Published:Updated:

முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது!
முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது!

விழுப்புரம், ஆக.31,2011

முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது!

நில அபகரிப்பு புகார் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி இன்று விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டார். ##~~##

விழுப்புரம் தந்தை பெரியார் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் அளித்த புகாரில், 'தந்தை பெரியார் கூட்டுறவு வீடு கட்டும் ஊழியர் சங்கத்தின் பொது வைப்பு நிதியில் இருந்து 32 ஏக்கர் நிலம் சங்க தலைவர் பாலசண்முகத்தின் பெயரில் 1992-ம் ஆண்டு வாங்கப்பட்டது. பின்னர் அவை 393 வீட்டு மனைகளாக போடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

மீதம் இருந்த 61 ஆயிரத்து 600 சதுரடி இடம் பொது பயன்பாட்டிற்காக அதாவது பள்ளி கட்டிடம், சமுதாய கூடம், நீர் தேக்க தொட்டிகள், விளையாட்டு திடல், பூங்கா போன்றவை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டது.

2005-ம் ஆண்டு கூட்டுறவு நலன் கருதி அந்த இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்காக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

போலி ஆவணங்கள் மூலம் தந்தை பெரியார் கூட்டுறவு வீடு கட்டும் ஊழியர் சங்க செயலாளர் சாந்தி மற்றும் பணியாளர்கள் துணையோடு குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டு (1 சதுரடி விலை ரூ.100) சிகா கல்வி அறக்கட்டளைக்கு ரூ.61 லட்சத்து 6 ஆயிரத்துக்கு இந்த நிலத்தை விற்பனை செய்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து சங்க செயலாளர் சாந்தியை கைது செய்தனர். சாந்தி கொடுத்த வாக்குமூலத்தில், முன்னாள் அமைச்சர் பொன்முடி என்னை மிரட்டியதால் போலி ஆவணங்கள் தயார் செய்ய உறுதுணையாக இருந்தேன் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.

 இந்தப் புகாரின் பேரில், அவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். பொன்முடி கைது செய்யப்பட்டபோது, அவரது வீட்டின் முன்பு கூடிய நூற்றுக்கணக்கான திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, விழுப்புரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி வீட்டுக்கு அருகே போலீஸார் காலையில் குவிக்கப்பட்டிருந்தனர்.

பொன்முடி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தகவல் பரவியதும், அங்கு திமுக தொண்டர்களும், ஆதரவாளர்களும் திரளத் தொடங்கினர்.

இதையடுத்து, மதியம் 2 மணியளவில் பொன்முடி வீட்டுக்குள் தனிப்படை போலீஸார் நுழைய முயன்ற போது, அங்கிருந்த தொண்டர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக தொண்டர்கள் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, மதியம் 2.15 மணியளவில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அடுத்த கட்டுரைக்கு