தோல்வி எனக்கல்ல...பா.ஜனதாவுக்குதான்: ஒரே நாளில் கிரண் பேடி பல்டி!

புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் தனக்கு தோல்வி ஏற்படவில்லை என்றும், தோல்வியடைந்தது பா.ஜனதாதான் என்றும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி கூறியுள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா படுதோல்வியடைந்துள்ளது. மொத்தமுள்ள 70 இடங்களில் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் பா.ஜனதா 32 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.

இந்நிலையில் இந்த தேர்தல் தோல்விக்கு பா.ஜனதாவின் முதல்வர் வேட்பாளராக கிரண் பேடியை நிறுத்தியதும் ஒரு முக்கிய காரணம் என அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதனிடையே தேர்தல் முடிவு இன்று காலை வெளியாக தொடங்கிய சிறிது நேரத்திலேயே பா.ஜனதாவின் தோல்வி உறுதியானது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிரண் பேடி, தேர்தல் தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாக கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கட்சி வெற்றி பெற்றால் இது கூட்டு வெற்றியாகும். கட்சி தோல்வி அடைந்தால் அது தனிநபர் பொறுப்பு. நான் பொறுப்பு ஏற்றுக் கொள்வேன். நான் போலீஸ் அதிகாரியாக இருந்தபோதும் தோல்வியை சந்தித்து இருக்கிறேன், பொறுப்பை நானே ஏற்றுக் கொள்வேன்" என்றார்.

இவ்வாறு கூறிய சில மணி நேரத்திலேயே, முதலில் கூறிய கருத்துக்கு மாறாக, டெல்லி சட்டசபை தேர்தலில் தனக்கு தோல்வி ஏற்படவில்லை என்றும், தோல்வியடைந்தது பா.ஜனதாதான் என்றும் மாற்றிக் கூறினார். 

"என்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டேன். பா.ஜனதா ஒரு தேசிய கட்சி. அது தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்" என கிரண் பேடி மேலும் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!