசுப் பேருந்து பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரம் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப் பதிவுசெய்து, தாமல் ஊராட்சித் தலைவர் மணிமாறன் மற்றும் கட்சியின் கிளை உறுப்பினர்கள் மாரி, இளங்கோ உட்பட 11 பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தார். மற்றவர்கள் சாதாரணத் தொண்டர்கள். ஆனால், மணிமாறன், உள்ளாட்சிப் பொறுப்பில் இருந்ததால் அரசுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் பேருந்தை எரித்ததால், அவர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்ச வேண்டும் என்று நினைத்தார் காஞ்சிபுரம் எஸ்.பி-யான சேவியர் தன்ராஜ். கலெக்டர் சித்திரசேனனுக்கு அவர் பரிந்துரை செய்ய... அதை ஏற்றுக்கொண்டார் கலெக்டர். 11-ம் தேதி உத்தரவு வழங்கப்பட, அன்றே திரும்பவும் கைதுசெய்யப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டார் 50 வயதான மணிமாறன். அவர் கைதுசெய்யப்பட்டதற்கு மறுநாள்... மாரி, இளங்கோ மீதும் தேசியப் பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

தேசிய பாதுகாப்புச் சட்டம்... மீளுமா பா.ம.க.?

வன்னியர் சங்கம் ஆரம்பித்தபோதும், பா.ம.க. தொடங்கியபோதும் அதைத் தீவிரமாக ஆதரித்து நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் இந்த மணிமாறன். தி.மு.க. கோட்டையாக விளங்கிய தாமல் பகுதியில் பா.ம.க. கொடியேற வழிவகை செய்தவர். அதனால், தாமல் ஒன்றியச் செயலாளராக உயர்ந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன், பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டதாலும், கட்சியில் இளைஞர்கள் ஆதிக்கம் அதிகமானதாலும், மெள்ள கட்சியை விட்டு ஒதுங்கியிருந்தார். ஆனால், சித்திரை முழுநிலவுப் பெருவிழாவுக்கு முன், குருவை அழைத்துவந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியதுதான் இவரது இப்போதைய கைதுக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்கின்றனர்.

தேசிய பாதுகாப்புச் சட்டம்... மீளுமா பா.ம.க.?

''மாரி, இளங்கோ பற்றி பெரிதாக சொல்​வதற்கு எதுவும் இல்லை. மணிமாறனுடன் இணைந்து செயல்​பட்டதுதான் அவர்கள் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயக் காரணம். தேசியப் பாதுகாப்பு சட்டம் பாயும் அளவுக்கு அவர்கள் வொர்த் இல்லை'' என்கின்​றனர் ஏரியாவாசிகள்.

காடுவெட்டி குரு

முகம் தெரியாத முன்னோடிகள் மீது பாய்ந்த தேசியப் பாதுகாப்பு சட்டம், தமிழகம் முழுவதும் தெரிந்த அதிரடிப் பிரமுகரான காடுவெட்டி குரு மீதும் பாய்ந்தது. இந்த ஆண்டு நடந்த சித்திரை முழு நிலவுப் பெருவிழாவில் பிற சாதியினரை அவமானப்படுத்தும் வகையில் பேசியது, அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டிப் பேசியது, பொதுமக்கள் உயிருக்குக் குந்தகம் விளைவித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்திருந்தனர். ஆனால், இவை இல்லாமல் வேறொரு பழைய வழக்கில்தான் அவரைக் கைதுசெய்து உள்ளே வைத்திருந்தனர். இந்த நிலையில், 'கடந்த ஆண்டு நடந்த விழாவில் சாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையில் குரு பேசியதற்காக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று காஞ்சிபுரம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் துணைச் செயலாளர் கிட்டு கொடுத்த புகாரின் அடிப்படையில், குருவை மீண்டும் கைதுசெய்தனர் மாமல்லபுரம் போலீஸார். இவற்றை எல்லாம் வைத்து அவரை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் அடைக்க கலெக்டருக்கு சிபாரிசுசெய்தார் எஸ்.பி-யான சேவியர் தன்ராஜ். அதன் அடிப்படையில் கலெக்டர் சித்திரசேனன் உத்தரவிட, 10-ம் தேதி மாலை அந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார் குரு.

தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைதாவது குருவுக்கு இது இரண்டாவது முறை. கடந்த தி.மு.க. ஆட்சியில், அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசாவையும், ஆண்டிமடம் எம்.எல்.ஏ-வான சிவசங்கரையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதற்காக இந்தச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தார். பிறகு, தி.மு.க. அரசே வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டதால், மூன்று மாதங்களில் வெளியில் வந்தார்.

இவர்கள் ஆறு பேர் தவிர, இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிர மற்றும் முன்னோடியான பா.ம.க. பிரமுகர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று சொல்லப்படும் நிலையில், இதுகுறித்து கட்சியின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள பா.ம.க. சட்டப் பாதுகாப்புக் குழு தலைவர் வழக்கறிஞர் கே.பாலுவிடம் பேசினோம்.

தேசிய பாதுகாப்புச் சட்டம்... மீளுமா பா.ம.க.?

''அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறினோம் என்றால், அதற்காக ஏற்கெனவே இருக்கும் சட்டப் பிரிவுகளில் வழக்குப்போடுவதுதான் இதுவரை உள்ள நடைமுறை. ஆனால், கருத்துச் சுதந்திரத்தை நசுக்குகிற வகையில் தனி மனித சுதந்திரத்தில் தலையிடுகிற வகையில், இப்படி தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் குண்டர் சட்டத்தின் கீழும் கைதுசெய்வது என்ன நியாயம்? கடந்த காலங்களில் கட்டுப்படுத்தவே முடியாத சட்ட விரோதக் காரியங்களை செய்தவர்கள் மீது வேறு வழியில்லாமல் பாய்ச்சப்பட்ட தேசியப் பாதுகாப்பு சட்டத்தை, இதுவரை எந்த வழக்குகளும் இல்லாத சாதாரண அப்பாவிகள் மீது போடுவதை உள்நோக்கம் கொண்ட செயலாகத்தான் பொதுமக்கள் பார்க்கின்றனர். டெல்லியில் ரயிலை மறித்தனர், பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டனர்,  டெல்லி வந்த மம்தா பானர்ஜிக்கு இடையூறு செய்தனர். அவர்கள் மீதுகூட தேசியப் பாதுகாப்பு சட்டம் போடப்படவில்லை. ஆனால், இங்கே அதுபோன்ற ஒரு செயலையும் செய்யாத நிலையில், ஒரு பா.ம.க-காரன்கூட வெளியே இருக்கக் கூடாது என்று உள்நோக்கத்துடன் மாநில அரசு இப்படி வழக்குகளைப் பாய்ச்சுகிறது. அரசின் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.  இந்த வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்'' என்றார்.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர், சண்முகம், பெருமனந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த எமநாதன், ராமசந்திரன், குமரன், நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்த ரவிசந்திரன், ஆழிவிடைதாங்கி கிராமத்தைச் சேர்ந்த மாதவன் ஆகிய ஏழு பேர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய 13-ம் தேதி மதியம் 2 மணிக்கு மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே உத்தரவிட்டுள்ளார். இதனால், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

'பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசினால். பா.ம.க-வை தடைசெய்யவும் அரசு தயங்காது’ - என்று அடுத்த அதிரடியை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கிளம்பியிருப்பதைப் பார்த்தால், பா.ம.க-வுக்கு மேலும் பல சிக்கல்கள் காத்திருப்பது உறுதி!

- கரு.முத்து, எஸ்.ராஜாசெல்லம், பா.ஜெயவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism