Published:Updated:

ஆங்கிலம் வந்துவிட்டது... பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

ஆங்கிலம் வந்துவிட்டது... பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

ஆங்கிலம் வந்துவிட்டது... பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

ஆங்கிலம் வந்துவிட்டது... பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

Published:Updated:
ஆங்கிலம் வந்துவிட்டது... பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
##~##

ஆங்கில வழிக் கல்வி, அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்தே அறிமுகப்​படுத்தப்​படும் என்று தமிழக அரசு அறிவித்​துள்ளது. அந்த அறிவிப்பைத் தொடந்து பல விவாதங்கள், தமிழக அரசியல், சமூக அரங்குகளில் நடந்துவருகின்றன. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் கட்டுரையின் தொடக்கத்திலேயே, கீழ்க்கண்டவற்றை எந்தச் சந்தேகங்களும் இல்லாமல் தெளிவுபடுத்திவிடுகிறேன். எனது பள்ளிப் படிப்பு முழுவதும் தமிழ் வழியில்தான். புலம்​பெயர்ந்து வாழும் எனக்கு ஆங்கிலம் தடையாக இருந்தது இல்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிந்த பிறகு பிறந்த தலைமுறை என்றாலும், அதைப் பற்றிய ஏட்டறிவு நன்றாகவே உண்டு. இந்தித் திணிப்பை எதிர்த்த அந்தப் போராட்டம், தமிழ்ச் சமூகத்தின் அடையாளம் சம்பந்தப்பட்டது. இந்தி என்றல்ல, ஒரு தேசிய இனத்தின் மீது வலுக்கட்டாயமாக எது திணிக்கப்​பட்டாலும், அது தவறானதாகவே இருக்கும்.

ஆங்கில வழிக் கல்வி பற்றிய விவாதங்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் என்றரீதியிலேதான் இருக்கின்றன. இது குறுகிய நோக்கம்கொண்டது என்பது, எனது எண்ணம். முதலில் தாய் மொழி தவிர்த்த மற்றொரு மொழி தேவைதானா என்பதைப் பார்த்தால், 'நிச்சயமாக’ என்பேன். அது என்ன மொழியாக இருக்க வேண்டும் என்றால், சந்தேகத்துக்கு இடமில்லாமல் என் பதில், 'ஆங்கிலம்’ என்பதுதான்.

ஆங்கிலம் வந்துவிட்டது... பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் அமெரிக்கக் குடும்பம் ஒன்று பல வருடங்களாக எங்களது நட்பு வட்டத்தில் உண்டு. அவர்களுக்கு ஆறு குழந்தைகள். குழந்தைகளை அவர்கள் சேர்த்​திருக்கும் பள்ளி சைனீஸ் அமெரிக்கன் சர்வதேசப் பள்ளி. சீன மொழியான மேண்டரின், ஆங்கிலம் இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளியில் அவர்களின் குழந்தைகளை சேர்க்கக் காரணம், 'தாய்மொழியான ஆங்கிலம் தவிர்த்து, மற்றொரு மொழி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அது ப்ரெஞ்ச்சாகவோ, ஸ்பானிஷாகவோ இருக்கலாம். ஆனால், உலகிலேயே அதிகமானவர்களால் பேசப்படு​வதாலும், சீனா உலகின் மிக முக்கியமான தேசமாக மாறிக்கொண்டு வருவதாலும், இங்கே சேர்த்தோம்’ என்கிறது அந்த ஜிம் பேரி பேட் தம்பதி.

தாய் மொழியாகவும், இரண்டாவது மொழியாகவும் உலகில் ஒன்றரை பில்லியனுக்கும் மேற்பட்டவர்களால் ஆங்கிலம் இன்று பயன்படுத்தப்படுகிறது. விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இரண்டு பேராசியர்கள் இணையத்தில் எழுதிய ‘The Bilingual Advantage in Novel World Learning’  என்ற புத்தகம் பல்வேறு வகையான மொழித்திறன் கொண்டவர்களின் தகவல்களை சேகரித்து, அவற்றை ஆராய்ந்து எழுதப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவு , இருமொழித் திறன் ( bi-lingual) அல்லது பல் மொழித்திறன்( multi-lingual ) கொண்டவர்கள் ஒருமொழித் திறன்(mono-lingual )  கொண்டவர்களைவிட விஷயங்களைக் கிரகித்து, கற்றுக்கொள்ளும் அளவு பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது. இதற்கு ஒரு நல்ல உதாரணம், இஸ்ரேல் நாடு. இந்த நாடு உருவாகியபோது, ஹீப்ரூ மொழி என்பது மக்கள் சரளமாகப் பேசும் நிலையில் இல்லை. யூத மதத்தைச் சார்ந்தவர் என்ற அத்தாட்சியுடன் யார் சென்றாலும், இஸ்ரேலில் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்ற குடியுரிமைச் சட்டம் இருப்பதால், பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் செல்லத் தொடங்கினர். கேரளாவில் இருந்துகூட 1970-களில் ஆயிரக்கணக்கானோர் சென்றனர். இவர்கள் அனைவருக்கும் ஹீப்ரூ மொழியைக் கற்றுக்கொடுக்கக் கடும் முயற்சிகள் எடுத்துக்கொண்டது இஸ்ரேலிய அரசு. அரசின் ஆவணங்களில் இருந்து சாலையோர போர்டுகள் வரை ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்டன. இந்தக் கொள்​கையை தானாகவே சில வருடங்களில் மாற்றி, பல மொழிக் கொள்கையைக் கொண்டுவந்தது இஸ்ரேலிய அரசு. வணிகம் சார்ந்த பரிமாற்றங்களுக்கு ஆங்கிலம் என்ற நிலை வந்துவிட்டது. ஏன், வீடுகளில் உங்களது சொந்த மொழிகளையே பேசி, எழுதிப் பழகுங்கள் என இஸ்ரேலிய அரசாங்கம் சொல்லத் தொடங்கிவிட்டது.

'ஒரே ஒரு மொழியைத் தெரிந்துவைத்துக்​கொண்டு அதுவே உலகத்தில் சிறந்த மொழி என்றும், ஒரே ஊரில் வசித்துக்​கொண்டு இது மட்டுமே சிறந்த பண்புள்ள நாடு என்றும் வழக்காடுவது, குருடன் யானையைப் பார்த்த கதை போல்தான்!’- ஃபேஸ்புக்கில் எனது நட்பு வட்டத்தில் இருக்கும் நாகர்கோவிலைச் சார்ந்த ஜோஸ்பின் இப்படி ஒரு நிலைத்தகவலை எழுதி இருந்தார்.

ஆங்கிலம் தேவை இல்லை என்ற தரப்பினர் வைக்கும் மற்றொரு வாதம்... ஜப்பானிலோ, ஜெர்மனியிலோ பாடங்கள் அவர்தம் தாய் மொழிகளில்தானே கற்பிக்கப்படுகிறது. அவர்களெல்லாம் அப்படிச் செய்யும்போது, தமிழ் நாட்டில் இதைச் செய்ய முடியாதா என்பது. இது ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுவது போன்றது. பொருளாதார ரீதியில் வளர்ந்துவிட்ட நாடுகளை நம்மோடு ஒப்பிடுவது அபத்தமானது. எப்படி இந்த நாடுகளுடன் ஒப்பிடுகிறோமோ, அதேபோல், மற்ற நாடுகளுடனும் ஒப்பிட வேண்டுமல்லவா? அருகில் இருக்கும் உதாரணமான சீனாவையே எடுத்துக்கொள்வோம். எல்லாவகையிலும் இந்தியாவைவிட கிடுகிடு முன்னேற்றம் கண்டுவிட்டாலும், சர்வதேச அரங்கில் சீனர்களுடன் இந்தியர்களால் போட்டிபோட்டு முன்னேற முடிவதற்குக் காரணம் சீனர்களைவிட நமக்கு சற்றே அதிகமாக இருக்கும் ஆங்கில மொழிப் பயிற்சி.

இன்னொரு கோணத்திலும் பார்க்க வேண்டும். பொருள் ஒன்றை அதிக அளவில் உற்பத்திசெய்து சந்தைப்படுத்தப்படும்போது, அதன் விலையைக் குறைக்க முடியும். கம்ப்யூட்டரில் இணைக்கும் கீ போர்டையே எடுத்துக்கொள்ளலாம்.

பிரஞ்ச், ஜெர்மனி போன்ற மொழிகளில் உள்ள கீபோர்டுகளும் இருக்கின்றன. ஆனால், இந்த கீ போர்டுகளின் விலை ஆங்கிலத்தில் இருக்கும் கீபோர்டுகளின் விலையைவிடக் கணிசமாக அதிகம். காரணம், ஆங்கில கீ போர்டுகளின் தேவை அதிகம் இருப்பதால், அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக, விலையும் குறைவு. கீ போர்டு போன்ற சாதனங்கள் தமிழில் இருந்தாக வேண்டும் என்ற நிலை வரும். அவற்றை வாங்கும் அளவுக்கு நுகர்வு சந்தை இல்லாததால், இவற்றை வாங்கும் விலை மிக அதிகமாக, சாமானியர்களால் வாங்கப்பட முடியாத அளவுக்கு அதிகரிக்கும். பொருளாதாரம் செழிப்பாக இருக்கும் நாடுகளில் அதிக விலை என்பது பொருட்டல்ல. நமது நாட்டில் அதுபோல நடந்ததென்றால், அதை அநீதி என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.

தாய்மொழியில் பயிலும்போது ஆழமாகப் புரிந்துகொண்டு உள்வாங்கிக் கொள்ளமுடியும் என்பதும், என்னால் சரியான வாதமாகப் படவில்லை.  தமிழ் மீடியத்திலேயே படித்த ஒருவர், மருத்துவம் போன்ற தொழில்முறைக் கல்லூரிகளுக்குச் செல்லும்போது அவர் அந்தப் பாடங்களைப் புரிந்துகொள்ளாமல் திண்டாடுவதால், கல்லூரிப் பாடங்களையே முழுக்க மாற்றிவிட வேண்டும் என்று சொல்பவர்களையும் பார்க்கிறேன். செருப்புக்கு தகுந்த மாதிரி காலை வெட்ட முடியுமா என்ன?

பள்ளிகளில் கற்கும் ஆங்கிலக் கல்வியின் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது. அதை முன்னேற்றினால் பிரச்னைகள் சரியாகிவிடும். நம் முயற்சி அதிகம் இல்லாமலேயே, ஆங்கிலம் நமது நாட்டுக்குள் வந்துவிட்டது. இதை நமக்குச் சாதக​மாகப் பயன்படுத்திக்கொள்ளும் முயற்சிகளைத்தான் செய்ய வேண்டுமே தவிர, பழம்பெருமைப் பேசி நமக்கான முன்னேற்றத்துக்கு நாமே தடையாக இருக்கக் கூடாது. ஆங்கிலக் கல்வி, நகரங்களைவிட கிராமங்களில் அதிகம் தேவை என உறுதியாக நம்புகிறேன்.

தமிழகத்தில் கல்விக் கொள்கையில் முடிவுகள் எடுக்கும் அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சில ஆலோசனைகள்...

* தமிழ் வழியில் படித்தால் ஆங்கிலம் கட்டாயப் பாடமாகவும், ஆங்கில வழியில் படித்தால் தமிழ் கட்டாயப் பாடமாகவும் இருக்க வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டுவாருங்கள்.

* இரண்டு மொழிகளையும் கற்றுக்கொடுக்கும் தரத்தை உயர்த்த முயற்சிகள் எடுங்கள். தமிழாசிரியர் இடங்கள் இன்னும் பல இடங்களில் நிரப்பப்​படாமல் இருப்பதாகத் தெரிகிறது. அதை முதலில் நிரப்புங்கள்.

* மாணவர்களின் தரத்தை நிர்ணயம்செய்யத் தேர்வுகள் இருப்பதுபோல ஆசிரியர்களுக்கும் தர நிர்ணயம் செய்யும் திட்டங்கள் வளர்ந்த நாடு​களில் இருக்கின்றன. அவற்றை ஆழமாக அலசி நமது நாட்டுக்குத் தகுந்தாற் போல வடிவமைப்பு செய்​யுங்கள்.

* நூலகங்களின் எண்ணிக்கைகளையும் அவற்றுக்கு மாணவர்கள் செல்லும் விதத்தில் தரமான புத்தகங்களையும் செய்தித்தாள்களையும், பத்திரிகைகளையும் வாங்குங்கள். இதில் அரசியல் கலக்காதபடி உள்ளூர் அமைப்புகளே  பொறுப்பாக இருக்கும்படி சட்டங்களை அமையுங்கள். அலைபேசிகளிலும் கையடக்கக் கணினிகளிலும் படிக்கும் வகையில் புத்தகங்களை மின் மறுபதிப்புச் செய்யுங்கள். அரசுடமையாக்கப்பட்டப் புத்தகங்களில் இருந்து, இதை ஆரம்பிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism