Published:Updated:

ஊழல் எதிர்ப்பு இயக்கம் தீவிரமடையும்: அத்வானி

Vikatan Correspondent

சென்னை, டிச.20,2010

ஊழலுக்கு எதிரான தங்களது எதிர்ப்பு இயக்கம் மேலும் தீவிரமாகும் என்றார், பிஜேபி மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. ##~~##

சென்னை வந்திருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், "நமது நாட்டில் தற்போது ஊழல் என்பது ஒரு பயங்கரமான நோயாக உருவெடுத்துள்ளது. இந்த நோய்க்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும்.

பி.ஜே.பி., ஊழலுக்கு எதிரான இயக்கத்தை தொடர்ந்து மேற்கொண்டு வரும் கட்சி ஆகும். விலைவாசி உயர்வு பிரச்சினையை போல இன்று ஊழலைப் பற்றி சாதாரண மக்கள்கூட கவலைப்பட ஆரம்பித்துள்ளனர். ஒட்டுமொத்த அரசியல்கட்சிகள் ஒன்றுசேர்ந்து ஊழலுக்கு எதிராக போராடவிட்டால் நம் நாட்டில் அமைதி இருக்காது.

சுப்ரீம் கோர்ட், இந்திய தலைமை கணக்கு தணிக்கை துறை, ஊடகங்கள் போன்ற ஜனநாயக சக்திகள், ஊழல் என்ற இந்த ஒற்றைப்பிரச்சினை நாட்டை கவலை அடையச்செய்திருப்பதை வெளிக்கொண்டுவந்துள்ளன.

இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை தொடங்கி ஸ்பெக்ட்ரம் விவகாரம் மற்றும் மும்பை ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் வரை தொடர்பான தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்தி ஊழல் என்பது நாட்டின் மிகப்பெரிய நோயாக வளர்ந்திருப்பதை சுட்டிக்காட்டுகின்றன.

பாராளுமன்றத்தில் குளிர்காலகூட்டத்தொடருக்கு முந்தைய கூட்டத்தொடர்களிலும் விலைவாசி உயர்வு மற்றும் ஊழல் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. ஊழலுக்கு எதிரான எங்களது எதிர்ப்பு இயக்கம் மேலும் தீவிரமாகும்," என்றார் அத்வானி.