Published:Updated:

முதலமைச்சர் விழாவில் கலந்துகொண்ட 38 பேருக்கு வாந்தி, பேதி! -நேரம் கடந்து சாப்பிட்டதால் விபரீதம்?

38 பேருக்கு வாந்தி, பேதி
38 பேருக்கு வாந்தி, பேதி

கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு மதிய உணவாக முட்டை, புளியோதரை, லெமன் சாதம் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த உணவைப் பலரும் சாப்பிட்டு, வீட்டுக்கும் வாங்கி வந்து தாமதமாகச் சாப்பிட்டதால், ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே குன்னத்தூரில், விவசாயிகளின் 100 ஆண்டுக்கால கனவுத் திட்டமான காவிரி-வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா தமிழக அரசு சார்பில், பிப்ரவரி 21-ம் தேதி நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு இதைத் தொடங்கி வைத்தனர். இதற்காக விராலிமலை அருகே குன்னத்தூரில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்தநிலையில், 22-ம் தேதி திருநல்லூர், கலர்பட்டி, ஆச்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெண்கள் ராஜேஸ்வரி (34), சத்தியா(25), தேன்மொழி (1), வள்ளிக்கண்ணு (40) உட்பட 38 பேர் ஒரே நேரத்தில் வயிற்றுப்போக்கு, வாந்தி எடுத்து மயங்கியிருக்கிறார்கள்.

விழா
விழா

இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் திருநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அனைவரும் தற்போது நலமுடன் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் முதலமைச்சர் கலந்துகொண்ட விழாவுக்குச் சென்று வந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு மதிய உணவாக முட்டை, புளியோதரை, லெமன் சாதம் உள்ளிட்ட உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த உணவைப் பலரும் சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்கும் வாங்கி வந்து தாமதமாகச் சாப்பிட்டதால், ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரியின் கணவர் கூறுகையில், ``முதல்வர் விழா வரவேற்புக்காக, மனைவி போனாங்க. சாயந்திரத்திலிருந்து, ரொம்ப சுணக்கமா இருந்துச்சு. நைட் எல்லாம் தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு இருந்துச்சு. என்ன சாப்பிட்டேனு கேட்டப்ப, கூட்டத்தில், முட்டை, லெமன் சாதம் சாப்பிட்டதா சொன்னாங்க. இன்னிக்கு மதியத்துக்கு மேல சுத்தமா எழுந்து நடக்கக்கூட முடியலை. உடனே 108 மூலம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப் போனோம். அதற்கப்புறம்தான் தெரியும், என் மனைவி மாதிரி பலரும் பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு. குளூக்கோஸ் போட்டிருக்காங்க. இப்ப கொஞ்சம் நல்லா இருக்காங்க" என்றார்.

மருத்துவமனை
மருத்துவமனை

இது பற்றி டாக்டர்களிடம் கேட்டபோது,``புளியோதரையை நேரம் கடந்து சாப்பிட்டதால், உணவு ஒவ்வாமை ஏற்பட்டு, சிறு, சிறு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லோரும் தற்போது நலமுடன் இருக்கிறார்கள்"என்று முடித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு