'பெண்கள் வாழத்தகுதியற்றதாகி விட்டது தமிழகம்!'

சென்னை: அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களால் பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகம் சீர்கெட்டுள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 22 விழுக்காடு அதிகரித்திருப்பதாக மாநில குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெண்களை போற்றும் மண்ணான தமிழகம் படிப்படியாக பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாறி வருவது பெரும் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது.

தமிழ்நாடு குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி கடந்த ஆண்டில் 1126 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். இது கடந்த 2013 ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 923 குற்றங்களை விட 22% அதிகமாகும். கடந்த ஆண்டில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்களில் 655 பேர் சிறுமிகள் என்பது கூடுதல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கும் விஷயமாகும்.

தென் மாவட்டங்களை விட வட மாவட்டங்களில் தான் பாலியல் குற்றங்கள்  அதிக அளவில் நடைபெற்றுள்ளன. சென்னையில் மட்டும் 104 பெண்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் மட்டும் 74 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆறாம் வகுப்பு மாணவி கடந்த டிசம்பர் மாதத்தில் அவருடன் ஒரே பள்ளியில் பயிலும் மாணவனால் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதும், கடந்த ஜூலை மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் கல்லூரி மாணவி ஒருவரை 4 பேர் காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும் தமிழகத்தில் பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு நிலவுகிறது என்பதற்கு உதாரணமாகும்.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாள் முதலே தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன.

கடந்த 2011 ஆம் ஆண்டில் 677 ஆக இருந்த பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டில் சுமார் 10% அதிகரித்து 737 ஆக உயர்ந்தது. 2013 ஆம் ஆண்டில் 26% அதிகரித்து 923 ஆக இருந்தது. 2014 ஆம் ஆண்டில் மேலும் 22% அதிகரித்து 1126 என்ற உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

அதாவது அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை 67 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலங்கள் என்று விமர்சிக்கப்படும் மேற்குவங்கம், பிகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் கூட பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை.

தமிழ்நாட்டில் ஒரு பெண் முதலமைச்சராக இருந்த காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம் ஆகும்.
பாலியல் வன்கொடுமைகள் இந்த அளவுக்கு அதிகரித்திருப்பதற்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும்.

கடந்த 2012 ஆம் ஆண்டு இறுதியில் தலைநகர் தில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு மரணம் அடைந்த போது, தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக 13 அம்சத் திட்டத்தை 01.01.2013 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

ஆனால், அவற்றில் ஒன்று கூட நடைமுறைப்படுத்தப் படவில்லை. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு தான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உமா மகேஸ்வரி என்ற மென்பொருள் வல்லுனர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

பாலியல் வன்கொடுமைகள் உட்பட அனைத்துக் குற்றங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது மது தான். பெரும்பாலான குற்றங்கள் மது போதையில் தான் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறேன்.

ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லை. ‘ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம்’ என்று பாடிய பாரதி பிறந்த மண்ணான தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான பகுதியாக திகழ்வதை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.

இதை உணர்ந்து  அதிக எண்ணிக்கையில் பெண் காவலர்களை நியமிப்பது, பெண்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துதல், இதற்கெல்லாம் மேலாக மதுக்கடைகளை மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!