Published:Updated:

இதுவும் ஒரு 'அரசியல்' குடும்பம்!

இதுவும் ஒரு 'அரசியல்' குடும்பம்!

இதுவும் ஒரு 'அரசியல்' குடும்பம்!

இதுவும் ஒரு 'அரசியல்' குடும்பம்!

Published:Updated:
##~##

மூன்று முறை அமைச்சர், நான்கு முறை எம்.எல்.ஏ., மூன்று முறை எம்.பி., தமிழ​கத்தில் ஐந்து முறை ஆட்சியில் இருந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், நேருவை இவருக்குத் தெரியும், இந்திரா காந்தி இவரைப் பார்த்தால், பேசாமல் நகர மாட்டார், வாஜ்பாய்க்கு அனைவரும் சால்வை கொடுத்துச் செல்ல, இவர் மட்டும்தான் அவர் கன்னத்தைத் தட்டினார், முன்னாள் பிரதமர் சந்திரசேகரை, 'சந்தர்’ என்றே அழைப்பார், பெரியார் நிறுத்தச் சொன்ன பிறகும் பேசியவர், அண்ணாவை வைத்துக்கொண்டே அவரது அளவுக்கு மீறிய ஜனநாயகத்தைக் கண்டித்தவர், கருணாநிதி இவரை செல்லப்பிள்ளை என்று சொல்வார், அதே அளவுக்கு எம்.ஜி.ஆராலும் மதிக்கப்பட்டவர்... நாஞ்சிலார். 

இத்தனை பெருமையும் படைத்த நாஞ்சில் மனோகரனின் மனைவி இந்திரா, கடந்த 10-ம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள வீட்டில் மறைந்தார். கருணாநிதி, ஸ்டாலின் தொடங்கி தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் அவரது வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். அவர்கள் அனைவரும் மனோகரனின் வாரிசுகளைத் தேடிவந்து ஆறுதல் சொன்னார்கள். அவர்கள் அனைவருமே சொன்னது, 'இதுக்கு முன்னாடி உங்களைப் பார்த்ததே இல்லையே?’ என்பதுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுவும் ஒரு 'அரசியல்' குடும்பம்!

கடந்த 50 ஆண்டுகளாக அரசியலில் பரபரப்பான வீடாக மூக்காத்தாள் தெரு நாஞ்சில் மனோகரன் வீடு இருந்தாலும், அவரது வாரிசுகள் யாரும் அரசியல் நிழல் படாமல் வளர்ந்திருக்கிறார்கள். மனோகரனுக்கு மினு, பிந்து ஆகிய இரண்டு மகள்களும், கிருஷ்ணன், ஆனந்த் ஆகிய இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.

''அமைச்சராக இருக்கும்போதுதான் நாஞ்சிலார் இறந்தார். பதவியில் இருக்கும் காலத்தில் எம்.எல்.ஏ. இறந்தால் அதற்கு இழப்பீட்டுத் தொகை சட்டசபைச் செயலாளர் வழங்குவார். அதை வாங்குவதற்காக நாஞ்சிலாரின் மகன் கிருஷ்ணன் வந்திருந்தார். அப்போதுதான், 'எங்க அப்பா ரூம் எங்க இருக்கு? அதைப் பார்க்கலாமா?’ என்று கேட்டார். நாங்க கூட்டிட்டுப் போனோம். வெளியில் நின்று பார்த்தவர், கூச்சப்பட்டுக்கிட்டு உள்ளேகூட போகலை’ என்று சொல்கிறார் தி.மு.க-காரர் ஒருவர்.

இதுவும் ஒரு 'அரசியல்' குடும்பம்!

நாஞ்சில் மனோகரன் மூன்று முறை அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். முதல் தடவை மட்டும் அவரது மனைவி இந்திரா பதவி ஏற்பு விழாவுக்கு வந்தாராம். மற்ற இரண்டு முறையும் வரவில்லையாம். அவரது வாரிசுகளும்  விழாக்களில் கலந்துகொண்டது இல்லை. 'நான்தான் மந்திரியா பொறுப்பு எடுத்துக்கப்போறேன். நீங்க எதுக்கு?’ என்று நாஞ்சில் மனோகரன் சொல்லிவிடுவாராம்.

'நாஞ்சிலாருக்கு மூக்காத்தாள் தெருவில் சொந்த வீடும், அண்ணா நகரில் ஒரு சொந்த வீடும் உண்டு. எம்.பி.யாக இருந்ததால் டெல்லியில் ஒரு வீடு வாங்கினார். அந்த வீட்டை விற்று செனாய் நகரில் வாங்கிய ஒரு  வீட்டை மகள்களுக்குக் கொடுத்துவிட்டார். அண்ணா நகர் வீட்டு வாடகை  மட்டும்தான் ஒரே வருமானம். மற்றபடி எந்த தொழில் நிறுவனங்களையும் அவர் காலத்தில் தொடங்கவும் இல்லை. நடத்தவும் இல்லை’ என்கிறார்கள். 'அவர் அமைச்சராக இருந்தபோது எத்தனையோ பேருக்கு உதவி செய்துள்ளார். ஆனால் தனக்கென எதையும் செய்துகொள்ளவில்லை.’ என்கிறார்கள். மகள்கள் இருவரும் இதழியல் படித்தவர்கள். ஒருவர் கனடாவிலும் ஒருவர் சென்னையிலும் இருக்கிறார்கள். மூத்த மகன் கிருஷ்ணன் ஆடிட்டராகவும், இளைய மகன் ஆனந்த் தனியார் நிறுவனத்திலும் வேலை பார்க்கிறார்கள்.

ஓர் அரசியல் பிரமுகர் இறந்தால், அவரது வாரிசுக்கு அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கொடுப்பது வழக்கம். இங்கும் ஒருவர் அரசியல் ஆசையில் வந்து கேட்டிருந்தால் கருணாநிதி தட்டி இருக்க மாட்டார். ஆனாலும் அந்த விருப்பம் இவர்களுக்கு இல்லை. எந்தவிதமான உதவியையும் கேட்டு இவர்கள் வந்ததில்லை என்றும் தி.மு.க. நிர்வாகி ஒருவர் சொல்கிறார்.

ஆனால் இந்தக் குடும்பத்தினர், தி.மு.க-வினருக்கு ஓர் உத்தரவு போட்டிருந்தார்களாம். 'அப்பா இருந்தபோது நீங்கள் எப்படி வந்து போனீர்களோ, அதே மாதிரி வரலாம்... இருக்கலாம்’ என்று சொல்லி தங்களது வீட்டின் முன் அறையை கட்சியினர் தினமும் வந்து உட்கார்ந்து வேலைகள் பார்க்க ஒதுக்கிவைத்துள்ளனர். அந்த அறை தி.மு.க. பகுதிக் கழக அலுவலகம் போலச் செயல்பட்டு வந்துள்ளது. இப்போதும் அப்படித்தான்!

நாஞ்சில் மனோகரன் - இந்திரா திருமணத்தை திருவனந்தபுரத்தில் 1960-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா நடத்திவைத்தார். அதில் கருணாநிதியும் சி.பி.சிற்றரசும் கலந்துகொண்டனர். அந்த நினைவுகளோடுதான் இந்திராவின் உடலுக்கு கருணாநிதி அஞ்சலி செலுத்தினார். 'லேசா உடல்நிலை சரியில்லை’ என்று முதல் நாள் போனிலேயே துக்கம் விசாரித்த கருணாநிதி, மறுநாள் காலையில் போன் செய்து, 'நான் நாஞ்சிலார் வீட்டுக்கு நிச்சயம் வர்றேன்’ என்று சொன்னதும் இந்தக் குடும்பத்தினர் உணர்ச்சிவசப்பட்டனர். 'தாயையும் தந்தையையும் இழந்த குடும்பத்துக்கு தலைவர்தான் எல்லாமுமாக வந்திருந்து ஆறுதல் சொன்னார்’ என்கிறார் நாஞ்சில் மனோகரன் குடும்பத்தில் 40 வருடங்களாக உதவியாளராக இருக்கும் சின்னிகிருஷ்ணன். எல்லோரும் பெரிய தலைவர்களோடு தாங்கள் எடுத்த புகைப்படங்களை மாட்டிவைத்திருப்பார்கள். நாஞ்சில் மனோகரனின் குடும்பம் அதிலும் வித்தியாசமானது.  தன் பி.ஏ. சின்னிகிருஷ்ணனுடன் மனோகரன் இருக்கும் படம், படுக்கை அறையில் அலங்கரிக்கிறது!

- எஸ்.முத்துகிருஷ்ணன்

படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism