வெளியிடப்பட்ட நேரம்: 12:08 (03/03/2015)

கடைசி தொடர்பு:12:29 (03/03/2015)

கட்சியில் இருந்து விரட்ட சதி: ஆம் ஆத்மி யோகேந்திர யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு!

புதுடெல்லி:  ஆம் ஆத்மி கட்சியில் இருந்து யோகேந்திர யாதவ் நீக்கப்படுவார் என்று தகவல்கள் பரவியுள்ளதால் அதிர்ச்சியான அவர், தன்னைக் கட்சியில் இருந்து வெளியேற்ற சதி நடப்பதாக குற்றம் சாட்டியிருப்பது  பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், யோகேந்திர யாதவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் இருவரையும் ஆம் ஆத்மியில் இருந்து நீக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அப்போது யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் இருவர் மீதும் கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதை தீவிரப்படுத்தும் வகையில் கெஜ்ரிவாலின் ஆதரவாளர்கள் இன்று காலை யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் இருவருக்கும் எதிராக இருக்கும் ஆதாரங்களை வெளியிட்டனர். கட்சிக்கு எதிராக யோகேந்திர யாதவ் பேசியதாக ஒரு ஆடியோ டேப் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் நிருபர் ஒருவரிடம் பேசும் யோகேந்திரயாதவ், பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் இருவரும் ஆம் ஆத்மியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் யோகேந்திர யாதவ் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஆம் ஆத்மி கட்சியில் இருந்து என்னை விரட்ட சதி நடக்கிறது. இதற்காக என்னை தொடர்புபடுத்தி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். நான் ஆம் ஆத்மியில் இருந்து விலக மாட்டேன். தொடர்ந்து கட்சியில் செயல்படுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்