அரசியல் வேண்டாம்... திடீர் ஓய்வு எடுக்கும் ராகுல்!

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு சமீபத்தில் ஏற்பட்ட தொடர் தோல்விகளை தொடர்ந்து, கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக துணைத்தலைவர் ராகுல் காந்தி சில வாரங்களுக்கு விடுமுறை எடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. மேலும் தொடர்ந்து நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி சமீபத்தில் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலிலும் நீடித்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு உள்ளிட்ட முக்கியமான அமர்வுகள் ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. மேலும் இந்த மாநாட்டில் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்படுவார் எனவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாநாட்டுக்கு முன், கட்சியின் தற்போதைய தோல்விகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் உத்திகளை குறித்து ஆராய ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். எனவே இதற்காக சில வாரங்கள் விடுமுறை அளிக்குமாறு கட்சித்தலைவர் சோனியாவிடம் அவர் வேண்டிக்கொண்டார். அதன்படி அவருக்கு இந்த ஓய்வு வழங்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சோனியா காந்தி கூறுகையில், ‘அவருக்கு (ராகுல்) சிறிது அவகாசம் தேவைப்படுகிறது. அதன்படி சில வாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன’ என்றார்.

ராகுல் காந்தியின் திட்டம் என்ன? தற்போது அவர் எங்கு இருக்கிறார்? என்பது பற்றி அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. அதே சமயத்தில், அவர் அரசியலில் இருந்து முழுக்கு போடுவதற்கு இது ஒரு முன்னோட்டம் என்ற வதந்தியும் இறக்கை கட்டி பறக்கிறது.

தனது தாயார் சோனியா காந்தியை சுற்றி வந்து காரியம் சாதிக்கும் துதிபாடிகளை ராகுல் காந்தி துளியும் விரும்பவில்லை என்று காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அவரது ‘திடீர்’ விடுமுறைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. சில காங்கிரஸ் பொதுச்செயலாளர்களையும், மாநில தலைவர்களையும் அவர் நீக்க விரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வாரம் முழுவதும், ராகுல் காந்தி டெல்லியிலேயே இருக்க மாட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். எனவே, ரெயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் தாக்கலின்போது, ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு வரமாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. மொத்தம் எவ்வளவு நாட்களுக்கு அவர் ஓய்வு எடுப்பார் என்பது புரியாத புதிராக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!