Published:Updated:

`வசந்தகுமார் செயலால் எனது வெற்றி உறுதி'- காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்!

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்துள்ளது நாங்குநேரி தொகுதியில் போட்டியிட 37 வேட்பாளர்களுக்காக 46 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

nanangneri taluk office
nanangneri taluk office ( l.rajendran )

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடக்கிறது. இந்தத் தொகுதி, தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டார். அவர் இன்று நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசனிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

congress candidate filled nomination
congress candidate filled nomination
L.Rajendran

இந்த நிகழ்ச்சியில், தி.மு.க துணைப் பொதுச்செயலாளரான ஐ.பெரியசாமி, நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப், நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளருடன் இருந்த ஐ.பெரியசாமி, ’’வேட்பாளர் ரூபி மனோகரன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்’’ என நம்பிக்கை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் ரூபி மனோகரன், ’’நாங்குநேரி தொகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். விவசாயிகளுக்கு பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகி வருகிறார்கள்.

இங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸின் ஹெச்.வசந்தகுமார், தனது சொந்தப் பணத்தில் தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அதனால் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.
ரூபி மனோகரன், காங்கிரஸ் வேட்பாளர்
`2,56,414 வாக்காளர்கள்; 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!' - நாங்குநேரி இடைத்தேர்தல் அப்டேட்

அதனால் விவசாயிகள் பிரச்னைகளை முன்னிறுத்தி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்போம். இந்தப் பகுதியில் வேலைவாய்ப்பு உருவாகும் வகையில் செயல்படுவேன். இதற்கு முன்பு இங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஹெச்.வசந்தகுமார், தனது சொந்தப் பணத்தில் இளைஞர்களைப் படிக்க வைத்துள்ளார். குளங்களைத் தூர்வாரியிருக்கிறார். அதனால் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது’’ என்று தெரிவித்தார்.

நாங்குநேரி தொகுதிக்கான அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன் இன்று அதிகாலை அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து வானுமாமலை பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த அவர், தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

ADMK candidate filled nomonation
ADMK candidate filled nomonation
L.Rajendran

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ’’தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு நதி நீர் இணைப்பு திட்டம் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் தொகுதியில் நடைபெற்று வருகிறது, குடிமராமத்து திட்டத்தின் கீழ் அனைத்து கண்மாய்களும் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்களை முன்வைத்துத் தேர்தலைச் சந்திப்போம். மக்கள் ஆதரவுடன், அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்’’ என்றார்.

ஏற்கெனவே 9 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், மனுத் தாக்கலுக்குக் கடைசி நாளான இன்று மட்டும் 37 மனுக்கள் தக்கல் செய்யப்பட்டன. காங்கிரஸ், அ.தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் மது குடிப்போர் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவரான செல்லப்பாண்டியன் உள்ளிட்ட அமைப்பினர் ஆகிய 37 பேர் சார்பாக மாற்று வேட்பாளர் உள்ளிட்ட 46 மனுக்கள் தக்கல் செய்யப்பட்டுள்ளன. நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன.

தொகுதி முழுவதும் இப்போதே வாக்கு சேகரிப்பு தொடங்கி விட்டதால் தேர்தல் பரபரப்புக்குப் பஞ்சமில்லை.
வாக்காளர்கள்
`வசந்தகுமார் அளித்த வாக்குறுதி!’ - நாங்குநேரி வேட்பாளராக ரூபி மனோகரன் தேர்வானது எப்படி?

வேட்புமனுத் தாக்கல் முடிந்த நிலையில், அரசியல் கட்சிகளின் சார்பாகச் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கவுள்ளது. அ.தி.மு.க சார்பாக 16 அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று நடக்கவுள்ளது. தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் சார்பாகவும் செயல்வீரர்கள் கூட்டம் நடக்க இருக்கிறது. மொத்தத்தில் நாங்குநேரி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.