தோல்விக்கு நானே பொறுப்பு: சொல்கிறார் கிரண் பேடி

புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு தான் பொறுப்பு ஏற்பதாக அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு கடந்த 7ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 66 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி, "இது ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடனான போட்டியே. இந்த போட்டியில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். எங்கள் இருவருக்கும் இடையேதான் போட்டி. நாங்கள் போட்டியில் கலந்துகொண்டோம். போட்டியில் இருவர் கலந்து கொண்ட நிலையில் ஒருவர் மட்டுமே வெற்றிபெற முடியும்" என்றார்.

பிரதமர் மோடியின் அரசு மீதான பொதுவாக்கெடுப்பு என்ற பார்வையை நிராகரித்த கிரண்பேடி, "கட்சி வெற்றி பெற்றால் இது கூட்டு வெற்றியாகும். கட்சி தோல்வி அடைந்தால் அது தனிநபர் பொறுப்பு. நான் பொறுப்பு ஏற்றுக் கொள்வேன். நான் போலீஸ் அதிகாரியாக இருந்தபோதும் தோல்வியை சந்தித்து இருக்கிறேன், பொறுப்பை நானே ஏற்றுக் கொள்வேன்" என்றார்.

கடந்த தேர்தலில் பா.ஜனதா 32 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. ஆனால் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியாக இதுவரையில் வெறும் 3 தொகுதிகளிலே முன்னிலை வகிக்கிறது. கருத்து கணிப்புகளில் வெளியான தகவல்போன்று ஆம் ஆத்மி பெரும்பான்மையான தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நிலையையே தற்போதைய நிலவரம் காட்டுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!