Published:Updated:

'நளபதி வாத்தியார்!'

தமிழர்கள் ஆக்கத் துடித்த அறிவன்

'நளபதி வாத்தியார்!'

தமிழர்கள் ஆக்கத் துடித்த அறிவன்

Published:Updated:
'நளபதி வாத்தியார்!'

சில மனிதர்களை இறந்த பிறகுதான் அடையாளம் காண்கிறோம். அப்படி ஒருவர், பறம்பை அறிவன்!

சாதியும் வன்முறையும் கலந்து வாழும் மக்களைக்​கொண்ட பரமக்குடி நகரத்தில் அந்த 75 வயது மனிதரின் மரணத்துக்காக, சாதி மதங்களைக் கடந்து, பரமக்குடி மக்கள் அனைவரும் கண்ணீர் சிந்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிற்பட்ட சாதியில் பிறந்திருந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்களின் பக்கமாக நின்று போராடியவர் பறம்பை அறிவன். அனைத்துச் சாதியினரையும் தமிழர் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டுவர முயன்றவர்.

இவரிடம் படித்த மாணவர் சரவணக்குமார், ''பாரதி​யார் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்த பறம்பை அறிவனின் இயற்பெயர் நளபதி. 'நளபதி வாத்தியார்’ என்றால்தான் உள்ளூர்க்காரர்களுக்குத் தெரியும். எமனேஸ்வரம் அருகேயுள்ள மானங்குடியிருப்பு என்ற ஊரில் பிறந்தவர். இவருடைய மனைவி லீலாவதியும் ஆசிரியர்தான்.

'நளபதி வாத்தியார்!'

ஆரம்பத்தில் இடதுசாரி சிந்தனையாளராக இருந்தவர்... பிறகு, தமிழ்த் தேசிய அரசியலை விரும்பினார். அந்தக் காலத்திலேயே மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் நடத்திய உலகத் தமிழர் கழகத்தில் தீவிரமாக செயல்பட்டார். இவரும், அப்போது பரமக்குடியில் பள்ளித் தமிழாசிரியராக பணியாற்றிய தமிழ்குடிமகனும் (முன்னாள் சபாநாயகர்) சேர்ந்து, பரமக்குடியில் பெரிய அளவில் உ.த.க-வின் மாநாட்டை சிறப்பாக நடத்தினர்.

தன் பள்ளிப் பணிக்கு இடையில், தமிழ் மொழி, ஈழத் தமிழர் பிரச்னை, தமிழ் ஆட்சி மொழிப் பிரச்னை, தமிழைப் பயிற்று மொழி​யாக்க நடக்கும் இயக்கங்களை யார் நடத்தினாலும் அதில் இணைந்து பணியாற்றினார். திராவிட அரசியல்வாதிகள்தான் தமிழர்​களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியவர்கள் என்ற கருத்தில் நிலையாக இருந்தார். இவருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள். தன் பிள்ளைகளுக்குத் தன்னைப் போலவே சாதி மாற்றியே திருமணங்​களை செய்துவைத்தார்'' என்று சொல்கிறார்.

எமனேஸ்வரத்தைச் சேர்ந்த இளம்பிறை அப்துல் ரகுமான், ''சிறு வயதிலேயே குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டவன் நான். அந்த நேரத்தில், அவரிடம் படித்த ஒரே காரணத்துக்காக என்னை தன் மகனைப்போல பார்த்துக்கொண்டார். தனி மனித ஒழுக்கத்தைக் கடைசி வரை கடைபிடித்தார். தன் வீட்டுக்கு வரும் தலைவர்கள், நண்பர்களுக்கு கடன் வாங்கிச் செலவழித்தார். முன்பெல்லாம், ஐந்து முனை சந்திப்பில் தமிழ் மொழி சார்ந்த ஏதாவது ஒரு பொதுக் கூட்டத்தை அடிக்கடி நடத்துவார். இனி அதைச் செய்ய யார் இருக்கிறார்கள்?'' என்றார்.

சாதி எல்லைகளைக் கடந்து செயல்படவும், மதிக்கப்படவும் கூடிய மனிதர்கள் பெருகட்டும்!

- செ.சல்மான், படங்கள்: உ.பாண்டி