Published:Updated:

நான் கவிதா திருமாவளவன் வந்திருக்கிறேன்!

மறுக்கும் சிறுத்தைகள்

##~##

திருமாவளவன் மீது திடுக் புகார் ஒன்றைச் சொல்லி இருக்கிறார் கோவையைச் சேர்ந்த கவிதா. 'இது மிகப்பெரிய சதி’ என்று மறுக்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள். திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட இந்தக் கதை கப்ஸாவா, ப்ளாக் மெயிலா... உண்மை என்ன? விசாரணையில் இறங்கினோம். 

போட்டோவுடன் வந்தார்!

கடந்த வாரம் 51-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். இந்தச் சூழலில்தான் அவர் மீது புகார். தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி திருமாவளவன் ஏமாற்றிவிட்டதாகச் சொல்லும் கவிதா, தான் தத்தெடுத்த குழந்தையின் பிறந்தநாளுக்கு வந்து திருமாவளவன் வாழ்த்தியதற்கு ஆதாரம் இதோ என்று  போட்டோக்களையும் காண்பித்தார். 'கவிதா திருமாவளவன்’ என குறிப்பிட்ட வங்கிக் கணக்கு ஆவணங்களையும் அவர் வைத்திருந்தார்.

நான் கவிதா திருமாவளவன் வந்திருக்கிறேன்!

'டெல்லி ஷாப்பிங் மாலில் பார்த்தேன்!’

கோவை போலீஸ் கமிஷனரைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு கவிதாவிடம் பேசினோம். ''எங்க அப்பா சுந்தரம், பிசினஸ்மேன். கடந்த 2004-ம் வருஷம் பிப்ரவரி மாசம் எங்க அம்மா, ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க. அதுக்கு அப்புறம் எனக்கு செந்தில் என்பவரைத் திருமணம் செய்துவெச்சாங்க. ஆரம்பத்துல இருந்தே எங்களுக்குள்ளே ஒத்துப்போகலை. இந்த நேரத்துலதான் திருமாவளவனோட அறிமுகம் கிடைச்சது. 2011-ம் வருஷம் டெல்லியில ஒரு ஷாப்பிங் மாலில் முதன்முதலா திருமாவளவனைச் சந்திச்சேன்.

நான் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறேன். அதுக்கு எம்.பி. ஒருத்தரோட பரிந்துரைக் கடிதம் வேணும். அதுக்காக மீண்டும் அவர்கிட்ட பேசினேன். இப்படி கொஞ்சம் கொஞ்சமா பழக ஆரம்பிச்சோம். எங்களுக்குள்ள பழக்கம் அதிகமாச்சு. என்னை திருமணம் செஞ்சுக்கறதா சொன்னார். இந்தச் சூழல்ல ஆறு மாசத்துக்கு முன் என் கணவரை விவாகரத்து செஞ்சேன். அதுவரை, என்னைக் கல்யாணம் பண்ணிக்கறதா சொன்னவர், விவாகரத்துக்குப் பிறகு கல்யாணத்துக்கு மறுத்தார். இளவரசன் மரணத்தைக் காரணம் காட்டி, 'நான் உன்னை லவ் பண்றேன். நீ பெரிய இடத்துப் பொண்ணு. உங்க சாதிக்கும் எங்க சாதிக்கும் எட்டாது. நம்ம கல்யாணம் எல்லாம் ஒத்து வராது’னு மறுத்தார்.

என் மகள் பிறந்தநாளுக்கு என் வீட்டுக்கு வந்திருக்கார். குழந்தையை எடுத்து கொஞ்சியிருக்கார். இன்னும் சொல்லிட்டே போகலாம்'' என்றவர், சமீபத்தியப் பிரச்னைக்கு வந்தார்.

'சொத்தை அபகரிக்க நினைத்தார்கள்!’

''திருமாவளவன் பெயரைச் சொல்லி சிலர் என் சொத்துக்களை அபகரிக்கத் தொடங் கினர். கோவை, கணபதி பகுதியில் எனக்கு சொந்தமான இடத்தை இன்ஜினீயர் கார்த்தி, அவரது மனைவி ஜெயந்தி, அவருடைய தம்பி சீனிவாசன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் லீஸுக்குக் கேட்டனர். கார்த்தி என்பவர் எனது உதவியாளர் லதா மகேஸ்வரியின் கணவர் சந்துருவின் நண்பர்.

நான் கவிதா திருமாவளவன் வந்திருக்கிறேன்!

ஒருகட்டத்தில், அந்த இடத்தை பவர் எழுதிக் கொடுக்குமாறு அவர்கள் என்னை மிரட்ட ஆரம்பித்தனர். எனக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் கொடுத்தனர். என்னை ஒரு இடத்தில் அடைத்துவைத்து கோடிக்கணக்கான மதிப்புள்ள எனது இடத்தை சில லட்சங்களுக்கு பவர் எழுதி வாங்கிக் கொண்டனர். பணத்தைக் கொடுப்பது போல் கொடுத்து பறித்துக்கொண்டனர். இவர்களுக்குப் பின்னணியில் இருப்பவர் திருமாவளவன். போலீஸ் எனது சொத்துக்களை மீட்டு, உயி ருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

'தலைவரைத் தலையிட வைக்கிறேன்!’

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு இதுதொடர்பாக நம்மிடம் பேசினார்.

''கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவிதா கொடுத்த புகார் மனுவில் எந்த இடத்திலும் திருமாவளவன் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், பேட்டியில் திருமாவளவன் பற்றி அவதூறு செய்திகளைக் கூறியுள்ளார். தான் எடுத்து வளர்க்கும் குழந்தையின் பிறந்தநாளுக்கு கவிதா அழைத்ததன் பேரில் கட்சித் தலைவர் எனும் அடிப்படையில் அந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்துகொண்டார். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அதன் பிறகு கட்சி தொடங்கும் தொலைக்காட்சிக்கு நிதி அளிக்க விரும்புவதாகச் சொல்லி தலைவரை சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தத் தொடர்பும் இல்லை.

கவிதா, கட்சியின் கொடியைக் காரில் கட்டிக்கொண்டு, தன்னுடன் வியாபாரத்தில் உள்ளவர்களை மிரட்டியுள்ளார். அவர்களில் சிலர் பணம் தராமல் இழுத்தடித்துள்ளனர். தலைவரின் கார் டிரைவர் முத்துப்பாண்டி யிடம் கவிதா பேசி, பணம் வாங்கித்தரச் சொல்லியிருக்கிறார். 'இதில் நாங்கள் தலையிட முடியாது’ என்று முத்துப்பாண்டி சொல்லிவிட்டார். இதில் கோபம்அடைந்த கவிதா, 'உங்க தலைவரை நான் தலையிட வைக்கிறேன்’ என்று கோபமாகச் சொன்னாராம். அதன்பிறகே கவிதா இப்படி ஒரு புகாரைக் கொடுத்திருக்கிறார். கவிதா புகார் சொல்லும் நபர்கள் யாரும் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை. கவிதா மீது கட்சி சார்பில் புகார் கொடுப்போம்'' என்றார்.

'எங்களுக்கும் சிறுத்தைகளுக்கும் சம்பந்தம் இல்லை!’

கவிதாவிடம் இடத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாகச் சொல்லப்படும் கார்த்திக் என்பவரை தொடர்புகொண்டோம். அவரது செல்போனை சீனிவாசன் என்பவர் எடுத்தார். இவரும் இந்தப் பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்தான். ''நாங்கள் தங்க வியாபாரம் செய்து வருகிறோம். எங்களிடம் தன்னுடைய நிலத்தை விற்றுத் தரச்சொல்லி பவர் எழுதிக்கொடுத்தார் கவிதா. இதுவரை இரண்டே முக்கால் கோடி ரூபாய் கொடுத்துவிட்டோம். எங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் சம்பந்தமே இல்லை. முடிந்தவரை பணத்தை பெற்றுகொண்டு இப்போது தேவையில்லாமல் எங்கள் மீது புகார் கொடுத்துள்ளார். நாங்களும் காவல் துறையில் புகார் செய்வோம்'' என்று சொன் னார்.

நான் கவிதா திருமாவளவன் வந்திருக்கிறேன்!

பா.ம.க. தூண்டுதலா?

கவிதாவின் புகாரின் அடிப்படையில் உடனடியாக விசாரணையை ஆரம்பித்தது கோவை போலீஸ். முதல்கட்ட விசாரணை முடிந்து திரும்பிய கவிதாவிடம் மீண்டும் பேசினோம். ''என்னையும், என் குடும்பத்தாரையும் கேவலப்படுத்தும் முயற்சியில் திருமாவளவன் ஈடுபட்டுள்ளார். சாதி இல்லை என்று சொல்பவர் ஏன் என்னைத் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார்? ராமதாஸ் சொல்லி நான் இந்தப் புகாரைச் சொல்வதாக கூறுகின்றனர். அவர் யாரென்று எனக்குத் தெரியாது. அப்படி சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. அவருடன் நான் பழகிய காலத்தில் இருந்தே, கட்சிக் கொடியை காரில் கட்டியிருக்கிறேன். கட்சிக் கொடியை கட்டிக்கொண்டுதான் அவரது அலுவலகத்துக்கும் போனேன். எனக்கு இருக்கும் வசதிக்கு கட்டப்பஞ்சாயத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை'' என்று மறுத்தார்.

'அப்பான்னு சொல்லு!’

கவிதாவைப் பற்றி விடுதலைச் சிறுத்தைகள் வட்டாரத்தில் பேசினோம். ''கவிதா, 'நான் ஒரு குழந்தையை தத்து எடுத்துள்ளேன். அந்தக் குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்கு வர வேண்டும்’ என்று திருமாவளவனை அழைத்தார். கட்சிக்காரர்கள் வீட்டு விழாவுக்கு போவதுபோலத்தான் அங்கும் தலைவர் சென்றார். போன இடத்தில் அந்தக் குழந்தையை தலைவரின் கையில் கொடுத்தார் கவிதா. குழந்தையை தலைவர் வாங்கியதும், 'அப்பான்னு சொல்லு... அப்பான்னு சொல்லு’ என்று கவிதா சொன்னார். அப்போதே தலைவரும் மற்றவர்களும் முகம் சுளித்தனர்.

சில மாதங்கள் கழித்து, கோவையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கட்சி அலுவலகத்தில் தலை வரைச் சந்தித்தார். 'கவிதா உங்கள் பெயரைச் சொல்லி மிரட்டுகிறார்’ என்று சொன்னார். 'அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று தலைவர் சொல்லிவிட்டார். உடனே கவிதாவின் தம்பியை அழைத்து தலைவர் கண்டித்தார். அவரோ, 'எங்கள் அக்காவுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் சம்பந்தம் இல்லை. அவர் செய்வது எதுவும் சரியில்லை என்பதால் நாங்கள் அவரை ஒதுக்கி வைத்துவிட்டோம்’ என்று சொன்னார்.

ஒருதடவை கோவை கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்ற இவர், 'நான் கவிதா திருமாவளவன் வந்திருக்கிறேன்’ என்று சொல்லி தன்னை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த விஷயம் தெரிந்து, தலைவரே கவிதாவை போனில் அழைத்துக் கண்டித்துள்ளார். இப்படி ஒரு சூழலில்தான் கவிதா புகார் கொடுத்துள்ளார்'' என்கிறார்கள்.

இரு தரப்பும் மாறி மாறிப் புகாரைச் சொல்ல ஆரம்பித்துள்ளது. போலீஸார் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- ச.ஜெ.ரவி