Published:Updated:

அபார்ட்மென்டில் ஒரு நாள்!

அபார்ட்மென்டில் ஒரு நாள்!

அபார்ட்மென்டில் ஒரு நாள்!

அபார்ட்மென்டில் ஒரு நாள்!

Published:Updated:
அபார்ட்மென்டில் ஒரு நாள்!
##~##

ஒட்டுமொத்த சென்னை​யையும் ஒரே நாளில் மிரட்டிவிட்டார் துப்பாக்கி விஜயகர்.     

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடந்தது என்ன?

மதுரையைச் சேர்ந்த தொழில் அதிபர், 46 வயதான விஜயகர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருக்கும் சப்தமாளிகா என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏ பிளாக் முதல் தளத்தில் ஐந்து வருடங்களாகக் குடியிருக்கிறார். குடும்பப் பிரச்னை காரணமாக மனைவியைப் பிரிந்து இங்கு தனியே வசித்துவருகிறார். அவரு​டைய வீட்டின் ஒரு பகுதியை சினிமா, ரியல் எஸ்டேட் தொழிலுக்கு அலுவலகமாகப் பயன்படுத்திவந்தார். இதனால், எந்த நேரமும் அவரது வீடு பரபரப்​பாக இருக்கும். தொழில்ரீதியாக நண்பர்களுக்கு அடிக்கடி வீட்டில் பார்ட்டி கொடுக்கும் பழக்கமும் இவருக்கு உண்டு.  இது, அந்த அபார்ட்மென்ட்வாசிகளுக்குத் தொந்தரவாக இருந்தது. 'விஜயகரை வீட்டைக் காலி​செய்யச் சொல்லுங்கள்’ என்று குடியிருப்போர் நல சங்கத்​தினர் ஃப்ளாட் ஓனரை வற்புறுத்தி​வந்தனர். இந்த விவகாரத்தில் ஃபிளாட் ஓனர் தனக்கு ஆதர​வாக இல்லை என்று தெரிந்து வாடகை கொடுப்பதை நிறுத்தி​விட்டார் விஜயகர். இதையடுத்து, கோர்ட்டுக்குச் சென்றார் ஃப்ளாட் ஓனர். இந்த வழக்கில் மே 25-ம் தேதிக்குள் ஃபிளாட்டை விஜயகர் காலிசெய்ய வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில் 22-ம் தேதி அரங்கேறின பரபரப்பான காட்சிகள்.

அபார்ட்மென்டில் ஒரு நாள்!

காலை 9.00: குடியிருப்போர் நலச் சங்க அலுவலகத்துக்குச் சென்றார் விஜயகர். செயலாளர் ஜார்ஜ் ஆபிரகாமிடம், 'என்னால் யாருக்கும் தொந்தரவு இல்லை என்று கடிதம் தாருங்கள்’ என்று கேட்டார். முடியாது என்று ஜார்ஜ் ஆபிரகாம் மறுக்கவே, அவரை அடிக்கப் பாய்ந்தார். அலுவலக உதவியாளர் குபேந்திரன் அதைத் தடுக்க, அவரை அடித்துக் கீழே தள்ளிவிட்டு, கையில் இருந்த துப்பாக்கியால் மேற்கூரையை நோக்கி இரண்டு முறை சுட்டார். அலுவலகத்தில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினார். பின், அவரது ஃப்ளாட்டுக்குச் சென்று பதற்றத்தோடு உட்கார்ந்தார். இந்தக் களேபரங்கள் குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸாருக்குத் தகவல் செல்ல... அதுகுறித்து விசாரிப்பதற்காக இரண்டு போலீஸார் வந்தனர். விஜயகர் அவர்களைத் திட்டியதோடு, 'வீட்டுக்குள் வந்தால் சுட்டுருவேன். இது எனக்கும் இந்த அபார்ட்மென்ட்வாசிகளுக்கும் உள்ள பிரச்னை’ என்று எச்சரித்தார். இதைக் கேட்டு, விசாரணைக்கு வந்த போலீஸார் குழம்பிபோனார்கள். 'அபார்ட்​மென்ட்டுக்குள் துப்பாக்கியைக் காட்டி ஒரு ஆள் மிரட்டுகிறார்’ என்று தங்கள் உயர் அதிகாரி​களுக்குத் தகவல் கொடுத்துவிட்டு, அங்கேயே காத்திருந்தனர்.  

காலை 10.00: இந்த நேரத்தில் விஜயகரின் பெண் செகரெட்டரி ஒருவர் வழக்கம்போல வேலைக்கு வந்தார். சட்டென்று கதவைத் திறந்து அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டவர், மீண்டும் கதவைப் பூட்டிக்கொண்டார். இந்த நிலையில், 'அபார்ட்மென்ட்டுக்குள் தீவிரவாதி புகுந்து பெண்ணைப் பணயக்கைதியாகப் பிடித்து​வைத்துள்ளாராம்’ என்று வதந்தி பரவி திகிலைக் கிளப்பியது. போலீஸ் உயர் அதிகாரிகள் வந்தனர். தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. விஜய​கரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் போலீஸார். அதற்கு விஜயகர், 'நான் யாரையும் சுட மாட்டேன். பிரச்னையை முடிக்க முடியவில்லை என்றால், என்னை நானே சுட்டுக்கொள்வேன். நான் கூப்பிட்டபோது, யாரும் என்னுடைய பிரச்னையை கேட்கவில்லை. இப்போது வந்து தொந்தரவு செய்கிறீர்கள். பறவைகள் வாழ்ந்த இடத்தில் வீடு கட்டிவிட்டீர்கள். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஊழல் நடக்கிறது. யாரையும் நம்ப முடியவில்லை. உலக அமைதிக்காக மௌன விரதம் இருக்கப்போகிறேன். யாரும் என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் போலீஸாருக்கு அவரது மனநிலை குறித்து சந்தேகம் ஏற்பட்டது.

அபார்ட்மென்டில் ஒரு நாள்!

காலை 11.30: விஜயகருக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கும் அபார்ட்மென்ட் செக்யூரிட்டி பக்ரூதீனிடம் அவரைப் பற்றி விசாரணை நடத்தினர். அதற்கு அவர், ''வாடகை குறித்து மூன்று வருடங்களாகவே பிரச்னை இருக்கிறது. அவர் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சென்னையில் பிரபலமான கல்லூரியில் படித்தவர். டாக்டர்கள், வக்கீல்கள், தொழில் அதிபர்கள் என்று நிறையப் பேர் அவரைப் பார்க்க அடிக்கடி வருவார்கள். அவரோடு இருப்பது அவருடைய செகரெட்டரிதான்'' என்று விளக்கினார். இதற்கு மேல் அவருக்கு எந்தத் தகவலும் தெரியவில்லை. அவ்வப்போது ஜன்னல் அருகே வந்து துப்பாக்கியைக் காட்டி ஆவேசமாக கத்திக்கொண்டே இருந்தார் விஜயகர். 'நான் யாரையும் சுட மாட்டேன். என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள். கதவை உடைத்து உள்ளே வராதீர்கள். நான் தீவிரவாதியா?’ என்று அவ்வப்போது கத்திக்கொண்டே இருந்தார். 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்துவிட்டு, அதிரடிப் படை வீரர்களை வரவழைத்தனர்.

மாலை 3.00: ஆம்புலன்ஸ் வந்து தயார் நிலையில் நின்றது. அதிரடிப் படை வீரர்கள் ஆறு பேர் வந்தனர். பாதுகாப்புக் கவசங்களை அணிந்துகொண்டு விஜயகர் ஃபிளாட் முன்பு அணிவகுத்து நின்றனர். அவர்களிடம், 'யாரும் இங்கே வர வேண்டாம். என் செகரட்டரி பாதுகாப்பாக இருக்கிறாள். போலீஸார் எல்லாரும் தூரமாகப் போங்கள். பத்திரிகை, டி.வி-காரர்களையும் போகச் சொல்லுங்கள்’ என்று கூச்சலிட்டார். வீட்டில் இருந்த துடைப்பத்தை தூக்கி வீசினார். பனியன், பெட்ஷீட் ஆகியவற்றையும் தூக்கி வீசினார். ஒரு மது பாட்டிலையும் தூக்கி வீசினார். இதனால், அதிரடிப் படை வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர்.

மாலை 6.30: அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்தேலு, விஜயகரிடம் பேச்சுக் கொடுத்தார். 'உங்கள் செகரெட்டரி வீட்டுக்குப் போக வேண்டாமா? அந்தப் பெண்ணை வெளியே விடுங்கள்’ என்று நைஸாகப் பேசினார். அதற்கு விஜயகர், 'மாலை 7 மணிக்கு செகரட்டரியை நானே எனது காரில் அவரது வீட்டில் விட்டுவிடுகிறேன். நீங்கள் எல்லாரும் போங்கள். நான் வெளியே வருகிறேன்’ என்றார். அந்த அபார்ட்மென்ட்டில் இருந்து பூந்தமல்லி சாலை வரை விஜயகர் கண் பார்வை படும் தூரத்துக்கு ரூட் கிளியர் செய்யப்பட்டது. போலீஸார் ஆங்காங்கே மறைவில் ஒதுங்கிக்கொண்டனர். அதாவது அனைவரும் கலைந்து போய்விட்டது போன்ற தோற்றத்தை விஜயகருக்கு உருவாக்கினர்.

இரவு 9.00: போலீஸார் நடமாட்டம் இல்லை என்பதை நம்பிய விஜயகர், வீட்டுக் கதவைத் திறந்தார். கையில் துப்பாக்கி சகிதமாக செகரெட்டரியை அழைத்துக்கொண்டு காருக்கு வந்த அவர், நேராக கேட்டை நோக்கி காரை செலுத்தினார். அப்போது அங்கிருந்த போலீஸார் அந்தக் காரை மறித்தனர். ஆனாலும் கார் வேகமாக சென்றது. அப்போது, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மாநகரப் பேருந்து ஒன்று வந்ததால், பிரேக் போட்டு காரை நிறுத்தினார். போலீஸாரும் வேடிக்கைப் பார்க்கக் கூடியிருந்தவர்களும் காரைச் சுற்றி வளைத்தனர். பொதுமக்கள் சிலர் கற்களால் காரின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். துப்பாக்கியைக் காட்டி விஜயகர் மிரட்டியதை யாரும் கண்டுகொள்ளாமல் அவரை அடித்து உதைத்தனர். அடி வாங்கினாலும் அவர் யாரையும் சுடவில்லை.  அவரிடம் இருந்த பாயின்ட் 25 ரக பிஸ்டல், ஏர்கன் ஆகிய இரண்டுத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்து அவரைக் கைதுசெய்தனர். செகரெட்டரியையும் மீட்டனர்.

ஒருநாள் முழுக்க போலீஸாருக்கு வேர்த்து விறுவிறுத்ததுதான் மிச்சம்!

- எஸ்.முத்துகிருஷ்ணன்

படங்கள்: எம்.உசேன், ஜெ.வேங்கடராஜ், ப.சரவணகுமார்

 அந்தப் பெண், செகரெட்டரி இல்லை!

விஜயகர் வீட்டில் இருந்த பெண், முகப்பேரைச் சேர்ந்தவராம். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அந்தப் பெண், அடிக்கடி விஜயகர் வீட்டுக்கு வந்து போவாராம். 'அந்தப் பெண்ணுக்கு நல்லா டான்ஸ் ஆடத் தெரியும். ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு என் வீட்டுக்கு வந்து டான்ஸ் ஆடுவாங்க’ என்று போலீஸாரிடம் சொன்னாராம் விஜயகர். அவர் விஜயகரின் செகரெட்டரி கிடையாதாம். இலங்கையில் உள்ள சினிமா வட்டாரத்துடன் நெருக்கமான தொடர்பில் இருந்த விஜயகர், சிங்கள மொழிப் படங்கள் சிலவற்றில் நடித்துள்ளாராம். புழல் சிறையில் அடைக்கப்பட்ட விஜயகர், ஜெயிலிலும் ரகளை செய்துள்ளார். சிறை மருத்துவர்களின் ஆலோசனைப்படி விஜயகரை, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

 சரத்குமாரின் நண்பர்!

மதுரைப் பக்கம் ஜெயராஜ் நாடார் என்றால் தெரியாத ஆள் கிடையாது. தொழில் அதிபரான இவருடைய வாரிசுகள் பள்ளி, கல்லூரிகள், கார், டிராக்டர், எர்த் மூவர்ஸ் ஷோரும்கள் என்று பெரும் வணிகர்களாக இருக்கின்றனர். ஜெயராஜ் நாடாரின் பேரன்தான் இந்த விஜயகர். கொடைக்கானலில் இருக்கும் ஹாலிடே ஹோம் ஹோட்டல் இவருடையதுதான்.

சினிமாவில் ஆர்வம் உள்ள விஜயகர், மதுரையில் தீபா-ரூபா தியேட்டர் நடத்திவந்தார். சரத்குமாருடன் நெருங்கிய நட்பில் இருந்தார். மதுரைக்கு சரத் எப்போது வந்தாலும், விஜயகரைப் பார்க்காமல் திரும்ப மாட்டார். 13 ஆண்டுகளுக்கு முன் நடந்த கார்கில் போரில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு நிதி திரட்ட மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழ்த் திரையுலகம் சார்பில் பிரமாண்ட கலைநிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சரத்குமாருடன் இணைந்து செய்தவர்களில் விஜய​கரும் ஒருவர்.

- கே.கே.மகேஷ்