Published:Updated:

மேற்கு வங்கத்தில் துப்பாக்குச்சூடு... 4 பேர் பலி!-பேரணிக்குத் தயாராகும் மம்தா; மறுக்கும் சிஆர்பிஎஃப்

நான்கு பேர் சுட்டுக்கொலை
நான்கு பேர் சுட்டுக்கொலை

மத்தியப் படைகளின் தாக்குதலைக் கண்டித்து அதே பகுதியில் நாளை மம்தா பேரணி ஒன்றை நடத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் 44 தொகுதிகளில் 4-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவரும் நிலையில், உள்ளூர் மக்களின் தாக்குதலிலிருந்து காத்துக்கொள்ள மத்திய பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், கூச் பெஹர் மாவட்டம், சித்லாகுச்சி பகுதியில் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இது குறித்துச் செய்தி வெளியிட்டுள்ள பிடிஐ நிறுவனம், கூச் பெஹர் மாவட்டத்திலுள்ள சிதலாகுச்சியில் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறி மத்திய பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் இறந்ததாகத் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கம்
மேற்கு வங்கம்
Bikas Das

இது குறித்துப் பேசியிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) தலைவர் டோலா சென், மத்திய படைகள் இரண்டு முறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் குற்றம்சாட்டினார். முதலில் ``மாதபங்காவின் (கூச் பெஹர்) தொகுதியில் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மூன்று பேர் காயமடைந்தனர், பின்னர் சிதலாகுச்சி தொகுதியில் நடத்திய தாக்குதலில் , மூன்று பேர் கொல்லப்பட்டனர், ஒருவர் காயமடைந்தார்” என்றார்.

மேலும் அவர், ``மத்திய படைகள் மக்களுக்கு அநீதி இழைக்கின்றன. அவர்கள் வரம்புகளை மீறிவிட்டனர். முதல்வர் அவர்களை அழைத்திருக்கிறார். தேர்தல் கமிஷன், இது குறித்து அறிக்கையையும் வெளியிட்டுள்ளது” என்று மேற்கோள் காட்டினார்.

இந்தச் சம்பவம் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளிக்கக் கோரியிருப்பதாக என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்துச் செய்தி நிறுவனம் தெரிவிக்கையில், வாக்குப்பதிவு நடைபெற்றுவருவதால் பாஜக மற்றும் திரிணாமுல் தொழிலாளர்கள் இடையே மோதல்கள் ஏற்பட்டதாகக் கூறியிருக்கிறது.

மேற்கு வங்கம்
மேற்கு வங்கம்
Bikas Das

முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க-வினர் சிதல்குச்சி, நடல்பரி, துபங்கஞ்ச், தின்ஹாட்டாவிலுள்ள பல தொகுதிகளில் பிரச்னைகளை ஏற்படுத்தவிருப்பதாகவும், அதை திரிணாமுல் கட்சி முகவர்கள் தடுப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்தநிலையில் மத்திய படைகளின் தாக்குதலைக் கண்டித்து அதே பகுதியில் நாளை மம்தா பேரணி ஒன்றை நடத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, நாங்கள் துப்பாக்கிச்சூட்டை நடத்தவில்லை என சி.ஆர்.பி.எஃப் தெரிவித்திருக்கிறது. துப்பாக்கிச்சூடு காரணமாக ஒரு சில வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் நான்காவது கட்ட வாக்குப்பதிவு ஐந்து மாவட்டங்களிலுள்ள 44 தொகுதிகளுக்கு இன்று நடந்துவருகிறது. எட்டு கட்டங்களாக நடைபெறும் தேர்தலின் முடிவுகள் மே 2-ம் தேதி, தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் முடிவுகளுடன் அறிவிக்கப்படும்.

அடுத்த கட்டுரைக்கு