Published:Updated:

இனப் பிரச்னையைத் தீர்க்காமல் ஒன்றுபட்ட புரட்சி சாத்தியம் இல்லை!

இனப் பிரச்னையைத் தீர்க்காமல் ஒன்றுபட்ட புரட்சி சாத்தியம் இல்லை!

இனப் பிரச்னையைத் தீர்க்காமல் ஒன்றுபட்ட புரட்சி சாத்தியம் இல்லை!

இனப் பிரச்னையைத் தீர்க்காமல் ஒன்றுபட்ட புரட்சி சாத்தியம் இல்லை!

Published:Updated:
இனப் பிரச்னையைத் தீர்க்காமல் ஒன்றுபட்ட புரட்சி சாத்தியம் இல்லை!

செருப்புக்குத் தகுந்த மாதிரி காலை வெட்டிக்​கொள்ள முடியுமா? தேசிய இனங்கள் குறித்த கொள்கையில் அப்படித்தான் நடந்து​கொள்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'மார்க்சியமும் இந்தியாவில் தேசிய இனப்பிரச்னையும்’ என்ற சிறு நூலை அந்தக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக இருந்த தோழர் பி.டி.ரணதிவே எழுதி வெளியிட்டார். தேசிய இனம், தேசிய இனப்பிரச்னை என்பதற்கு லெனின், ஸ்டாலின் கொடுத்த விளக்கங்கள் அனைத்தையும் நிராகரித்து, தங்களுக்குத் தகுந்த மாதிரி ஒரு வடிவத்தை பி.டி.ரணதிவே கொடுத்துக்கொண்டார்.

'இந்தியாவின் நிலைமைகளில் சுயநிர்ணய உரிமை என்ற கோரிக்கையோ, பிரிந்து செல்லும் உரிமை என்ற கோரிக்கையோ எழுப்பப்படவில்லை. இதற்கான காரணங்கள் மதுரைக் கட்சி காங்கிரஸில் பூரணமாக விவாதிக்கப்பட்டது. அந்தக் கோரிக்கை, அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம், மாநிலங்களுக்குச் சமமான பங்கு, மாநில சுயாட்சி, மீதம் உள்ள அதிகாரங்கள் அனைத்தும் மாநிலங்களுக்கு என்று மேலே கூறப்பட்ட இதர திருத்தங்களைக்கொண்ட கோரிக்கை மூலம் மாற்றியமைக்கப்பட்டது’ என்று பிடி.ரணதிவே கூறுகிறார். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையையே மாநில சுயாட்சி என்ற சொல்லுக்குள் குறுக்கப் பார்ப்பது மார்க்சியத்துக்கே இழுக்கு.

ஓர் இனத்தின் உரிமைப் பிரச்னையை இடப் பிரச்னையாக, ஒரு மாநில அரசாங்கத்தின் நிர்வாகப் பிரச்னையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுருக்கிவிடுகிறது.

சுயநிர்ணய உரிமை வேறு, மாநில சுயாட்சி என்பது வேறு. மார்க்ஸியமும், தேசிய இனப் பிரச்னையும் தொடர்பாக ஸ்டாலின் எழுதிய எந்த வரையறைக்குள்ளும் மார்க்சிஸ்ட் கட்சியின் வியாக்கியானத்தைப் பொருத்திப் பார்க்கவே முடியாது.

'ஒரு தேசம் என்பது, ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய, நிலையான மக்கள் சமூகமாகும். மேற்சொல்லப்பட்ட இந்த எல்லா அம்சங்களும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கும்போதுதான் நாம் ஒரு தேசத்தைக் காண முடியும்’ என்று வரையறை செய்த ஸ்டாலின்,

'எல்லா நாடுகளிலும் தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று சமூக ஜனநாயகம் பிரகடனம் செய்கிறது. சுயநிர்ணய உரிமை என்பது தங்கள் விதியை நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை அந்தந்த தேசிய இனங்களுக்குத்தான் உண்டு என்பதாகும். ஒரு தேசிய இனத்தின் வாழ்க்கையில் வலுக்கட்டாயமாகக் குறுக்கிடுவதற்கோ, அதன் பள்ளிகளையும், மற்ற நிறுவனங்களையும் அழிப்பதற்கோ, அதன் பழக்கவழக்கம் மற்றும் மரபுகளை மீறுவதற்கோ, அதன் மொழியை நசுக்குவதற்கோ, அவர்களின் உரிமைகளை ஒடுக்குவதற்கோ ஒருவருக்கும் உரிமை​யில்லை’ என்றும் எழுதினார்.

பொது மொழி, தொடர்ச்சியான ஆட்சி எல்லை, பொதுவான பொருளியல் வாழ்வு, பொதுப் பண்பாட்டில்

இனப் பிரச்னையைத் தீர்க்காமல் ஒன்றுபட்ட புரட்சி சாத்தியம் இல்லை!

வெளிப்படும் உளவியல் உருவாக்கம் - ஆகிய நான்கையும் தேசிய இனத்தின் சிறப்புக் கூறுகளாக ஸ்டாலின் வரையறை செய்து சுயநிர்ணய உரிமையைக் கொடுக்கிறார். பிச்சைப் பாத்திரம் ஏந்தி ஒரு மத்திய அரசாங்கத்திடம் சலுகை பெறும் மாநில சுயாட்சியாக அதைத் திரிபுவாதம் செய்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஒரு தேசிய இனத்தின் அரசியல் பிரதேசத்தை, மாநிலமாகவும் பிராந்தியமாகவும் குறுக்குகிறது.

தேசிய இனம் எனப் பிரித்துப் பேசுவது, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிக்கு எதிரானதாக நினைத்து அந்தக் கட்சி அப்படிச் செய்திருக்கலாம் என்று சிலர் நினைக்கக்கூடும்.

மேலோட்டமாகப் பார்த்தால், உண்மைதான். பாட்டாளி வர்க்கம் என்பது தேசங்களை அழித்து, சர்வ தேசியங்​களை உருவாக்க விரும்புகிறது. ஆனால், அதை எப்படிச் செய்வது? இன உணர்வைப் பற்றிப் பேசாமல் இருப்பதன் மூலமாக அல்ல. இன ஒடுக்குமுறைக்கான அடிப்படைகளை ஒடுக்கு​வதன் மூலமாக இனப் பிரச்னைகளைத் தீர்த்தாக வேண்டும். அதனால்தான், பாட்டாளி வர்க்கக் கட்சியானது எப்போதும் சிறுபான்மை இனங்களின் உரிமைக்காகவும் வளர்ச்சி குன்றிய தேசங்களின் வளர்ச்சிக்காகவும் நின்று அவற்றை வளர்க்க வேண்டும் என்று லெனினும் ஸ்டாலினும் விரும்பினர்.

175 தேசிய இனங்களை​யும், மலை வாழ் இனங்களையும்​கொண்ட நாடு ரஷ்யா. இந்தியாவைப் போல நான்கு மடங்கு பெரிய நாடு. 'அனைத்து இனங்களுக்கும் பிரிந்துபோகும் தன்மையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை உண்டு’ என்ற பிரகடனம்தான் ஜார் ஆட்சிக்கு எதிராக அனைத்து இனங்களை​யும் ஒன்று திரட்டப் பயன்​பட்டது. புரட்சியை மட்டுமல்ல, இரண்டாம் உலகப் போரையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும் அனைத்து இனங்களும் சேர்ந்தே சோவியத் ஆட்சிக்கு வழங்கியது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டு​களில் எழுந்த தேசிய இனப் பிரச்னையை தீர்க்காமல், ஒன்றுபட்ட சோவியத்துக்காக ஆட்சியாளர்கள் துடித்தபோது பால்டிக், எஸ்தேனியா, ஜார்ஜியா, உக்ரேன், மால​டோவியா, பைலோ ரஷ்யா என்று பல்வேறு இடங்களில் பிரச்னை தலைதூக்கியது. ரஷ்யப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி வேகம் 50 சதவிகிதம் குறைந்ததற்குக் காரணம் அங்கு நடந்த தேசிய இனப் போராட்டங்கள்தான் என்று ஆய்வாளர்கள் எழுதினர். இதனால், 90-களின் தொடக்கத்தில் உடைந்து நின்றது ரஷ்யா. உலகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் இரண்டு தேசங்களில் ஒன்றான ரஷ்யா உடைந்து நொறுங்குவதற்குக் காரணம், தேசிய இனப்பிரச்னையை ஸ்டாலினுக்குப் பிறகு வந்தவர்கள் சரியாக உள்வாங்காததும், மறைத்ததும். இனப் பிரச்னை அனைத்தையுமே யாரோ வெளியில் இருந்து தூண்டிவிடுகிறார்கள் என்ற பீதியைக் கிளப்பி மறைக்கப் பார்த்தனர். இரும்புத் திரையே கிழிக்கப்பட்டது என்பது வரலாறு!

இவை எல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தெரியாதது அல்ல.

இந்திய விடுதலைக்கு முன்னதாகவே 1945 நவம்பரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகவில்லை) வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் பரிபூரண சுதந்திரம் பெற்ற அரசுரிமை அந்தஸ்துடைய அரசியல் நிர்ணயசபை ஏற்பட வேண்டும்’ என்று கூறப்பட்டது. 'நம்மிடையே தோன்றி வரும் வித்தியாசங்களைச் சுட்டிக் காட்டிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் நம்மைப் பிறர் தயவை நாடி நிற்பவர்களாக்கி, சுதந்திர அந்தஸ்தற்றவர்களாக்கி விடுகிறார்கள். ஒரு பகுதியினர், இன்னொரு பகுதியினரை எதிர்த்துக்கொண்டு நிற்கும் நிலைமையில் வைத்துவிடுகிறார்கள். இந்த விஷச் சக்கரத்திலிருந்து விடுவித்துக்கொள்வதற்கு ஒரேயரு வழிதான் உண்டு. நம்முடைய நாட்டு ஜனங்கள் அனைவருக்கும், வெவ்வேறு சுதந்திர அபிலாஷைகொண்ட வர்க்கங்கள் அனைவருக்கும் பரிபூரண சுதந்திர அரசுரிமை உடைய அந்தஸ்து உண்டு என்ற அடிப்படையில் நாம் இந்தச் சுதந்திரப் பாதையைப் பின்பற்றுவதே சரியான வழியாகும்’ என்று அதில் விளக்கம் கூறப்பட்டது.

சுதந்திர இந்தியாவில் சிறுபான்மையோர் பாதிக்கப்படக் கூடாது என்ற உன்னதமான எண்ணத்தில் இந்த முடிவை அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர்கள் எடுத்தனர். சுயநிர்ணய உரிமை தரப்பட வேண்டும். அதைக் கேட்பதற்குத் தார்மீக உரிமை உண்டு. அந்த உரிமை நிராகரிக்கப்படும்போது, போராட வேண்டும் என்பதே அவர்களது அன்றைய நிலைப்பாடு.

1948ம் ஆண்டு பிப்ரவரி 28 முதல் மார்ச் 6 வரை நடந்த கொல்கத்தா மாநாட்டிலும் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன. 'கம்யூனிஸ்ட் கட்சி 1951 முதல் 1958 வரை கட்சியின் அடிப்படைத் திட்டத்தில் பிரிந்துபோகும் உரிமையுள்ள இந்திய தேசிய இனங்களின் அமைப்பாக இந்திய அரசியல் அமைப்பு இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்திய நிலைமையைக் கூர்ந்து கவனித்ததில் பிரிந்து போகும் உரிமையை வலியுறுத்துவது பொருந்தாது என்று முடிவுசெய்தது. பிரிந்து போகும் உரிமையின்றியே மொழி வழி மாநில அமைப்பை நன்கு பயன்படுத்தி அந்த ஒற்றுமையை வளர்க்கக்கூடிய வாய்ப்பையும் கம்யூனிஸ்ட் கட்சி கணக்கெடுத்து இவ்வாறு முடிவு செய்தது’ என்று, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் எம்.ஆர். வெங்கட்​ராமன் எழுதியிருக்கிறார்.

பிரிந்து போகும் உரிமையை இந்தியாவுக்குக் கோருவது பொருந்துமா பொருந்தாதா என்பது நடைமுறை சம்பந்தப்பட்டது. பிரிந்து போகும் உரிமை உண்டா இல்லையா என்பது கொள்கை சம்பந்தப்பட்டது. அத்தகைய சுயநிர்ணய உரிமை ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் உண்டு என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கீகரிக்கிறதா என்பதே முக்கியம்.

அந்த உரிமையைக் கொடுப்பதாலேயே அனைத்துத் தேசிய இனங்களும் தனித் தனி நாடுகளாகத்தான் இருக்க வேண்டும், இந்தியா பிரிந்துவிட வேண்டும், இலங்கை உடைந்துவிட வேண்டும் என்று அர்த்தமல்ல. இதைத்தான் லெனின் அனைவருக்கும் புரியும் மொழியில், 'விவாகரத்து உரிமை வழங்குவதாலேயே குடும்பங்கள் அனைத்தும் உடைந்துவிடவே வேண்டும் என்று சொல்பவனல்ல நான்’ என்று சொன்னார்.

கொள்கைக்கு ஏற்ப நடைமுறைகளை வகுக்காமல், நடைமுறைக்கு ஏற்ற கொள்கைகளை உருவாக்கிக்​கொண்டதால்தான் சுயநிர்ணய உரிமைக்கும் மாநில சுயாட்சிக்குமான குழப்பங்கள் அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இது மார்க்சிய அணுகுமுறை அல்ல.

மார்க்சியம் என்பது ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தை மட்டும் தத்துவார்த்த நெருக்கடியில் இருந்து மீட்பதாக இல்லாமல் ஒடுக்கப்பட்ட அனைத்துத் தேசங்களுக்கும் மாற்றுத் திட்டத்தை வழங்கியது. பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பணிகளில் இருந்தாலும் காலனி ஆதிக்க நாடுகளில் நடந்த புரட்சிகளை மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோர் உன்னிப்பாகக் கவனித்தே வந்தனர். இப்படித்தான் இந்திய விடுதலையையும் பார்த்தனர்.

இந்தியாவில் நடந்தது வர்க்கப் போராட்டமோ, பாட்டாளி வர்க்கப் புரட்சியோ அல்ல. 'இந்தியாவில்கூட புரட்சிகர இயக்கங்கள் வளர்ந்துவருகிறது’ என்று லெனின் சொன்னது, போராட்டங்கள் வேறுவேறாக இருந்தாலும் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதால்தான். அதனால்தான் வளர்ந்த நாடுகளில் நடக்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சியையும் காலனி நாடுகளில் நடக்கும் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் இணைக்க லெனின் விரும்பினார்.

ஆனால் இந்திய மார்க்சிஸ்ட்டுகள், அனைத்துப் போராட்டங்களையும் பிரிவினைவாதம், ஏகாதிபத்தியங்​களின் சதி என்ற இரண்டு வார்த்தைகளைப் போட்டு மூடுகிறார்கள். அதனால்தான், தமிழர் தாயகத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். ஈழம், இனப்படுகொலை என்ற வார்த்தைகளைக் கேட்டாலே, அவர்களுக்கு அலர்ஜியாக இருக்கிறது.

இனப் பிரச்னையைத் தீர்க்காமல் ஒன்றுபட்ட புரட்சி சாத்தியம் இல்லை!