Published:Updated:

தயாளு அம்மாளுக்கு என்ன ஆச்சு?

சில நிமிடங்களுக்கு முன்பு...

தயாளு அம்மாளுக்கு என்ன ஆச்சு?

சில நிமிடங்களுக்கு முன்பு...

Published:Updated:
##~##

''நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அந்தப் பெண்ணின் வீட்டில் சுயமரியாதைத் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை. பெற்றோரின் ஏற்பாட்​டில் திருமாகாளம் என்ற ஊரில் ஒரு பெண் பார்த்தேன். அவர் சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தார். 1944-ம் ஆண்டு எங்கள் திருமணம் நடந்தது. இன்று வரை எங்களுக்கு எந்த சிக்கலும் வந்தது இல்லை. அந்தப் பெண்ணின் பெயர் தயாளு...''- சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் இப்படிப் பேசினார் கருணாநிதி. கருணாநிதிக்கும் தயாளு அம்மாளுக்குமான பந்தத்துக்கு வயது 70.

அந்தப் பாசம்தான் நீதிமன்ற விவகாரத்தால் கருணாநிதியைக் கலங்கவைத்துள்ளது. நீதிமன்ற உத்தரவுகள் பற்றி எப்போதும் எதுவும் பேசாத கருணாநிதி, முதல்முறையாக மனைவிக்காக வாய்​திறந்திருக்கிறார். 'என் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்பது தமிழகம் முழுவதும் அறிந்த செய்தி. அவர் நேரில்தான் வந்து சாட்சியளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அவரால் விமானத்தில் பயணம்செய்ய முடியாது. அவர் உடல்நிலைக்கு மேலும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பு ஏற்றுக்​கொள்வார்கள்?’ என்று சீறியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தயாளு அம்மாளுக்கு என்ன ஆச்சு?

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி தயாளு அம்மாள் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனு மீதான விசாரணை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்தது. தயாளு அம்மாளுவின் வழக்கறிஞர் குமரேசன், ''தயாளு அம்மாளுக்கு இப்போது வயது 82. அவர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறார். அவருக்கு அல்சைமர் என்ற மறதி நோய் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும் என்பது பற்றி மருத்துவர்கள் கொடுத்த ரிப்போர்ட்டை தங்களுக்கு சமர்ப்​பித்துள்ளேன். அவரால் சாதாரணமாகப் பேசவோ, நடமாடவோ முடியாது. அவருக்கு நெருக்கமான சொந்தபந்தங்களைக்கூட சில சமயங்​களில் அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலையில் இருக்கிறார். சில நேரங்களில் கோபத்தில் எதிரில் இருப்பவர்களையே தாக்கிவிடுகிறார். அதனால், தயாளு அம்மாளின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, அவரை சாட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும்'' - இப்படி ஒரு வாதத்தை முன்வைத்தார்.

நீதிபதியோ, 'மன, உடல் ரீதியாக தயாளு அம்மாள் செயலற்றவராக இல்லை என்று மருத்துவச் சான்றிதழில் எங்கும் குறிப்பிடவில்லை. வயதானால் எல்லோருக்கும் வரும் பிரச்னைகள்தான் அவருக்கும் வந்திருக்கிறது. எனவே, அவரது மனுவைத் தள்ளுபடிசெய்கிறேன். அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். அதனால், தயாளு அம்மாள் டெல்லி சென்றே தீரவேண்டிய நெருக்கடி.

கருணாநிதி குடும்பத்துடன் நெருக்கத்தில் உள்ளவர்கள் சிலருடன் பேசினோம். ''கோபாலபுரம் வீட்டில் தரைத் தளத்தில் தயாளு அம்மாளுக்கு அறை உள்ளது. அவரை 24 மணி நேரமும் கவனித்துக்​கொள்ள இரண்டு நர்ஸ்கள் ஷிஃப்ட் முறையில் வருகிறார்கள். வீட்டில் இருப்பவர்களையே சில நேரங்களில் அவருக்கு அடையாளம் தெரிவதில்லை. தலைவர் பிறந்த நாள் அன்று காலை வீட்டுக்கு வந்த உறவினர்கள் சிலரை, 'யாரு நீங்க? இங்கே எதுக்காக வந்தீங்க... கிளம்புங்க’ என்று கோபப்பட்டார். மறதியும் கோபமும் மாறிமாறி வருகிறது. சாப்பாடு சில நேரங்களில் அவரே எடுத்துச் சாப்பிடுகிறார். மற்ற நேரங்களில் யாராவது ஊட்டிவிட வேண்டும். தன்னையே மறந்த நிலையில்தான் அம்மா இருக்காங்க...'' என்று கவலையோடு சொல்​கிறார்கள்.

தயாளு அம்மாளுக்கு வந்திருக்கும் அல்சைமர் என்ற நோய் பற்றி மனநல மருத்துவர் ஒருவரிடம் பேசினோம். ''அல்சைமர் என்ற நோயைத் தமிழில் மூளை மறதி நோய் என்று குறிப்பிடுவோம். இந்த நோய் யாருக்கெல்லாம் வரும் என்று குறிப்பிட்டு சொல்லவே முடியாது. 80 வயதுக்கு மேற்பட்​டவர்களில் சிலருக்கு வருகிறது. பரம்பரையாகவும் சிலருக்கு வரும்.

உதாரணத்துக்கு, நீங்கள் அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள். எழுந்து டீக்கடைக்குப் போகிறீர்கள். அங்கே டீ சாப்பிடுகிறீர்கள். இந்த நோய் வந்தவர்கள் எழுந்து டீக்கடைக்குப் போனதை மட்டும் மறந்துவிடுவார்கள். நான் எப்படி டீக்கடைக்கு வந்தேன் என்று கேள்வி கேட்பார்கள். பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் நினைவில் இருக்கும். சில நிமிடங்களுக்கு முன் நடந்தவை மறந்துவிடும். சம்பந்தமே இல்லா​மல் பேசுவார்கள். கோபப்படுவார்கள். தினமும் பார்த்துப் பழகியவர்களையே மறந்து​விடுவார்கள். மற்றபடி பார்ப்​ப​தற்கு எல்லோரையும் போல இயல்பாகவே இருப்பார்கள். இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. இதன் வேகத்தை வேண்டுமானால் குறைக்கலாம்'' என்று சொன்னார்.

பத்திரமாப் பார்த்துக்கங்க?

- கே.ராஜாதிருவேங்கடம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism