வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (05/02/2015)

கடைசி தொடர்பு:16:44 (05/02/2015)

மனக்கசப்பில் கருப்பசாமி பாண்டியன், அனிதா, ரகுபதி: திமுகவுக்கு குட்பையா?

திமுகவில் மனம் கசந்துபோய் உள்ள கருப்பசாமி பாண்டியன், அனிதா ராதா கிருஷ்ணன், ரகுபதி, முல்லைவேந்தன் மற்றும் பழனி மாணிக்கம் உள்ளிட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் இணைவதற்காக ஜெயலலிதாவை சந்திக்க இருப்பதாக வெளியான தகவலால் பரபரத்து கிடக்கிறது தமிழக அரசியல் வட்டாரம்.

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் தி.மு.க.வில் உட்கட்சி பூசல் அதிகரித்து கொண்டே செல்கிறது என்று கூறலாம். அழகிரி - ஸ்டாலின் அதிகார போட்டியால் இரண்டு கோஷ்டிகளாக தி.மு.க. செயல்பட்டு வந்தது. இதனால் யார் பக்கம் செல்வது என்று தொண்டர்கள் விழிபிதுங்கி இருந்தனர்.
 

கடந்த 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக அழகிரி அளித்த பேட்டி கட்சிக்கு பெரும் அதிர்ச்சை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கருணாநிதி, எனது மகன் என்று பாராமல் அழகிரியை கட்சியில் இருந்து நீக்கினார். ஸ்டாலின் இன்னும் இரண்டு மாதங்களில் இறந்துவிடுவார் என்று அழகிரி கூறியதாக கருணாநிதி சொன்னதுதான் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று வரை கட்சியில் சேர்த்து கொள்ளப்படாத அழகிரி, கட்சியை உடைக்க உள்ளடிவேலைகளை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில், தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், அழகிரியின் தீவிர விசுவாசியான நடிகர் ரித்தீஷ் கடந்தாண்டு அ.தி.மு.க.வில் ஐக்கியமானார். இவரைத் தொடர்ந்து தி.மு.க. முன்னாள் அமைச்சர் நடிகர் நெப்போலியன் கடந்த மாதம் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அப்போது, பேசிய நெப்போலியன் இன்னும் ஒரு லட்சம் பேரை பா.ஜ.க.வில் இணைக்க போவதாக அறிவித்ததோடு, தி.மு.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்றும், அழகிரியின் ஆசியோடுதான் பா.ஜ.க.வில் இணைந்தேன் என்றும் கூறினார். ஆனால், அழகிரி இதனை மறுத்தார். நெப்போலியன் பா.ஜ.க.வில் இணைந்து பற்றி தனக்கு தெரியாது என்று பெரிய குண்டை போட்டார் அழகிரி.

இதனிடையே, நடிகர்கள் ரித்தீஷ், நெப்போலியன் ஆகியோரைத் தொடர்ந்து தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், ரகுபதி, தி.மு.க உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மேலும் பல தி.மு.க.வினர் போயஸ்கார்டனில் இன்று ஜெயலலிதாவை சந்திக்க இருப்பதாக தகவல் உலாவிக் கொண்டு இருக்கின்றன.

டி.ஆர்.பாலுவுடன் ஏற்பட்டுள்ள மோதலால் தொகுதியை இழந்த பழனிமாணிக்கம் தி.மு.க. தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்த கருப்பசாமி பாண்டியன் பின்னர் தி.மு.க.வில் இணைந்தார். பெண் ஒருவர் அவர் மீது கொடுத்த பாலியல் புகார் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் அவர் மீது கட்சி தலைமை அதிருப்பதியில் இருந்ததாகவும் கூறப்பட்டது. அவரிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டதால் அவரும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

1991-96ம் ஆண்டில் அ.தி.மு.க அமைச்சர வையில் இடம் பெற்றிருந்த ரகுபதி, கடந்த 2000வது ஆண்டில் தி.மு.க.வில் இணைந்தார்.  தற்போது அவரும் தி.மு.க. தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ, அமைச்சர் என கோலோச்சிய அனிதா ராதாகிருஷ்ணன், அழகிரியால் தி.மு.க.வுக்கு அழைத்து வரப்பட்டவர் என்று அப்போது பேசப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருக்கும் பெரியசாமிக்கும்,அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் சில ஆண்டுகாலமாகவே இருந்து வரும் ஈகோ பிரச்னையால் தி.மு.க.வில் அனிதாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதனால் அரசியலை விட்டு அனிதா ஒதுங்கியே இருந்து வருகிறார்.

கடந்த ஓராண்டுகளாக அ.தி.மு.க.வில் அனிதா சேரப்போவதாக வதந்தி பரவியது. தற்போதும், அ.தி.மு.க.வில் சேரப் போவதாகவும் செய்திகள் உலா வருகின்றன.

உட்கட்சி பூசலால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன். தற்போது, அ.தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

அழைப்பை ஏற்காத செல்போன்

இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக அனிதா ராதா கிருஷ்ணனிடம் நமது நிருபர் செல்போனில்  தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, ரிங் தொடர்ந்து போய்க்கொண்டே இருந்ததே தவிர எடுக்கப்படவில்லை. அழைப்புகளை அவர் தவிர்ப்பதாக தெரிகிறது. ரகுபதி உதவியாளரிடம் கேட்டபோது, அவர் ஶ்ரீரங்கத்தில் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

திமுக அதிர்ச்சி

இதனிடையே கருப்பசாமி பாண்டியன், அனிதா, பழனி மாணிக்கம்  உள்ளிட்டவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க இருப்பதாக வெளியான தகவல் திமுக வட்டாரத்தை அதிர்ச்சிக்கு உள்ளக்கி உள்ளது.

முல்லை வேந்தன் மறுப்பு

இந்நிலையில் தாம் அதிமுகவில் சேரப்போவதாகவும், ஜெயலலிதாவை சந்திக்கப்போவதாகவும் வெளியான தகவலை முல்லை வேந்தன் மறுத்துள்ளது.

கருப்பசாமி பாண்டியன் உறுதி

இந்நிலையில் மேற்கூறிய புள்ளிகளில் கருப்பசாமி பாண்டியன் அதிமுகவில் இணைவது உறுதி என்றே அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

-சகாயராஜ்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்