Published:Updated:

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கான ம.தி.மு.க.வின் நிறைவு சுற்று மாநில பேச்சு போட்டி!

Vikatan Correspondent
சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கான ம.தி.மு.க.வின் நிறைவு சுற்று மாநில பேச்சு போட்டி!
சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கான ம.தி.மு.க.வின் நிறைவு சுற்று மாநில பேச்சு போட்டி!
சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கான ம.தி.மு.க.வின் நிறைவு சுற்று மாநில பேச்சு போட்டி!

சென்னை: சென்னையில் செப்டம்பர் 21 ஆம் தேதி, கல்லூரி மாணவர்களுக்கான ம.தி.மு.க.வின் நிறைவு சுற்று, மாநில பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

இதுகுறித்து ம.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி கல்லூரி மாணவர்களின் சொல்லாற்றல் திறனை வளர்த்திடும் நோக்கத்தில் இந்த ஆண்டு மூன்று கட்டங்களாகப் பேச்சுப் போட்டியினை நடத்தி வருகிறது. இவ்வாண்டு 1,800 மாணவர்கள் பங்கேற்றனர்.

முதல் கட்டமாக கழகம் அமைப்பு ரீதியாக உள்ள 37 மாவட்டங்களிலும் கடந்த 10.08.2014 அன்றும் அதில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்கள் 10 மண்டலங்களில் 24.08.2014 அன்று நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்றனர். இதில் முதல் மூன்று இடம் பெற்ற 30 மாணவ-மாணவியர் (மாணவியர் 16 பேர் - மாணவர் 14 பேர்) கலந்து கொள்ளும் மூன்றாம் கட்ட நிறைவுப் போட்டி சென்னை, புரசைவாக்கம், கங்காதீஸ்வரர் கோவில் தெரு, கம்மவார் திருமண மகாலில் 21.09.2014 ஞாயிறு காலை 9.30 மணிக்குத் தொடங்கி மாலை 3.00 மணி வரை நடைபெறுகிறது.

இப்போட்டியின் நடுவர்களாக தாம்பரம் கிறித்துவக் கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கு.அரசேந்திரன், மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் முகிலை ராஜபாண்டியன், தியாகராய நகர் ஷாசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நா.உமாகேஸ்வரி ஆகியோர் பொறுப்பேற்று போட்டியினை நடத்தித் தர உள்ளனர்.

போட்டியில் சிறப்புப் பார்வையாளராக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மாணவர் உரைகளைக் கேட்கிறார். துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் ஜி. தேவதாஸ், இமயம் ஜெபராஜ், மாநில மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார், மாவட்டச் செயலாளர்கள் வடசென்னை சு.ஜீவன், தென்சென்னை வேளச்சேரி மணிமாறன், திருவள்ளூர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், காஞ்சிபுரம் பாலவாக்கம் சோமு மற்றும் மாநில, மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

வைகோவின் இலக்கிய உரைகளைத் தொகுத்து விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள ‘வெல்லும் சொல்’ என்ற நூலைப் பேசுபொருளாகக் கொண்டு ‘வைகோவின் வெல்லும் சொல்’ என்ற தலைப்பில் இப்போட்டி நடைபெறுகிறது. ஏழு நிமிடப் பேச்சில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூபாய் ஒரு லட்சம், இரண்டாவது இடம் பெறும் மாணவருக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் மூன்றாவது இடம் பெறுபவருக்கு ரூ.25 ஆயிரம், நான்காவது இடம் பெறுபவருக்கு ஆறுதல் பரிசாக ரூ.10 ஆயிரம் பரிசு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்பரிசுத் தொகையினையும், மண்டல, மாவட்ட அளவில் வென்றோருக்கான ‘நற்றமிழ் நாவரசு’, ‘இளம் சொல்லரசு’, ‘இளம் நாவலர்’ விருதுகள் மற்றும் பாராட்டுப் பட்டயங்களை மதுரை மாநகரில் 12.10.2014 அன்று நடைபெறும் விழாவில் வைகோ பங்கேற்று வழங்குகிறார். மாநிலப் பேச்சுப் போட்டிக்கான ஏற்பாடுகளை மாநில மாணவர் அணிச் செயலாளர் தி.மு.ராசேந்திரன் மற்றும் மாணவர் அணியினர் செய்து வருகின்றனர்" என்று கூறப்பட்டுள்ளது.