Published:Updated:

கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

திருச்சி, செப்.16,2011

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் வீடுகள், அலுவலகங்கள், அவரது சகோதரர்கள், உறவினர்கள் வீடுகள் உள்பட 13 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அவர் வருமானத்துக்கு அதிகமாக பல கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் சோதனை நடத்துவதற்கான ஆணையைப் பெற்று, இன்று அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். ##~~##

நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவரது சகோதரர்கள் ராமஜெயம், ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் உறவினர்களுக்குச் சொந்தமான சென்னை, திருச்சி, கோவை வீடுகள், அலுவலகங்களில் இன்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர்.

கே.என்.நேரு 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்ததாக திருச்சி லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸா புகார் பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று காலை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. அம்பிகாபதி தலைமையில் போலீசார் திருச்சி தில்லைநகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள கே.என்.நேருவின் வீட்டில் காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோல தில்லை நகர் 5-வது குறுக்கு தெருவில் உள்ள கே.என். நேருவின் அலுவலகம், 10வது குறுக்கு தெருவில் உள்ள இன்னொரு வீடு, சாஸ்திரி ரோட்டில் உள்ள நேருவின் தம்பி ராமஜெயத்தின் அலுவலகம் ஆகிய இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தினர்.

திருவாணைக்காவல் பெரியார் நகரில் உள்ள நேருவின் உறவினர் கோபால் வீடு, நேருவின் சொந்த ஊரான கானக்கிளியநல்லூரில் உள்ள வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

சென்னை ஆழ்வார்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் உள்ள நேருவின் தம்பி ரவிச்சந்திரனின் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர். கோவை ராமநாதபுரத்தில் உள்ள நேருவின் தம்பி மணிவண்ணனின் 2 வீடுகளிலும் சோதனை நடத்தினர். மொத்தம் 13 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனைகள் நடந்தன.