Published:Updated:

நமோ நமோ!

நரேந்திர மோடி கலந்துகொண்ட பி.ஜே.பி-யின் இளந்தாமரை மாநாட்டுக்காக திருச்சியில்  திரண்ட கூட்டத்தைக் கண்டு, தமிழக அரசியல்  கட்சிகள் சற்று மிரண்டுபோனது என்றுதான் சொல்ல வேண்டும்.

நமோ நமோ!
##~##

மாநாட்டுக்காக, காலை முதலே தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர்கள் கூட்டம் திருச் சியை நோக்கி படையெடுத்தது. நரேந்திர மோடியின் பெயரை 'நமோ’ என்று மந்திரம் போல் உச்சரித்தது அந்தக் கூட்டம். பி.ஜே.பி-யினர் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் இருந்து கட்சி சார்பற்றவர்களும் பல்லாயிரக்கணக்கானோர் 10 ரூபாய் கட்டணம் செலுத்தி மிகுந்த எதிர்பார்ப் போடு மாநாட்டுக்கு வந்திருந்தனர். திரும்பிய திசையெல்லாம் மோடி படங்கள் பளபளக்க... பி.ஜே.பி-யின் திருவிழாவைப்போல கடந்த 26-ம் தேதி காட்சியளித்தது மலைக்கோட்டை மாநகரம்.

வெடிகுண்டு மிரட்டல், மோடி உயிருக்கு ஆபத்து என உளவுத் துறை எச்சரிக்கை, முஸ்லிம் அமைப்புகள், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் எதிர்ப்புகள்... என பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், திருச்சியில் நடந்த மாநாட்டில் மோடி கலந்துகொண்டது அரசியலில் திருப்புமுனை என்றுதான் சொல்ல வேண்டும்.

திருச்சிக்கு வந்த குஜராத் போலீஸ்!

பாதுகாப்பு கருதி, மாநாடு நடக்கும் பொன்மலை ஜி கார்னர் மைதானம், கடந்த 20-ம் தேதியில் இருந்தே காவல் துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. மாநாட்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே குஜராத் உளவுப் பிரிவு ஐ.ஜி. பிரவீன் சின்ஹா மற்றும் குஜராத் போலீஸ் ஐ.ஜி. கே.என்.எல்.ராவ் தலைமையிலான குஜராத் போலீஸார், திருச்சிக்கு வந்து விட்டனர். அதோடு, மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன் தலைமையில், மத்திய மண்டல ஐ.ஜி. ராமசுப்ரமணி, மாநகர கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், நுண் ணறிவுப் பிரிவு ஐ.ஜி. கண்ணப்பன், ஐந்து டி.ஐ.ஜி-க்கள், 12 எஸ்.பி-க்கள், ஏழு ஏ.எஸ்.பி-க்கள் என 5,000 போலீஸார் குவிக்கப் பட்டிருந்தனர். மேலும் திருச்சி எல்லையைச் சுற்றியுள்ள எட்டு இடங்களில் செக்போஸ்ட்கள் வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

நமோ நமோ!

'மோடி திருச்சிக்குள் நுழையக் கூடாது!’

இந்த நிலையில் கடந்த 24-ம் தேதி திருச்சியைச் சேர்ந்த காங்கிரஸின் மாநில பொதுக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் இளங்கோ, திருச்சிக்குள் நுழைய மோடிக்குத் தடை விதிக்க வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மறுநாள் மதியம் அளித்த தீர்ப்பில், மாநாட்டில் மோடி கலந்துகொள்ள தடை விதிக்கவில்லை.

பதற்றத்தில் திருச்சி போலீஸார்!

திருச்சியை மூன்று அடுக்கு பாதுகாப்பில் கொண்டுவந்ததோடு, மோடி கார் வரும் பாதை மற்றும் மாநாட்டு மைதானம் வரை 36 கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இரவு பகலாக கண்காணித்து வந்த நிலையில், 'மோடி உயிருக்கு ஆபத்து’ என மத்திய உளவுத் துறை கடந்த 23-ம் தேதி எச்சரித்தது. கடந்த 25-ம் தேதி இரவு 7.35 மணிக்கு, பொன்மலைபட்டி காவல் துறை உதவி கமிஷனர் அலுவலகத்துக்கு 'மாநாடு நடக்கும் அன்று திருச்சியில் உள்ள முக்கிய இடங்களில் குண்டு வெடிக்கும்’ என யாரோ போன் செய்ய, செய்வதறியாமல் தவித்தது தமிழக போலீஸ்.

இது ஒருபுறம் இருக்க, மோடி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி காட்ட பல்வேறு அமைப்புகள் அனுமதி கேட்க... திகைத்துப் போனார்கள் மாநகர காவல் துறை அதிகாரிகள். மோடியின் வருகையை எதிர்த்து திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்களிடம், திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களான சாருவாகன், முகமதுஷேக், முத்துகுமார், வசந்த் மற்றும் சங்கத்தமிழன் ஆகியோர் கையெழுத்து இயக்கம் நடத்த... பதறிப்போன போலீஸார் ஐந்து பேரையும் கைதுசெய்தனர்.

உருவ பொம்மைக்குக் கறுப்புக் கொடி!

'மோடிக்கு கறுப்புக் கொடிக் காட்டியே தீருவோம்’ என, மோடி எதிர்ப்பு அமைப்புகள் அடம்பிடிக்க... எஸ்.டி.பி.ஐ., இந்திய தேசிய லீக், திராவிடர் விடுதலைக் கழகம், நீலப்புலிகள் இயக்கம் உள்ளிட்ட இயக்கங்களுக்கு, மோடி வந்துபோகும் இடத்துக்கு சம்பந்தம் இல்லாத திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கினர் போலீஸார். மதியம் 12.30 மணிக்கு திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பெரியார் சிலை அருகே கூடிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் ஆரோக்கிய சாமி தலைமையிலான கருஞ்சட்டை தொண்டர்கள், மோடி உருவ பொம்மையைக் கொண்டுவந்து அதற்குக் கறுப்புக்கொடி காட்டினர். அதைத் தொடர்ந்து விடுதலைத் தமிழ்ப் புலிகள் இயக்கம், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

மாநாட்டுக்கு அழைப்பு விடுத்த பி.ஜே.பி-யின் தமிழ் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், 'மாநாடு நடக்கும் அன்று மழை வந்தாலும், வெயில் அடித்தாலும் குடையோடு வாருங்கள்’ என அழைப்பு விடுத்திருந்தார். மாநாடு நடக்கும் முன்தினம் இரவு மழைபொழியவே, மாநாட்டுக்கு சிலர் குடையுடன் வந்தனர். பதறிப்போன காவல் துறையினர், கறுப்புக் குடையோடு வருபவர்கள் யாராவது அதையே மோடிக்கு முன் எதிர்ப்பாக காட்டிவிட்டால் வம்பாகி விடுமே என்ற அச்சத்தில் கறுப்புக் குடை பார்ட்டிகளைக் கண்காணித்து வந்தனர்.

களத்தில் இறங்கிய ரஜினி ரசிகர்கள்!

'பி.ஜே.பி-க்கு ஆதரவாக ரஜினி களத்துக்கு வர வேண்டும்’ என்று கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்திருந்தார். ரஜினி மௌனம் சாதித்தாலும், திருச்சி நகரெங்கும் மோடியின் வருகைக்காக பல இடங்களில் ஃப்ளெக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள் என வைத்து அசத்தினர் ரஜினி ரசிகர்கள்.

ரஜினி தளத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் ராயல் ராஜன் நம்மிடம், ''தலைவர் ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் உயிருக்குப் போராடியபோது, தமிழகத்தை ஆண்ட அப்போதைய முதலமைச்சரும் சரி... இப்போதைய முதலமைச்சரும் சரி... தலைவரைப் பார்த்து ஆறுதல் சொல்லவில்லை. ஆனால், மாநிலம் கடந்து வந்து தமிழகத்தில் இருந்த ரஜினியை மோடி சந்தித் தார். அந்த நல்ல மனிதரை வரவேற்கிறோம். அவ் வளவுதான்!'' என்றார். மாநாட்டுக்கு வந்திருந்த வேறு சிலரோ, ''நாங்கள் பல்வேறு கட்சிகளில் இருந்தாலும், தலைவரை சந்தித்து உடல் நலம் விசாரித்த மோடியைப் பிரதமராக்கக் களத்தில் இறங்கி வேலைசெய்யத் தயாராக இருக்கிறோம். தலைவர் தலையசைத்தால், இன்னும் தீவிரமாக களமிறங்குவோம்'' என்றனர்  உற்சாகமாக.

தேசிய மாற்று!

மாலை நான்கு மணிக்கு மாநாடு தொடங்கியது. இல.கணேசன் தனது உரையில், ''திருச்சியில் நடைபெறும் மாநாடுகள் அனைத்தும் திருப்புமுனை மாநாடாக அமையும். பி.ஜே.பி. முடிவெடுப்பதற்கு முன்னதாகவே, மோடிதான் பிரதமர் என்று மக்கள் முடிவெடுத்து விட்டனர். தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம். அந்த தேசிய சிந்தனை, அரசியல் களத்திலும் இருக்க வேண்டும். 1967-க்குப் பிறகு மாறிமாறி திராவிட கட்சிகள் ஆட்சியில் இருப்பதை மாற்றி, 'தேசிய மாற்று’ உருவாகும் நல்ல அறிகுறி இப்போது இருக்கிறது'' என்று கூட்டத்தை உசுப்பேற்றினார்.

காங்கிரஸை விரட்டுவோம்!

மோடி பேச வந்தபோது ஏக ஆரவாரம். எல்லையில் நடந்த தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்காகவும், நைரோபியில் தீவிரவாத தாக்குதலில் இறந்த மக்களுக்காகவும் மௌன அஞ்சலி செலுத்தச் சொன்ன மோடி, ''தமிழ் மண்ணே வணக்கம். பெரியோர்களே... தாய்மார்களே... வாலிப சிங்கங்களே... அனைவருக்கும் வணக்கம்'' என்று தமிழில் பேச ஆரம்பிக்க... கூட்டத்தில் ஏக ஆரவாரம். மீண்டும் தமிழிலேயே தொடர்ந்தார். ''தமிழ்நாடு பெருமை உடைய நாடு. கம்பன், வள்ளுவர் பிறந்த பூமி, தமிழ் என்று சொன்னால், காதில் தேன் வந்து பாயும் என்று பாடினான் பாரதியார். திருச்சி, தமிழ்நாட்டின் இதயம்போல் மத்தியில் அமைந்திருக்கும் மாவட்டம்'' என்று தமிழிலேயே பேசிக்கொண்டு போக... கூட்டத்தில் ஆரவாரம் அடங்க வெகு நேரமானது.

''இங்கு மினி குஜராத், சௌகார்பேட்டை. குஜராத்தில் மினி தமிழ்நாடு, மணிநகர். அதுதான் எனது தொகுதி. மணிநகர் வாக்காளர்கள் என்னை அதிக வாக்கு வித் தியாசத்தில் ஜெயிக்க வைத்தனர். இரண்டு மாநிலங்களுமே கடலோர மாநிலங்கள். குஜராத் மீனவர்கள் பாகிஸ்தானால் கைது செய்யப்படுகிறார்கள். தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுகிறார்கள். இப்படி மீனவர்கள் அண்டை நாட்டால் கைது செய்யப்படுவதற்கு பலமற்ற மத்திய அரசே காரணம். இப்படி ஓர் அரசு இருக்கிறது என்ற நினைப்பே இல்லாத காரணத்தால்தான் அந்த அரசுகள் இப்படி செய்கிறது. மொழியாலும் இனத்தாலும் காங்கிரஸ் நாட்டைப் பிரிக்கிறது. ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக பல பிரிவினைகளை உண்டாக்குகிறது. நம்நாடு முன்னேற வேண்டும் எனில், காங்கிரஸிடம் இருந்து விடுதலை பெற வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட வேண்டும் என்று காந்திஜி விரும்பினார். அதைச்செய்ய காங்கிரஸ் தவறிவிட்டது. அதை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. நான் இதற்கு முன்னும் தமிழகத்துக்கு வந்திருக்கிறேன். பொது நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்று இருக்கிறேன். இவ்வளவு பிரமாண்ட கூட்டத்தைப் பார்த்ததே இல்லை. நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த மைதானம் சிறிது. எனது பேச்சை கேட்டுக்கொண்டிருக்கும் இளைஞர்கள் கூட்டமோ பெரிது. அந்த இளைஞர் சக்தி டெல்லியில் மாற்றத்தை ஏற்படுத்தும்'' என்று முடித்தார்.

புது உத்வேகத்துடன் கலைந்து சென்றது கூட்டம்!

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: சு.குமரேசன், என்.ஜி.மணிகண்டன், பா.கந்தகுமார், தே.தீட்ஷித்