Published:Updated:

கல்லால அடிச்சுக் கொன்னுட்டாங்களே பாவிங்க!

தொடரும் மரக்காணம் மரணங்கள்

கல்லால அடிச்சுக் கொன்னுட்டாங்களே பாவிங்க!

தொடரும் மரக்காணம் மரணங்கள்

Published:Updated:
##~##

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பேருந்து தாக்குதலில் நிகழ்ந்த பயங்கரங்களுக்கு அளவே இல்லை.   

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், திருவண்ணாமலையில் பலியான ஹரியானாவைச் சேர்ந்த சக்கர் கான் ஆகியோரைத் தொடர்ந்து வாழப்பாடி அருகே செல்வம் என்ற பயணியும் கல்வீச்சுக்குப் பலியாகி இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 9-ம் தேதி இரவு 12.30 மணிக்கு சிதம்பரத்தில் இருந்து ஆத்தூர், வாழப்பாடி வழியாக சேலம் நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்து மீது வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியில் மர்ம நபர்கள் சிலர் கல் வீசித் தாக்கியதில் செல்வம் என்பவர் உயிரிழந்திருக்கிறார்.

பஸ்ஸில் பயணித்த சக பயணி ஒருவர் நடந்ததை விவரித்தார். ''நான் சிதம்பரத்தில் இருந்து வர்றேன். புவனகிரி பஸ் ஸ்டாண்டுல இவர் ஏறினார். டிரைவருக்கு நான்கு ஸீட்டுக்குப் பின்னால ஜன்னல் ஓரமா உட்கார்ந்தார். வண்டி வாழப்பாடியைத் தாண்டி வந்தபோது திடீர்னு சிலர் கல்லெடுத்து வீசினாங்க. இதில பஸ் கண்ணாடி உடைஞ்சது. செல்வம் கண்ணாடியைத் திறந்துவெச்சு இருந்ததால், கல் நேரா இவர் நெத்தியில்பட்டது. சுருண்டு விழுந்து அலறினார். உடனே, முதல்உதவி செய்து சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோனாங்க. அங்க போன கொஞ்ச நேரத்தில உயிர் போயிடுச்சு'' என்றார்.

கல்லால அடிச்சுக் கொன்னுட்டாங்களே பாவிங்க!

செல்வத்தின் மாமனார் குப்பன், ''என்னுடைய கடைசிப் பொண்ணு ஜோதியை செல்வத்துக்குக் கட்டிக்கொடுத்தேன். செல்வம் ஒரு சித்த மருத்துவரிடம் வேலைக்குப் போயிட்டு இருந்தார். வைத்தியர்கிட்ட யாராவது மருந்து கேட்டா செல்வத்திடம் மருந்தைக் கொடுத்து அனுப்பிவைப்பார். அப்படித்தான் புவனகிரி பக்கத்தில் மருத்து கேட்டாங்கன்னு கொடுக்கப் போயிருக்கிறார். கொடுத்துட்டு வரும்போது ராத்திரி யாரோ பாவிங்க கல் அடிச்சு செத்துப்போயிட்டார். நாங்க என்ன பாவம் செஞ்சோம்? வயித்துப் பொழப்புக்குப் போன எடத்துல இப்படி அடிச்சுக் கொன்னுட்டாங்களே பாவிங்க'' என்று தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

கல்லால அடிச்சுக் கொன்னுட்டாங்களே பாவிங்க!
கல்லால அடிச்சுக் கொன்னுட்டாங்களே பாவிங்க!

பித்துப் பிடித்த மாதிரி உட்கார்ந்திருந்த செல்வத்தின் மனைவி ஜோதி, ''ராத்திரி எட்டு மணிக்கு போன் பண்ணினாரு. 'பையன் சாப்பிட்டானா? பஸ் ஏறிட்டேன். ராத்திரி ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்துடுவேன்’னு சொன்னாரு. விடியற்​காலை நாலு மணிக்கு நர்ஸுங்கதான் போன் பண்ணினாங்க. 'உன் புருஷனுக்கு சீரியஸா இருக்கு’னு சொன்னாங்க. இங்க வந்து பார்த்தா செத்துப்போயிட்டதா சொல்றாங்க. இனி இந்தப் பையனை எப்படிக் காப்பாத்தறது?'' என்று தலையில் அடித்துக்கொண்டு கதறினார்.

பிரேதப்பரிசோதனைக்குப் பிறகு செல்வத்​தின் உடல் அவரது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டிக்குக் கொண்டு​செல்லப்பட்டது. அங்கே பாதுகாப்புக்காக வந்திருந்த போலீஸார் செல்வத்தின் உடலை எரிக்க வேண்டும் என்று வற்புறுத்த... 'எதுக்காக எரிக்கச் சொல்றீங்க? எங்க வழக்கப்படி நாங்க புதைப்போம். செல்வத்தோட குடும்பத்துக்கு அரசாங்கத்துல இருந்து பத்து நாள்ல நிதி கொடுக்கலைன்னா, நாங்க உடலைத் தோண்டி எடுத்துப் போராட்டம் நடத்துவோம்’ என்று உறவினர்கள் கொந்தளித்தனர். போலீஸாரும் விடாப்பிடியாக நிற்க... அங்கே கலவரச் சூழ்நிலை உருவானது. சத்தியமங்கலம் ஆர்.டி.ஓ-வுக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர் சம்பவ இடத்துக்கு வந்தார். 'உங்க குடும்பத்துக்கு முதல்வர் அஞ்சு லட்சம் நிதி ஒதுக்கி இருக்காங்க. அதை வாங்கிக் கொடுக்கவேண்டியது என்னுடைய பொறுப்பு. நீங்க உங்க வழக்கப்படி தாராளமாக அடக்கம் செய்யுங்கள்’ என்று சமரசம் செய்தார். அதன் பிறகே போலீஸார் அமைதியானார்கள். செல்வத்தின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை பாய வேண்டும்.

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: க.தனசேகரன், ரமேஷ் கந்தசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism