Published:Updated:

கருணாநிதி கட்டுப்பாட்டில் கட்சி இல்லை!

முகாம் மாறிய பரிதி அதிரடி!

கருணாநிதி கட்டுப்பாட்டில் கட்சி இல்லை!

முகாம் மாறிய பரிதி அதிரடி!

Published:Updated:
##~##

'பறக்கத் தயாராகிவிட்டார் பரிதி’ என மூன்று வாரங்களுக்கு முன் கழுகார் தகவல் தந்திருந்தார். இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி அ.தி.மு.க-வில் ஐக்கியமாகிவிட்டார் பரிதி இளம்வழுதி! தி.மு.க. சார்பில் ஆறு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு துணை சபாநாயகராகவும் செய்தித் துறை அமைச்சராகவும் பொறுப்புவகித்து, தி.மு.க-வின் அசைக்க முடியாத தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் பரிதி இளம்வழுதி. 1991-96 காலகட்டத்தில் தி.மு.க. சார்பில் சட்டசபைக்குச் சென்ற ஒரே உறுப்பினர், பரிதிதான். அந்த நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்களால் தினந்தோறும் தாக்கப்பட்டு, சபையில் இருந்து தூக்கி வீசப்படுவார் பரிதி. இன்று, தன்னுடைய மனவலிக்கு மருந்து தேடி, அதே அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். 

''தி.மு.க-வின் தலைமைக்கு மிக நெருக்கமாக நம்பிக்கையானவராக இருந்த நீங்கள், அங்கு இருந்து விலகக் காரணம் என்ன?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தி.மு.க-வுக்காக ரத்தம் சிந்தி உழைத்த லட்சக்கணக்​கான தொண்டர்களில் ஒருவனாக இருந்தேன். எவ்வளவு இன்னல்களை அனுபவித்து அந்தக் கட்சிக்காக நேர்மையாக உழைத்தேன் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. வரலாறு அதற்கு சாட்சி. அதனால்தான் கருணாநிதியே

கருணாநிதி கட்டுப்பாட்டில் கட்சி இல்லை!

என்னை இந்திரஜித், அபிமன்யு என்றெல்லாம் புகழ்ந்தார். ஆனால், அன்றைய நிலை இப்போது அந்தக் கட்சியில் இல்லை. புல்லுருவிகளுக்கும் துரோகிகளுக்கும் இடமளிக்கும் கூடாரமாக தி.மு.க. மாறிவிட்டது. இதை நான் சுட்டிக்​காட்டத் தொடங்கியதும், துரோகிப் பட்டம் கட்டினர். என் நிலையை பல முறை கருணாநிதியிடம் எடுத்துக் கூறியும் அவரால் ஒன்றும் செய்ய முடிய​வில்லை. ஏனென்றால், கட்சி அவரிடம் இல்லை. செயல்படாத தலைவராகத்தான் இப்போது அவர் இருக்கிறார். நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். எதற்கும் ஓர் எல்லை இருக்கிறது அல்லவா? அதனால், இப்போது பொங்கி எழுந்துவிட்டேன்.''

''புல்லுருவிகள், துரோகிகள் என்று நீங்கள் குறிப்பிடுவது?''

''2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெறும் 202 வாக்குகளில் தோற்றேன். அதற்குக் காரணம், கட்சிக்குள்ளேயே இருந்துகொண்டு கட்சிக்கு எதிராக சிலர் பார்த்த வேலைகள்தான். அவர்களைப் பற்றி கருணாநிதியிடம் சொன்னேன். சம்பந்தப்பட்டவர்களைக் கட்சியில் இருந்து நீக்கினார். ஆனால், அடுத்த வாரமே ஸ்டாலின் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டார். ஒரு இடத்தில் கட்சி தோற்றாலும் பரவாயில்லை. தன்னுடைய எடுபிடிகள் கட்சிக்குள் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். இப்படி நினைத்தால், அந்தக் கட்சி உருப்படுமா?

கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இப்போது அந்தக் கட்சி இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. கட்சிக்கு ரவுடிகளையும் புல்லுருவிகளையும் கொண்டுவந்து அந்தக் கட்சியை ஸ்டாலின் அழித்துக்கொண்டிருக்கிறார். இனி அண்ணாவே வந்தாலும், கருணாநிதியின் குடும்ப வாரிசுகளிடம் இருந்து தி.மு.க-வை மீட்க முடியாது. அவருடைய குடும்பப் பாசத்தால், கட்சியையும் குடும்பச் சொத்தாக மாற்றிவிட்டார்.''

கருணாநிதி கட்டுப்பாட்டில் கட்சி இல்லை!

''தி.மு.க-வில் இருந்த நேரத்தில், அ.தி.மு.க. தலைமையைக் கடுமை​யாக விமர்சித்தவர் நீங்கள். இப்போது அங்கு இணைந்து பணியாற்று​வது தர்மசங்கடமாக இருக்காதா?''

''மிக நேர்மையான, கட்டுக்​கோப்பான அம்மாவின் தலை​மையில் அ.தி.மு.க. இயங்கு​கிறது. இதை நான் இரண்டு வருடங்களுக்கு முன்பே புரிந்து​கொண்டேன். நீங்கள் குறிப்பிட்டதுபோல், ஒரு குற்ற உணர்ச்சியின் காரணமாக அ.தி.மு.க-வில் என்னை இணைத்துக்கொள்ளவில்லை. ஆனால், என்னுடைய இரண்டு வருட மன வேதனைக்கு மருந்திடும் விதமாக எனக்கு முறையான அழைப்பு வந்தது. நான் அம்மா அவர்களைச் சந்தித்தபோது, என்னை அமரவைத்து கனிவுடன் நடத்திய அந்த நேரத்தில், அந்தக் குற்ற உணர்ச்சி என்னைவிட்டு மறைந்துவிட்டது. அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை என்னிடம் வழங்கிய நேரத்தில், 'நீங்கள் எதையும் மனதில் வைத்துக்​கொள்ளாமல், சிறப்​பாகப் பணியாற்றுங்கள்’ என்று அம்மா கூறினார். இதுதான் தலைமைப் பண்பு. அங்கு (தி.மு.க.) போனால், கருணாநிதி 'ஙே...’ என்பார். மேடையில் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கைப் பறித்து 'நீ பேசுனது போதும்... போ, போ...’ என்று ஸ்டாலின் முகத்தைச் சுளிப்பார். அது தலைமைக்கு அழகா? அதனால்தான் அந்தக் கட்சி அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.

தன்னம்பிக்கையுடன் சிறப்பான தலைமைப் பண்புகளுடன் செயல்படுவதால்தான், அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை புரட்சித் தலைவியால் கட்டிக்காக்க முடிகிறது. நான் பொறுப்புக்களை எதிர்பார்த்து இந்த இயக்கத்தில் என்னை இணைத்துக்கொள்ளவில்லை. என்னுடைய மனவேதனைக்கு மருந்து தேடியே இங்கு வந்தேன். அதை அம்மா அவர்கள் எனக்கு வழங்கியுள்ளார். இனி அவருடைய கட்டளைப்படி தீவிரமாகப் பணியாற்றுவது ஒன்றே என் குறிக்கோள்!''

அ.தி.மு.க. மேடைக்கு இன்னொரு பீரங்கி கிடைத்துவிட்டது!

- ஜோ.ஸ்டாலின்,

படம்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism