வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (10/03/2015)

கடைசி தொடர்பு:12:55 (10/03/2015)

ஆம் ஆத்மிக்கு எதிராக யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் சதி!

புதுடெல்லி:  ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோர் சதிச் செயலில் ஈடுபட்டதாகக் கடும் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

ஆம்ஆத்மி கட்சி டெல்லி தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நிலையில், அந்த கட்சிக்குள் திடீரென உள்கட்சி பூசல் வெடித்தது.

ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக மூத்த தலைவர்கள் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் இருவரும் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனால் அவர்கள் இருவரும் ஆம்ஆத்மியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

கடந்த வாரம் புதன் கிழமை நடந்த ஆம்ஆத்மி செயற்குழு கூட்டத்தில் இது பற்றி பேசப்பட்டது. பிறகு யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் இருவரும் முக்கிய முடிவுகள் எடுக்கும் ஆட்சி மன்றக்குழுவில் இருந்து விலக்கப்பட்டனர்.

அதன்பிறகு கெஜ்ரிவால் இயற்கை மருத்துவ சிகிச்சை பெற பெங்களூருவில் இருக்கிறார். இந்த நிலையில் கெஜ்ரிவாலின் வலது கரமாக திகழும் துணை முதல்வர்  மணீஷ் சிசோடியா மற்றும் ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள் கோபால் ராய், பங்கஜ் குப்தா, சஞ்சய் சிங் ஆகிய 4 பேரும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில்,

" டெல்லி சட்டமன்றத்திற்கு  சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைய வேண்டும் என்று யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் இருவரும் பாடுபட்டனர். தேர்தலின் போது அவர்கள் இருவரும் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும், ஆம்ஆத்மிக்கு எதிராகவும் பல்வேறு சதி செயல்கள் செய்தனர்.

சட்ட மன்றத்  தேர்தலில் ஆம்ஆத்மி 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைய வேண்டும். அப்படி நடந்தால்தான் நாம் ஆம்ஆத்மி தலைவர் பதவியில் இருந்து கெஜ்ரிவாலை மாற்ற முடியும் என்று தொண்டர்களிடம் பேசினார்கள்.

பாஜக சார்பில் கிரண்பேடி முதல்வர்  வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் யாதவ், பிரசாந்த் பூஷன் இருவரும் அதை வரவேற்றனர். கெஜ்ரிவாலை விட கிரண்பேடி மிகச் சிறந்த நிர்வாகத்தை தருவார் என்று பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டனர்.

வெளி மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு பிரசாரம் செய்ய வந்த ஆம்ஆத்மி தொண்டர்களை யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன், சாந்தி பூஷன் மூவரும் தடுத்து நிறுத்தினார்கள். அது மட்டுமின்றி டெல்லியில் இருந்த வெளிமாநில ஆம்ஆத்மி தொண்டர்களை பிரசாரத்துக்கு பயன்படுத்துவதை தடுத்தனர்.

மேலும் ஆம்ஆத்மிக்கு நிதி திரட்டுவதற்கும் மூன்று பேரும் முட்டுக் கட்டையாக இருந்தனர். அதோடு ஆம்ஆத்மி பற்றி மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் கட்டுரைகள், செய்திகளை பல்வேறு பத்திரிகைகளில் இவர்கள் வரச் செய்தனர்.

பத்திரிகையாளர்களிடம் மறைமுகமாக பேசி ஆம்ஆத்மி இமேஜை பாழ்படுத்துவதில் இவர்கள் குறியாக இருந்த னர். இவர்களது இந்த நடவடிக்கைகள் பற்றி மக்களிடம் தெரியப்படுத்தவே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது"  என்று கூறப்பட்டுள்ளது.

யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் மீது ஆம்ஆத்மியின் 4 மூத்த முக்கிய தலைவர்கள் கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அறிக்கை வெளியிட்டிருப்பது ஆம்ஆத்மி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஆத்மி தலைவர்களிடையே விரிசல் அதிகமாகி உள்ளதை இதைக்  காட்டுகிறது.

இதையடுத்து யாதவ், பிரசாந்த் பூஷன் இருவரும் விரைவில் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் நிலவுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்