Published:Updated:

திருச்சி மேற்கில் 61 சதவீத வாக்குப்பதிவு

Vikatan Correspondent

திருச்சி, அக்.13,2011

திருச்சி மேற்கு தொகுதியில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் 61சதவீத வாக்குகள் பதிவாகின.

திருச்சி மேற்கு தொகுதியில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு அமைதியான முறையில்  நடைபெற்றது. இதையொட்டி, துணை ராணுவப் படையினர் உள்பட 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இருப்பதால் எல்லா வாக்குச்சாவடிகளிலும் லேப்-டாப் வைக்கப்பட்டு வெப் கேமரா பொருத்தப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படும்.

இந்த தொகுதியின் வாக்கு எண்ணிக்கை வருகிற 17-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் 17-ம் தேதி உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் வாக்கு எண்ணிக்கையை வருகிற 20-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரான மரியம்பிச்சை சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் காலியாக உள்ள அந்த தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மு.பரஞ்சோதியும், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் போட்டியிடுகின்றனர்.

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் முகமது சாதிக், மக்கள் சக்தி கட்சி சார்பில் சுரேஷ்குமார் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 16 பேர் தேர்தல் களத்தில் இருந்தாலும் அதிமுக - திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பிஜேபி, பாமக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை.

இதனிடையே, புதுச்சேரி இந்திராநகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.