Published:Updated:

'அம்மாவுடன் போகிறேன்!'

திடீர் திருப்பத்தில் தர்மபுரி காதல்

'அம்மாவுடன் போகிறேன்!'

திடீர் திருப்பத்தில் தர்மபுரி காதல்

Published:Updated:
##~##

சில மாதங்களுக்கு முன், தமிழகத்தையே அதிர​வைத்த சம்பவம், தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் கலவரம். வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த காதல் ஜோடியான இளவரசன் - திவ்யா செய்துகொண்ட திருமணம்​தான் அந்தக் கலவரத்தின் ஆரம்பம். 

இது, 14-11-2012 தேதியிட்ட 'ஜூ.வி.’ இதழில் 'காதல் தீயில் கருகிய கிராமங்கள்’ என்ற தலைப்பில் செய்தியாக வந்திருந்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய இளவரசன் - திவ்யா தம்பதி இதுநாள்வரை தலைமறைவாக வாழ்ந்துவந்தனர். இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி இதில் ஒரு திருப்பம். 'என் காதல் மனைவியைக் காணவில்லை. கண்டுபிடித்துத் தாருங்கள்’ என்று தர்மபுரி நகர பி-1 காவல் நிலையத்தில் இளவரசன் புகார் கொடுத்தார். அதையட்டி எழுந்துள்ள அடுத்தகட்ட பரபரப்புகளைப் பார்ப்பதற்கு முன்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இளவரசனிடம் பேசியபோது, ''கொஞ்சநாள் தலைமறைவாக இருந்த நாங்க சமீபத்தில்தான் தர்மபுரி டவுன் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினோம். எங்களுக்குப் பாதுகாப்பா என் அப்பா அம்மாவும் இருந்தாங்க. திவ்யா​வின் அம்மா ஒருமுறை எங்க வீடு தேடிவந்து மகளைப் பார்த்து நலம் விசாரிச்சுட்டுப் போனாங்க. இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி மதியம் திவ்யாவின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்​லாமல் தர்மபுரி தனியார் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருப்​பதாகத் தகவல் வந்திருக்கு. அப்போ நான் வீட்டில் இல்லாததால், திவ்யா இந்த விஷயத்தை போனில் சொன்னார். அதோடு, நான் வீட்டுக்கு வந்து அழைச்சுட்டுப் போகும் முன்பே திவ்யா தனியாகவே அவங்க அம்மாவைப் பார்க்கக் கிளம்பிப் போய்விட்டார்.

'அம்மாவுடன் போகிறேன்!'

கூட்டிக்கிட்டு வர்றதுக்காக நான் மீண்டும் போன் பண்ணினப்போ அவங்க அம்மா தேன்மொழிதான்

'அம்மாவுடன் போகிறேன்!'

போனை எடுத்தாங்க. 'என் மகள் வந்து சேர வேண்டிய இடத்துக்கு வந்துட்டா. இனிமே அவ திரும்பி வர மாட்டா’னு சொன்னாங்க. எனக்கு பயங்கர அதிர்ச்சி. அதற்குப் பிறகு போனை ஆஃப் பண்ணிவெச்சுட்டாங்க. இப்போ வரைக்கும் என் மனைவி எங்கிருக்கார்னு தெரியலை. மிரட்டியோ, மூளைச்சலவை செஞ்சோதான், திவ்யாவை அவங்க கட்டுப்பாட்டுல வெச்சிருக்காங்க. அவங்​களால என் மனைவியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்​டுடக் கூடாதுங்கிறதுதான் என்னோட பயம். அதற்காகத்தான் போலீஸில் புகார் கொடுத்துட்டுக் காத்திருக்கேன்'' என்றார்.

இளவரசனின் பெற்றோரான இளங்கோவனும் கிருஷ்ண​வேணியும், ''கிளம்பிப் போறதுக்கு ரெண்டு மணி நேரத்துக்கு முன்ன வரைக்கும் திவ்யா சகஜமாத்தான் இருந்துச்சு. எங்க மகன்கிட்ட அத்தனை பாசமா இருந்துச்சு. இப்போ திரும்பி வர மறுக்குதுன்னா, அதுக்கு அவங்க அம்மாவும் உறவுக்​காரங்களும்தான் காரணம். உடம்பு சரியில்லைனு நாடகமாடி வரவழைச்சுட்டு, எங்க மருமகளை எங்கேயோ மறைச்சுவெச்சிருக்காங்க. தயவுசெஞ்சு திவ்யாவை மீட்டுக்கொடுத்துடுங்க. எங்க மகன் திவ்யா மேல உசுரையே வெச்சிருக்கான்..'' என்று போலீஸ் ஸ்டேஷனில் கதறி அழுதனர்.

6-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தனது அம்மா மற்றும் வழக்கறிஞர்களுடன் வந்தார் திவ்யா. அவருக்கு முன்பாகவே இளவரசன் அங்கே காத்திருந்தார். நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஜெயச்சந்திரன் முன்பு திவ்யா ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள் தனியாகப் பேசினர். பிறகு, 'மனரீதியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இப்போது திவ்யா குழப்பமான மனநிலையில் உள்ளதாக எங்களிடம் தெரிவித்தார். அதனால் சில நாட்களுக்குத் தன் அம்மாவுடன் இருக்க விரும்புவதாகச் சொன்னார். அவரின் விருப்பப்படி, அம்மாவுடன் செல்ல நீதிமன்றம் அனுமதிக்கிறது. திவ்யா, இளவரசன் ஆகிய இருவருக்குமே போலீஸ் பாதுகாப்புக் கொடுக்கப்பட வேண்டும். இந்த வழக்கின் மீதான அடுத்த கட்ட விசாரணையை ஜுலை 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்’ என்று சொன்னார்கள்.

திவ்யாவை நீதிமன்றத்துக்கு அழைத்துவந்த பா.ம.க-வின் வழக்கறிஞர் பாலுவிடம் பேசினோம். ''திவ்யா நேற்றே தாலியைக் கழற்றி அவரது அம்மா​விடம் கொடுத்துவிட்டார். அந்தப் பையனுடன் வாழ முடியாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். இனி சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம். மற்றபடி இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் கிடையாது'' என்றார்.

திவ்யாவின் உறவினர் சிலரிடம் விசாரித்தோம். ''திவ்யாவை யாரும் திட்டமிட்டெல்லாம் கூட்டிக்கிட்டுப் போகலை. உண்மையாகவே உடம்பு சரியில்லாம இருந்த அம்மாவைப் பார்க்கத்தான் வந்திருக்கார். அப்போ, தன் அம்மா தேன்மொழியிடம் சமீப காலமா தன் கணவர் வீட்டில் கொடுமைக்கு ஆளானதா அழுதிருக்கார். மேலும், கணவரோடு சேர்ந்து வாழ விருப்பம் இல்லைன்னும் சொல்லியிருக்கார். அதனாலதான் மகள் மீது இருந்த பாசத்தால், அவரை எங்கேயோ பாதுகாப்பான இடத்துக்கு திவ்யாவின் அம்மா கூட்டிட்டுப் போயிட்டாங்க. கல்யாணம் கட்டிக்​கிட்ட பையனை பிரிஞ்சு வந்திருக்குனா, அந்தப் பொண்ணுக்கு எவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கும்?'' என்றனர்.

'அம்மாவுடன் போகிறேன்!'

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த சிலரோ, ''மிரட்டல் மூலம்தான் திவ்யா அவங்க பேச்சுக்கு அடங்கிப் போயிருக்கார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மூணு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழு, வருகிற 9-ம் தேதி உண்மையறியும் விசாரணைக்காகக் கலவரப் பாதிப்பு கிராமங்களுக்கு வர இருக்காங்க. இந்த நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு. அரசியல் ஆதாயத்துக்காக இதைவைத்து பா.ம.க. ஏதோ சதிசெய்வதாக உணர்கிறோம்'' என்றனர்.

மீண்டும் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்தக் காதல்!

- எஸ்.ராஜாசெல்லம், ஜோ.ஸ்டாலின்

படங்கள்: பா.கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism