Published:Updated:

கூடங்களம்: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

கூடங்களம்: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்
கூடங்களம்: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

சென்னை/ இடிந்தங்கரை, செப்.21,2011

முதலவர் ஜெயலலிதா அளித்த உறுதியை ஏற்று, கடந்த 11 நாட்களாக இடிந்தங்கரையில் மக்கள் மேற்கொண்டுவந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

கூடங்களம்: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்



முன்னதாக, கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்னை தொடர்பாக வியாழக்கிழமை தமிழக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் என்று தன்னைச் சந்தித்த போராட்டக்குழுவிடம் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார்.

இதனிடையே, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி கூடங்குளம் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய நாராயணசாமி, "நான் பிரதமரின் தூதராக வந்துள்ளேன். கூடங்குளம் பிரச்னை தொடர்பாக பிரதமர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்," என்றார். ##~~##

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி, இடிந்தங்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில், 20 பெண்கள் உள்பட 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா இன்று போராட்டக் குழுவினரை அழைத்து தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.  

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் தலைமையில் 22 பிரதிநிதிகளுடனான இந்தச் சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் நிருபர்களிடம் எஸ்.பி.உதயகுமார் கூறுகையில், "தமிழக முதல்வர் ஜெயலலிதாவை போராட்டக்குழு நிர்வாகிகளும், சமூக தலைவர்களும், ஆயர்கள் மற்றும் பாதிரியார்களும் இன்று சந்தித்து பேசினோம்.  

முதல்வர் எங்கள் கோரிக்கைகளை முழுமையாக கேட்டறிந்தார். நாளையே அமைச்சரவை கூட்டத்தை கூட்டி இந்த அணுமின் திட்ட நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்தும், பிரதமர் மன்மோகன் சிங்கை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழு சந்திப்பதற்கு நேரம் கேட்டும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எங்களிடம் முதல்வர் உறுதியளித்தார்.

இந்தியாவில் எரிசக்தி கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் மேலும் ஒரு கோரிக்கையை முதல்வரிடம் தெரிவித்தோம்.

அணுசக்திக்கு பதிலாக மாற்று வழிகளில் மின்சாரம் தயாரிப்பதற்கான கொள்கை மாற்றத்தை கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அணுமின் நிலையங்களை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என முதல்வரிடம் கேட்டுக்கொண்டோம்.

முதல்வர் அதனை பரிசீலிப்பதாக தெரிவித்திருக்கிறார். இது குறித்தும் தமிழக அமைச்சரவை பரிசீலிக்கும் என்று நம்புகிறோம்.

அமைச்சரவை கூடி முடிவெடுக்க இருப்பதாக முதல்வர் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்கிறோம். உண்ணாவிரதம் இருக்கும் 127 பேருக்கும் மதிப்பளிக்கும் வகையில் அங்கு சென்று உண்ணாவிரதத்தை திரும்ப பெற இருக்கிறோம்.

எங்களை அழைத்துப் பேசி இந்த முடிவை எடுத்த முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த பிரச்னையில் தென்பகுதி அமைச்சர்களான செந்தூர் பாண்டியன், செல்லபாண்டியன், பச்சைமால் ஆகியோர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர்.  அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இனி எங்கள் போராட்டம் என்பது மத்திய அரசின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்வீக அமைதி வழி போராட்டமாக இருக்கும்.

மத்திய அரசுக்கு எதிராக எங்கள் அடுத்த கட்ட போராட்டம் இருக்கும். இந்தப் போராட்டம் தொடர்பாக எங்களில் பலர் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றை திரும்ப பெற வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக்கொண்டோம். அதனையும் பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அமைச்சர் நாராயணசாமியை பொறுத்தவரை எங்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. உண்ணாவிரத பந்தலுக்கு வந்து மக்களை சந்தித்து பேசினார்," என்றார் உதயகுமார்.

'பிரதமர் கையில் இறுதி முடிவு'

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசிய மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், "பிரதமர் உத்தரவின்பேரில் தமிழகம் வந்து கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலரை நேற்று சந்தித்து பேசினேன். அணுமின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரையில் உண்ணாவிரதம் இருந்துவரும் மக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தேன்.

இப்போது முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினேன். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சொன்ன விவரங்களையும் பிரதமர் சொன்ன சில விஷயங்களையும் முதல்வரிடம் தெரிவித்தேன். என்னிடம் முதல்வர் சில விஷயங்களை சொல்லி, பிரதமரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இன்று டெல்லி செல்கிறேன்.

பிரதமர் நியூயார்க் செல்கிறார். அங்கிருந்து திரும்பி வந்ததும், பேச்சுவார்த்தை விவரங்களை அவரிடம் தெரிவிப்பேன். இந்த விஷயத்தில் பிரதமரின் தூதராகத்தான் வந்தேன். மற்றபடி, அணுமின் நிலைய விவகாரத்தில் பிரதமர்தான் இறுதி முடிவு எடுப்பார். நான் எதுவும் சொல்ல முடியாது," என்றார் நாராயணசாமி.

அடுத்த கட்டுரைக்கு