Published:Updated:

நல்லது செய்தால் நிலைக்க முடியாதா?

மிஸ்ராவை 'மிஸ்' செய்த மதுரை

நல்லது செய்தால் நிலைக்க முடியாதா?

மிஸ்ராவை 'மிஸ்' செய்த மதுரை

Published:Updated:
##~##

அ.தி.மு.க. ஆட்சியில் அதிகாரி​கள் மாற்றம் என்பது அமைச்சர்​கள் மாற்றத்தைவிட சர்வ சாதாரண​மான விஷயம்தான். ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் 32 முறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால், மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மாற்றத்தைக் கொஞ்சம்கூட ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறார்கள் மதுரை மக்கள்.

 சில அதிகாரிகள், நேர்மையாக இருப்பார்கள். சிலர், தனக்குக் கீழ் பணிபுரிபவர்களையும் நேர்மையாக இருக்கவைப்பார்கள். சிலர், ஏழைகள் மீது  பரிவு காட்டுபவர்களாக இருப்பார்கள். இன்னும் சிலரோ, அதிகார வர்க்கத்தோடு துணிச்சலாக மோதுபவர்களாக இருப்பார்​கள். வேறு சிலரோ, புதிது புதிதாக சிந்தித்து திட்டங்களை வகுப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். இத்தனை சிறப்புகளையும் ஒருங்கே பெற்ற கலெக்டர், அன்சுல் மிஸ்ரா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவருடைய மகத்தான சாதனைகளில் ஒன்று, ஃபேஸ்புக் பக்கம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 28-ம்

நல்லது செய்தால் நிலைக்க முடியாதா?

தேதி தொடங்கப்​பட்ட  'கலெக்டர் மதுரை’ என்ற இவரது ஃபேஸ்புக் பக்கத்தில், இதுவரை மனு கொடுத்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்துக்கும் மேல். தியேட்டரில் டிக்கெட் கட்டணம் அதிகம் என்றால், அந்த டிக்கெட்டை அப்படியே செல்போனில் படம் பிடித்து இந்தப் பக்கத்தில் போட்டுவிட்டால் போதும்; அந்தக் காட்சி முடிவதற்குள் தியேட்டரில் ரெய்டு நடக்கும். இப்போது தமிழகத்திலேயே அரசுக் கட்டணம் வசூலிக்கப்படும் ஒரே மாவட்டம், மதுரை மட்டுமே.

தன் ஃபேஸ்புக் பக்கத்தை கிராமப்புற மக்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்​டும் என்ற நோக்கத்தில், கிராமப்புற கம்ப்யூட்டர் சென்டர் பணியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளித்தார். எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் வாய்மொழியாகச் சொல்கிற புகார்களை, எப்படி சுருக்கமாக ஃபேஸ்புக் புகாராகப் பதிவுசெய்ய வேண்டும் என்று அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பிறகு, குக்கிராமங்களில் இருந்து முதியோர்களின் கோரிக்கைகள்கூட ஃபேஸ்புக் வழியாக வர ஆரம்பித்தன. மலைவாழ் மக்கள்கூட தங்கள் பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும்படி ஃபேஸ்புக் வழியாகக் கோரிக்கைவிடுத்தனர். தன் கோழியைப் பறித்துச் சென்றவர் பற்றி கிராமத்துச் சிறுவன் ஒருவன், ஃபேஸ்புக்கில் புகார்செய்து அந்தக் கோழியை மீட்டதுகூட நடந்தது. அப்படிப்பட்டவர் இன்று மதுரையைவிட்டு மாற்றப்பட்டுள்ளார்.

கலெக்டர் மாற்றத்துக்குக் காரணம் என்ன?

தன் நேர்மையால் புகழ்பெற்ற சகாயம், கிரானைட் விவகாரத்தால் இடமாற்றம் செய்யப்பட்டபோது, அவருக்குப் பதில் நியமிக்கப்பட்டவர்​தான் அன்சுல் மிஸ்ரா. கடந்த 28.5.12 அன்று பொறுப்பேற்ற அன்சுல் மிஸ்ராவிடம் நிருபர்கள் கேட்ட முதல் கேள்வி, 'கிரானைட் விவகாரத்தில் சகாயத்தைப்போல, நீங்களும் துணிச்சலாக நடவடிக்கை எடுப்பீர்​களா?' என்பதுதான். அந்தக் கேள்விக்கு தன் செயலால் பதில் சொன்னார் அன்சுல். கிரானைட் ஊழலை விசாரிப்பதற்கு என்றே நியமிக்கப்பட்ட சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிபோல, பம்பரமாகச் சுழன்று பணி​யாற்றினார். சகாயம் இருந்தபோது, மாவட்ட நிர்வாகத்துக்கும் காவல் துறைக்கும் இடையே ஒரு விரிசல் இருந்தது. அதையும் சரிப்படுத்தி காவல் துறையினரின் உதவியுடன் கிரானைட் கும்பல் மீது பல கிரிமினல் வழக்குகளைப் போட்டார். பி.ஆர்.பி. உள்ளிட்ட பெரும் நிறுவனங்களுக்குக்கூட துணிச்சலுடன் சீல் வைத்தார்.

கிரானைட் அதிபர்களின் கொழுத்த பணம், தன் வழக்கமான பாணியில் அனைத்தையும் வளைக்கப்

நல்லது செய்தால் நிலைக்க முடியாதா?

பார்த்தது. அதற்கு அ.தி.மு.க. வழக்கறி​ஞர்கள் சிலரே உடந்தையாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த அன்சுல், அந்த வழக்கறிஞர் பற்றி அரசுக்கு எட்டு பக்கக் கடிதம் ஒன்றை அனுப்பினார். உடனே அந்த வழக்கறிஞரை மாற்றிவிட்டு, புதிதாக ஒருவரை நியமித்தது அரசு.

பறிமுதல் செய்யப்பட்ட கிரானைட் கற்களை உள்ளூரிலேயே ஏலம் விட்டு சம்பாதிக்க வேண்டும் என்பது, சிலரது விருப்பம். ஆனால், 'ஆன்லைன் மூலம் சர்வதேச அளவில்தான் டெண்டர் விடுவோம். அப்போதுதான் அந்தக் கற்களுக்கான உண்மையான, முழுமையான மதிப்பும் அரசின் கஜானாவுக்கு வரும்’ என்று விடாப்பிடியாக இருந்தார் அன்சுல். இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், இனிமேல் இந்தத் தொழிலில் கொள்ளை லாபம் சம்பாதிக்க முடியாது என்று அலறினர் தமிழக கிரானைட் அதிபர்கள்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் நியமனத்தில், ஆளும் கட்சியினரின் பரிந்துரைகளைக் குப்பையில் தூக்கிப்போட்டார் அன்சுல். இதே காரியத்தைச் செய்ததற்காக, விருதுநகர் கலெக்டர் மாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும், பின்வாங்கவில்லை அன்சுல். ஊரகப் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை திடீர் திடீரென ஆய்வுசெய்தவர், முறைகேடு நடந்திருப்பதை அறிந்தால்... சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தையே ரத்துசெய்தார். தரமற்றப் பணிகளைச் செய்த கான்ட்ராக்டர்களை எச்சரித்தபோது, 'எம்.எல்.ஏ-க்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கிறதே?’ என்றனர். 'கொடுக்காதீர்கள்’ என்று துணிச்சலாகச் சொன்னார் அன்சுல். இந்த விவகாரத்தால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேர், கடந்த 15.6.13 அன்று மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ஒரு கூட்டம் போட்டனர். 13 பஞ்சாயத்து யூனியன்கள், மூன்று நகராட்சிகள், ஐந்து பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளை அலங்கரிக்கும் அ.தி.மு.க. பிரமுகர்கள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், கலெக்டரை மாற்ற வேண்டும் என்று தீர்மானம் போட்டு அரசுக்கு அனுப்பினர். ஆனாலும், அன்சுல் அசரவில்லை.

வருவாய்த் துறையில் முறைகேடுசெய்த ஆட்கள் அதிகம் இருப்பதைப் பார்த்து, அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். மூன்று தாசில்​தார்கள் உட்பட சுமார் 20 பேரை சஸ்பெண்ட் செய்தார். அவரது நடவடிக்கைக்குப் பயந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், இனிமேல் லஞ்சம் வாங்கவே மாட்டேன் என்று கலெக்டரிடம் உறுதிமொழிப் பத்திரம் எழுதிக் கொடுத்தனர்.

மதுரை மாநகராட்சியில் அதிகாரிகள் பண வேட்கையுடன் அலைவதையும், முறைகேடாகப் பல கட்டடங்களுக்கு அனுமதி கொடுத்ததையும் அறிந்து வேதனைப்பட்டார் அன்சுல். அவரு​டைய ஆலோசனைகளை மாநகராட்சி அதிகாரிகள் கேட்காதபோது, 'போகட்டும்’ என்று விட்டுவிடவில்லை. தன்னுடைய பணி நெருக்​கடியிலும்கூட மாநகராட்சி விவகாரங்களில் தலையிட்டார். சுமார் 40 பிரமாண்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுத்தார். அவர்கள் கோர்ட்டுக்குச் சென்றபோது, அங்கேயும் தன் தரப்பு வாதத்தை அழுத்தமாக வைத்தார்.

ரிங்ரோடு டோல்கேட்டில் சகட்டுமேனிக்கு வசூல் செய்துவந்த மாநகராட்சி ஊழியர்கள் மீது புகார்கள் வர, புறநகர் காவல் துறை எஸ்.பி. உதவியுடன் அங்கே ரெய்டு நடத்தப்பட்டது. இதில் கையும் களவுமாகச் சிக்கிய 10 ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டனர். அதில் இருவர் மாநகராட்சி ஊழியர்கள் என்பதால் பரபரப்பானது.  மாநகராட்சி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். இதுதொடர்பாக கலெக்டருக்கு எதிராக மாநகராட்சியில் தீர்மானம் போடும் வேலையிலும் சிலர் இறங்கினர். இந்த நிலையில் அன்சுல் மாற்றப்பட்டுள்ளார்.

இடமாற்றம் குறித்து அன்சுல் மிஸ்ராவிடம் கேட்டபோது, ''என்னுடைய இந்த ஒரு வருடப் பணி மிகவும் திருப்திகரமாக முடிந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியுடன் பல நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறேன். மதுரை​யின் புகழை உலகறியச் செய்யும் 'மாமதுரை போற்றுவோம்’ நிகழ்ச்சியை நடத்த உறுதுணையாக இருந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கிரானைட் கற்களை சர்வதேச டெண்டர் விடுவதற்கான ஆயத்தப் பணிகள் நடந்துவருகின்றன. இன்னும் ஒரு மாதம் இருந்திருந்தால், டெண்டர் வந்திருக்கும். அந்த வேலையை முடிக்காமல் போகிறோமே என்ற சின்ன வருத்தம் இருக்கிறது. மற்றபடி, நான் மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்.

நான் இங்கிருந்து சென்றாலும், ஃபேஸ்புக் புகார்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். காரணம், இதே பாணியில் தொடர்ந்து புகார்களைப் பெற்று நடவடிக்கை எடுப்பதற்காக மதுரை மாவட்டத்துக்கு என்று ஒரு சிறப்புத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு 75 லட்சம் ரூபாய் அனுமதித்துள்ளது. எனவே வருங்காலத்தில் மதுரை மாவட்ட வெப்சைட், அரசு வெப்சைட் போன்றவற்றிலும் எனது ஃபேஸ்புக் பக்கம் மாதிரியான ஓர் அமைப்பு ஏற்படுத்தப்படும். தவறு செய்யக் கூடாது, எங்கே தவறு நடந்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது என்ற உறுதியுடன், தொடர்ந்து மதுரை மாவட்ட நிர்வாகத்​துக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்'' என்றார்.

அன்சுலின் இடமாற்றத்தை மதுரை மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஃபேஸ்புக்கில் இதுதொடர்பாகக் கடுமையான கருத்துக்களைத் தெரி​வித்த வண்ணம் இருக்கிறார்கள். ''ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், கிரானைட் வர்த்தகம்தான் இதில் முக்கியமாக விளையாடியிருக்கிறது'' என்றே சொல்கிறார்கள். இது ஜெயலலிதாவுக்குக் கெட்ட பெயரைத்தான் ஏற்படுத்தும்!

- கே.கே.மகேஷ்

படங்கள்: பா.காளிமுத்து

 அடுத்த குறி பாலகிருஷ்ணனுக்கா?

நேர்மையான கலெக்டர் சகாயம், நேர்மையான எஸ்.பி. ஆஸ்ரா கர்க் ஆகியோர் இடையே உரசல் ஏற்பட்டதும், அதைத் தொடர்ந்து அவர்கள் இருவருமே இடமாற்றம் செய்யப்பட்டதும் ஊரறிந்த விஷயம். ஆனால், அன்சுல் மிஸ்ராவும் எஸ்.பி. பாலகிருஷ்ணனும் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல செயல்பட்டனர். கிரானைட் கும்பலைக் கைதுசெய்தது முதல் பல்வேறு நடவடிக்கைகளை உதாரணமாகச் சொல்லாம். கடைசியாகப் பணியில் இருந்து விலகியபோதுகூட எஸ்.பி-யைப் பாராட்டத் தவறவில்லை அன்சுல் மிஸ்ரா. தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாலகிருஷ்ணனின் சிறப்பான செயல்பாடுகளுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்திருந்தார் கலெக்டர். அன்சுல் மிஸ்ராவின் இடமாற்றத்தில் அ.தி.மு.க. பிரமுகர்கள் பலருக்கும் மகிழ்ச்சி. அவர்கள் எஸ்.பி. பாலகிருஷ்ணனையும் இடம் மாற்றத் துடிக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism