Published:Updated:

மே.வ. போல் தமிழக அரசை மதிக்காதது ஏன்?- ராமதாஸ்

Vikatan Correspondent
மே.வ. போல் தமிழக அரசை மதிக்காதது ஏன்?- ராமதாஸ்
மே.வ. போல் தமிழக அரசை மதிக்காதது ஏன்?- ராமதாஸ்

சென்னை, செப்.8,2011

மே.வ. போல் தமிழக அரசை மதிக்காதது ஏன்?- ராமதாஸ்

இலங்கை அரசுடன் மத்திய அரசு செய்து கொண்ட மின் திட்ட ஒப்பந்தம் தமிழர்களை அவமதிக்கும் செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார். ##~~##

மேலும், வங்கதேசத்துடனான டீஸ்டா ஒப்பந்தம் விவகாரத்தில் மேற்கு வங்க அரசுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசு, தமிழகத்தை மதிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் நடைபெற்ற போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளர்களை போர்க்குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும் என்றும், அதுவரை இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இலங்கை கிழக்கு மாநிலத்தில் திரிகோண மலைக்கு அருகிலுள்ள சம்பூர் என்ற இடத்தில் ரூ.3,150 கோடி செலவில் 500 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்காக இந்திய அரசுக்கு சொந்தமான தேசிய அனல் மின் கழகமும், இலங்கை அரசுக்கு சொந்தமான சிலோன் மின் வாரியமும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி எதிர்ப்புத் தெரிவித்ததற்காக வங்கதேச பிரதமருடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கையெழுத்திட இருந்த டீஸ்டா ஆற்று நீர் பகிர்வு தொடர்பான ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிட்டிருக்கிறது.

மேற்குவங்க முதல்வர் வார்த்தை அளவில் தெரிவித்த எதிர்ப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரும் மத்திய அரசு, தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பொருட்படுத்தாதது அதிர்ச்சி அளிக்கிறது.

மேற்குவங்கம் என்றால் கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கும் மத்திய அரசு, தமிழகம் என்றால் மட்டும் கூட்டாட்சி தத்துவத்தை மதிக்காதது ஏன்? தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை மீறி இலங்கை அரசுடன் இந்தியா செய்துகொண்டுள்ள மின்திட்ட ஒப்பந்தம் ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கும் செயலாகும். இதை தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்," என்று ராமதாஸ் கூறியுள்ளார்.