Published:Updated:

'சொர்க்கபுரி' செளகார்பேட்டை... 'ரகசிய இடம்' கூவம் நதிக்கரை!

'சொர்க்கபுரி' செளகார்பேட்டை... 'ரகசிய இடம்' கூவம் நதிக்கரை!

'சொர்க்கபுரி' செளகார்பேட்டை... 'ரகசிய இடம்' கூவம் நதிக்கரை!

'சொர்க்கபுரி' செளகார்பேட்டை... 'ரகசிய இடம்' கூவம் நதிக்கரை!

Published:Updated:
##~##

கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தால் உஷ்ணத்தின் உச்சியில் தகிக்கிறது சென்னை. மும்பை போலீஸின் உயர் அதிகாரிகள் சென்னையின் சௌகார்பேட்டை ஏரியாவுக்கு ரகசியமாக  வந்து விசாரிக்கிறார்கள். இங்குதான் கிரிக்கெட் சூதாட்​டத்தின் முக்கியப் புள்ளிகளின் 'ஹப்' இயங்குகிறது. ஆங்காங்கே வி.ஐ.பி-கள் வீடுகளில் ரெய்டு என்று அல்லோலகல்லோலம். 

மும்பையின் ரமேஷ் வியாஸ் போலீஸில் பிடி​பட்ட பிறகுதான் சென்னை சௌகார்பேட்டை பற்றிய லிங்க் வெளிப்பட்டது. மும்பையில் இந்தி நடிகர் விண்டு தாராசிங்கின் செல்போன் எண்​களை கிராஸ் செய்தபோது, சென்னையில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸின் உரிமையாளர் குருநாத் மெய்யப்பனுக்கும் அடுத்து சூதாட்ட புக்கி ஒருவருடனும் பேசியிருப்பது தெரியவந்தது. அடுத்தடுத்த போன் கால்கள் பேசியது பற்றி விசாரித்தபோதுதான், திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின. டெல்லியில் கைதான 11 புக்கிகளில் ஏழு நபர்களின் லேப்டாப்களில் இருந்த முக்கியமான பெயர்கள்... சென்னையைச் சேர்ந்த கிட்டி மற்றும் சஞ்சய் பாஃனா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹவாலா புள்ளிகளின் ரகசிய இடம்!

'சொர்க்கபுரி' செளகார்பேட்டை... 'ரகசிய இடம்' கூவம் நதிக்கரை!

சௌகார்பேட்டையை கிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் சொர்க்கபுரி என்றே வர்ணிக்கிறார்கள். கடந்த சில நாட்களாக  இங்கே தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸாரும் முற்றுகை​யிட்டு விசாரித்துவருகிறார்கள். ஹவாலா புள்ளிகள் மூலம்தான் இங்கே பணம் கைமாறியிருக்கிறது. அதேபோல், ஹவாலா புள்ளிகளும் கிரிக்கெட் புக்கிகளும் தினமும் சந்திக்கும் ரகசிய இடத்தை திடீரென போலீஸ் சுற்றிவளைத்தது. அது, அண்ணா சாலை மின் வாரியத் தலைமை அலுவலகத்துக்கு பின்புறம் இருக்கும் கூவம் நதிக்கரையோரம். இங்கே, தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கார்கள் வரும். கார்கள் முழுக்க கிரிக்கெட் புக்கிகள். காரில் இருந்தபடியே பிசினஸ் பேசுவார்களாம். அவர்களில் சிலர் இப்போது போலீஸ் கஸ்டடி​யில் சிக்கியிருக்கிறார்கள். சென்னை அண்ணா​நகரைச் சேர்ந்த பிசினஸ் பிரமுகரின் வாரிசு வசமாக சிக்கியிருக்கிறார். ''வாரத்தில் திங்கட்கிழமைதான் எங்களுக்கு பணம் செட்டில்மென்ட் தேதி. அன்றைக்கு ஒரேயோரு கிரிக்கெட் மேட்ச் நடக்குமாறு இருக்கும்'' என்று பல்வேறு தகவல்களைச் சொல்லியிருக்கிறார்.  

சென்னை கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி ஆபீஸ் மே 23-ம் தேதியன்று படு பிஸி. கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கும் நபர்கள் இந்தியில் பேசியபடி அங்குமிங்கும் நடந்தனர். அடுத்து என்ன கேள்வி கேட்பார்களோ என்ற பீதியில் வராந்தாவில் காத்துக்கிடந்தனர்.

சிக்கலில் மதுரை வாரிசு?

கிரிக்கெட் சூதாட்டப் புகாரை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. பிரிவின் எஸ்.பி-யான ராஜேஸ்வரியை சந்தித்துப் பேசினோம்.

''மதுரையைச் சேர்ந்த பிரபல அரசியல் புள்ளியின் வாரிசு கிரிக்கெட் சூதாட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார் என்று புக்கி ஒருவர் சொல்கிறாராமே?''

''கிரிக்கெட் சூதாட்டத்தில் பணக்காரர்கள்தான் அதிகம் ஈடுபட்டிருக்கிறார்கள். நிறைய புக்கிகள் இருக்கிறார்கள். இவர்களுக்குள் நல்ல லிங்க் இருந்திருக்கிறது. நீங்கள் சொல்கிற நபரின் செல்போன் எண் என்னவென்று தெரியவில்லை. ஆனால், இதுவரை ஏழு குற்றவாளிகளைப் பிடித்துள்ளோம். அவர்களிடம் விசாரித்துவருகிறோம். அவர்களின் தகவல் தொடர்புகளைக் கிராஸ்செக் செய்கிறோம். அந்த வகையில் எங்காவது நீங்கள் சொல்கிற பிரமுகருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தால், விசாரிப்போம்.''

'சொர்க்கபுரி' செளகார்பேட்டை... 'ரகசிய இடம்' கூவம் நதிக்கரை!

''சென்னையிலும் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக எப்படி க்ளு கிடைத்தது?''

''ஹரீஸ் பஜாஜ் என்பவர் ஒரு கோடி ரூபாய் அளவில் தன்னை சூதாட்டத்தில் ஏமாற்றிவிட்டதாக, பாதிக்கப்பட்ட ஒருவர் எங்களிடம் வந்தார். அந்த விவகாரத்தை விசாரிக்கப் போனபோது எல்லாம் தெரியவந்தது.''

''உங்கள் கஸ்டடியில் தரகர் பிரஷாந்த் குறிப்பிடும்படியாக ஏதும் சொன்னாரா?''

''நிச்சயமாக. விசாரணையில் எங்களுடன் நல்ல ஒத்துழைப்பு தந்தார். பல்வேறு விஷயங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். அதைவைத்துதான், கிட்டி, சஞ்சய் பாப்னா... இருவரையும் நாங்கள் தேடிப்போனோம். அவர்கள் தப்பிவிட்டனர். அவர்களைப் பிடித்தால்தான் இந்த விசாரணையின் அடுத்த கட்டத்தை எட்டுவோம்.''

'சொர்க்கபுரி' செளகார்பேட்டை... 'ரகசிய இடம்' கூவம் நதிக்கரை!

''மும்பை போலீஸ் சென்னைக்கு வந்திருக்கிறார்களே... நீங்கள் எந்த அளவுக்கு இதுவரை விசாரித்திருக்கிறீர்கள்?''

''கிட்டி வீட்டில் சோதனை நடத்தியபோது, சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புக்கு பெயர் இல்லாத செக்குகள் இருந்தன. அவற்றைக் கைப்பற்றியிருக்கிறோம். அவற்றில் பெயர்களை எழுதி விநியோகிக்க வைத்​திருந்தார். இதேபோல், 10-க்கும் மேற்பட்ட வீடு மற்றும் அலுவலகங்களில் எங்கள் குழுவினர் சோதனைகள் நடத்தினர். 18 லட்ச ரூபாய், செக்குகள், லேப்​டாப்கள், கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் புக்கிகளுடன் கொடுக்கல் வாங்கலில் இருப்பது தெரியவந்துள்ளது. மற்ற விவரங்களை இப்போது வெளியே சொல்ல முடியாது'' என்றவர்,

''பொதுமக்களில் யாருக்காவது கிரிக்கெட் புக்கிகள், தரகர்கள் பற்றி தெரியவந்தாலோ... அல்லது, கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு ஏமாந்திருந்தவரைப் பற்றி தெரிந்தாலோ... உடனே எங்களை (போன் எண்: 044-22502510) தொடர்புகொண்டு தகவல் தெரி​விக்கலாம். அது எங்களுக்கு இந்த நேரத்தில் மிகவும் உபயோகப்படும்'' என்றார்.

மக்களே தயாரா?

- பாலகிஷன்

 நடிகைகள் தொடர்பு!

'சொர்க்கபுரி' செளகார்பேட்டை... 'ரகசிய இடம்' கூவம் நதிக்கரை!

வீரர்களை மடக்கப் பெண்கள் பயன்படுத்தப்பட்டனர் என்பது இப்போது புதிதாக நடப்பது இல்லை. 2008-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடங்கப்பட்டதில் இருந்தே கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குள் நடிகைகள் அனுமதிக்கப்பட்டனர். பார்ட்டியில் ஆரம்பிக்கும் நட்பு ஹோட்டல் ரூம் வரை நீளும். சென்னை அணியில் அப்போது வேகப் பந்து வீச்சாளராக இருந்த ஒருவர்  அடையாறு ஹோட்டலில் கோலிவுட்டின் கவர்ச்சி நடிகை ஒருவருடன் சுற்றிவந்தார். ஸ்பான்ஸர்கள் என்ற பெயரில் ஏஜென்ட்களும், புரோக்கர்களும் சர்வசாதாரணமாக கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குள் அனுமதிக்கப்​பட்டனர்.

சுஷ்மிதா சென், பிரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி, கத்ரினா கைப் என்று வட நாட்டு நட்சத்திரங்களுக்கு கிரிக்கெட் மோகம் அதிகம். ஆந்திரா சினிமா நட்சத்திரங்களை கிரிக்கெட் வீரர்களோடு பழகவைக்கும் சூத்திரம் அத்தனையும் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு அத்துப்படி. மலையாள மந்திரவாதிகள் சொல்லுக்குக் கட்டுப்படும் அப்பாவிகள் போல தெலுங்கு நடிகைகள் பலரும் அந்த வீரரிடம் க்ளீன் போல்ட்!

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன், ஸ்ரீசாந்துடன் நெருக்கமாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் நடிகை லட்சுமி ராய். அதன்பின் டோனியுடன் நெருக்கம் காட்டினார்.

லட்சுமி ராய் தரப்பில் விசாரித்தால், ''கிரிக்கெட்டை டி.வி-யில் மட்டுமே பார்க்கிறார். கிரிக்கெட் டீமுக்கும் அவருக்கும் இப்போது எந்த சம்பந்தமும் கிடையாது'' என்கிறார்கள்.

 நயன்தாராவை நியமித்த குருநாத்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் குருநாத் மெய்யப்பனுக்கு மும்பை போலீஸ்

'சொர்க்கபுரி' செளகார்பேட்டை... 'ரகசிய இடம்' கூவம் நதிக்கரை!

சம்மன் அனுப்பி இருக்கிறது. பாலிவுட் நடிகரும், தாரா சிங்கின் மகனுமான விண்டு தாரா சிங்கை ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கு தொடர்பாகக் கடந்த வாரம் கைதுசெய்தது மும்பை போலீஸ். விசாரணையின்போது 'குருநாத் மெய்யப்பன் சார்பாகவே நான் சூதாட்டத்தில் ஈடுபட்டேன்’ என்று விண்டு சொன்னதாகச் சொல்கிறார்கள். இதைத் தொடர்ந்து குருநாத் மெய்யப்பனை விசாரிக்கத் துடிக்கிறது மும்பை போலீஸ். விசாரணைக்கு வலு சேர்க்கும் வகையில் விண்டு தாராசிங், சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியின்போது டோனியின் மனைவி சாக்ஷியின் அருகில் உட்கார்ந்து மேட்ச் பார்த்ததை புகைப்பட ஆதாரங்களுடன் கையில் எடுத்திருக்கிறது போலீஸ்.

45 வயதானவர் குருநாத் மெய்யப்பன். இவர் ஏ.வி.எம்.பாலசுப்ரமணியத்தின் மகன். பள்ளித் தோழியான ரூபாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார் குருநாத். ரூபா, 'இந்தியா சிமென்ட்ஸ்’ சீனிவாசனின் மகள். ஐ.பி.எல். நேரத்தில்தான் குருநாத் மெய்யப்பன் என்ற ஒரு நபரையே, பலருக்கும் தெரியும். முன்னாள் ரேஸ் வீரரான குருநாத், நடிகர் விஜயை வைத்து 'வேட்டைக்காரன்’ என்னும் படத்தைத் தயாரித்தார். ஏரோ மாடலிங் எனப்படும் ரிமோட் விமானங்களை இயக்குவதில் ஆர்வம்கொண்டவர் குருநாத்.

சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடிகர் விஜயையும் நயன்தாராவையும் தூதுவராக நியமித்ததும் இவர்தான். விஜய்க்கு 1 கோடி ரூபாயும், நயன்தாராவுக்கு 40 லட்சமும் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதாகச் சொல்வார்கள். ஐ.பி.எல். ஆரம்பித்ததுமே நயன்தாராவை நீக்க, முதல் ஆண்டோடு விஜய் கான்ட்ராக்ட்டும் முடிந்தது. 'சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள் தனிப்பட்ட எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யவில்லை என்பதால்தான், என்னை நீக்கிவிட்டார்கள்’ என அப்போதே குருநாத் மீது குற்றச்சாட்டுக்களை வைத்தார் நயன்தாரா. பொது நிகழ்ச்சிகளில் அதிகம் தலை காட்டாத குருநாத், மீடியாக்களிடமும் பேசுவதைத் தவிர்ப்பார்.

2008-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளின்போது நடிகை லட்சுமி ராயை டோனிக்கு அறிமுகம் செய்துவைத்தவர் குருநாத் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் பேச்சு உண்டு. இது பற்றியெல்லாம் விசாரிக்க மும்பையில் இருந்து வந்த சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் குருநாத் வீட்டுக்கு வந்தனர். வீட்டில் யாரும் இல்லாததால், சம்மனை செக்யூரிட்டியிடம் கொடுத்துள்ளனர்.

மாமனார் கையில் கிரிக்கெட்!

ஸ்பிக் நிறுவனத் தலைவர் ஏ.சி.முத்தையாதான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும் தலைவராக இருந்தார். அவர் மூலமாகத்தான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்குள் வந்தார் சீனிவாசன். 1999-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் துணைத் தலைவராக, ஏ.சி.முத்தையா அணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் என்.சீனிவாசன். 2001-ம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2008-ம் ஆண்டு வரை ஒன்றாக இருந்த ஏ.சி.முத்தையா - சீனிவாசன் கூட்டணி அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது பிரிந்தது. தமிழ்நாட்டில் உள்ள 180 கிரிக்கெட் சங்கங்கள் ஓட்டுபோட்டுத் தேர்ந்தெடுக்கும் பதவிதான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவி. 180 வாக்குகளில் 91 வாக்குகளுக்கு மேல் பெறுகிறவர் தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். 2008-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது 134 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார் சீனிவாசன். கடந்த 12 ஆண்டுகளாக சீனிவாசன்தான் தமிழ்நாட்டு கிரிக்கெட் சங்கத் தலைவர். 2007-ம் ஆண்டு பி.சி.சி.ஐ. பொருளாளராகவும் நியமிக்கப்பட்ட சீனிவாசன், 2011-ம் ஆண்டு முதல் பி.சி.சி.ஐ. தலைவராக இருக்கிறார். இவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது. இந்தியா சிமென்ட்ஸ் அலுவலகத்தில் பணிபுரியும் காசி விஸ்வநாதன், இப்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கச் செயலாளர். சீனிவாசனின் உறவினர் நடராஜன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கப் பொருளாளர். -

- சார்லஸ்

 துரோகம் செய்ய மாட்டார்!

சீனிவாசனின் ஆதரவாளர்களோ, ''சூதாட்டப் புகார் சம்பந்தமாக இந்தியா சிமென்ட் சீனிவாசனையும், அவரது மருமகனையும் சிக்கவைத்து எப்படியாவது இந்திய கிரிக்கெட் சங்கத்தைக் கைப்பற்றிவிட சிலர் திட்டமிடுகிறார்கள். இதற்கு முழுக்கப் பின்புலமாக இருந்து செயல்படுபவர் தலைமறைவாக இருக்கும் லலித் மோடி. 'ஒரு தென் இந்தியரிடம், அதுவும் ஒரு தமிழரிடம் ஒட்டுமொத்த அதிகாரமும் சென்றுவிட்டது’ என்று வட இந்திய மீடியாக்களிடமும், வட இந்திய அரசியல் தலைவர்களிடம் பிரசாரம் செய்துவருகிறார் லலித் மோடி. இந்த கோப அரசியல்தான் காரணமே தவிர சீனிவாசனோ, அவரது மருமகனோ சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அல்ல. சீனிவாசன் மிகப் பெரிய கிரிக்கெட் ரசிகர் என்பதைவிட வெறியர். அவர் கிரிக்கெட்டுக்குத் துரோகம் செய்ய மாட்டார்'' என்கிறார்கள்.

சிக்கலில் ஸ்ரீசாந்த்!

சூதாட்டப் புகாரில் சிக்கிய மூன்று வீரர்களும் கிட்டத்தட்ட தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இதில், ஸ்ரீசாந்த்துக்கு எதிராகத்தான் ஏகப்பட்ட ஆதாரங்கள் சிக்கியுள்ளன. அதில் மிக முக்கியமானது, கர்நாடகாவில் ஸ்ரீசாந்த் நடத்திவரும் எஸ்.36 எண்டர்டெயின்மென்ட் நிறுவனம். அந்த நிறுவனத்தில் ஸ்ரீசாந்த்துக்கு 76 சதவிகிதப் பங்குகளும், அவருடைய நண்பருக்கு 24 சதவிகிதப் பங்குகளும் உள்ளனவாம். அந்த நிறுவனத்தின் நோக்கம், உலகில் பணம் கொழிக்கும் விளையாட்டுக்களில் பெட்டிங் செய்வதுதான். இதுபற்றி ஸ்ரீசாந்திடம் கேட்டபோது, 'நான் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, வெளிநாட்டில் பெட்டிங் தொழிலைச் செய்வதற்காக இந்த நிறுவனத்தைத் தொடங்கினேன். ஒருவேளை, இந்தியாவில் பெட்டிங் தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டால் இங்கும் நடத்தலாம் என்ற யோசனையில் இருந்தேன்’ என்று சொன்னாராம்.

கிரிக்கெட் வாரியத்துக்கு தடை!

சூதாட்டப் புகார் தொடர்பாக மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த சாந்தகுமரேசன் சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார்  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார். அவரிடம் பேசினோம். 'இந்தியக் கிரிக்கெட் வாரியம் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. இந்தியக் கிரிக்கெட் அணியை முழுமையாகக் கட்டுப்படுத்துவது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான். ஆக, இந்தியா சார்பில் போட்டிகளில் பங்கேற்பது இந்தியக் கிரிக்கெட் அணியே அல்ல. எனவே, இந்தியக் கிரிக்கெட் அணி என்ற பெயரைப் பயன்படுத்த கிரிக்கெட் வாரியத்துக்குத் தடைவிதிக்க வேண்டும். கிரிக்கெட் வாரியத்தையும், ஐ.பி.எல். அமைப்பையும் தனியாரிடம் இருந்து மீட்டு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகமே நடத்த வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தோம்'' என்கிறார்.

- கே.கே.மகேஷ், ஜோ.ஸ்டாலின்