Published:Updated:

தி.மு.க. வேட்பாளரை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க கருணாநிதி வேண்டுகோள்

Vikatan Correspondent
தி.மு.க. வேட்பாளரை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க கருணாநிதி வேண்டுகோள்
தி.மு.க. வேட்பாளரை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க கருணாநிதி வேண்டுகோள்
தி.மு.க. வேட்பாளரை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க கருணாநிதி வேண்டுகோள்

சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் முதலமைச்சர், தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர் ஆகிய பதவிகளில் “இரட்டை நிர்வாகம்” நடைபெறுகின்ற அளவுக்கு, குளறுபடிகள் ஏற்பட்டு, தமிழகத்தின் உரிமைகள், மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் சட்டம், ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ஆரோக்கியமான விவாதங்களோ, முடிவுகளோ எடுக்கப்படாமல் அரசு எந்திரம் முற்றிலுமாக செயலற்றுப் போய்விட்ட நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.

இப்பிரச்னைகள் குறித்து சட்டமன்றத்தில் விரிவாக விவாதிக்கும் பொருட்டு, தி.மு.க.வின் சார்பிலும், இதர அரசியல் கட்சிகளின் சார்பிலும் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மறுக்கப்பட்டதோடு, சட்டமன்றத்தை அவசர அவசரமாக 3 நாட்கள் மட்டுமே நடத்தி முடித்து, ஜனநாயக நெறிமுறைகளையும், சட்டமன்ற மரபுகளையும் கேலிக்குரியதாக்கி உள்ளது.

குறிப்பாக, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் பிரச்னை, முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்துவது பற்றிய பிரச்னை, அமராவதி பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பிரச்னை, தொடரும் மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது போன்ற மாநில உரிமைகள் குறித்த பிரச்னைகளிலும்; வரலாறு காணாத தொடர் மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு; பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருள்களின் கடும் விலைவாசி உயர்வு, மாநிலத்தில் பரவி வரும் டெங்கு, பறவை காய்ச்சல் உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகள், தமிழகம் முழுவதும் நிலவி வரும் யூரியா தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் தவிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு; கொலைக்களமாகி வரும் கல்விக்கூடங்கள்;

நாள்தோறும் தொடரும் கொலைகள் மற்றும் கொள்ளைகள், முதியோர் உதவித்தொகை ரத்து; பச்சைத் தேயிலைக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகள்; சத்துணவு முட்டைகள் வாங்கியதில் ஊழல்; ஆவின் பால் விற்பனையில் ஊழல்; கிரானைட் முறைகேடு, ஊழல்; தாது மணல் கொள்ளை, ஊழல் உள்ளிட்ட ஊழல் முறைகேடுகளிலும் ஜெயலலிதாவின் பினாமி அரசு எவ்வித விசாரணையையும், தீர்வையும் மேற்கொள்ளாமலும், மாநில உரிமைகளை வலியுறுத்தி பாதுகாக்காமலும், மக்கள் பிரச்னைகளுக்குரிய நடவடிக்கைகள் எடுக்காமலும் இருந்து வருவதுடன்; அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்களால் கண்டறிந்து எழுப்பப்படும் ஊழல் முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமலும், முற்றிலுமாக முடங்கிக்கிடப்பதோடு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும், அவர்களை இயக்குகிறவர்களுக்கும் நலன் பயக்கும் காரியங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.

இத்தகைய மக்கள் விரோத, ஜனநாயக விரோத ஆட்சியின் அலங்கோலங்களை தமிழக மக்களுக்கு உணர்த்திடும் வகையில், வருகிற 13-2-2015 அன்று நடைபெறவுள்ள ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் தி.மு.க.வின் சார்பில் போட்டியிடுவதென முடிவெடுத்து, கடந்த முறை அந்த தொகுதியில் போட்டியிட்ட அதே வேட்பாளரையே கழக வேட்பாளராக அறிவித்திருக்கிறோம்.

ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தொடர்ந்து தமிழகத்தில் நடத்தி வரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை செய்கின்ற வகையில், இந்த இடைத்தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நல்கிடும் உறுதியான ஆதரவோடு போட்டியிடுவது ஆக்க பூர்வமானதென்று நினைத்து இந்த முடிவினை எடுத்துள்ளோம்.

தமிழகத்தில் ஜனநாயகத்தை காத்திடவும், சர்வாதிகார எண்ணத்தை வீழ்த்திடவும் மேற்கொள்ளப்பட்டுள்ள கழகத்தின் இந்த முடிவிற்கு உதவிடும் வகையில், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு தமிழகத்திலே உள்ள அனைத்து கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையின் வாயிலாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.