திமுகவில் இருந்து கருப்பசாமி பாண்டியன், அனிதா ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட்!

சென்னை: கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி திமுகவில் இருந்து கருப்பசாமி பாண்டியன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
 

திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினராக அனிதா ராதாகிருஷ்ணனும், திமுக உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக கருப்பசாமி பாண்டியனும் இருந்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக திமுகவில் இருந்து அண்மை காலமாக அனிதா ராதாகிருஷ்ணன் ஓரம்கட்டப்பட்டு இருந்தார். இதேபோல் கருப்பசாமி பாண்டியன் மீது திமுகவை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அண்மையில், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இதேபோல், திருச்செந்தூரில் ஜெயலலிதா போட்டியிடுவதாக இருந்தால், அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகவும், பதவியை துறந்துவிட்டு ஜெயலலிதாவின் வெற்றிக்காக பாடுபடத் தயாராக இருப்பதாகவும் திமுகவைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.

மேலும், இதுவரை யாரும் பெற்றிராத வெற்றியை அந்தத் தொகுதியில் ஜெயலலிதாவுக்கு பெற்றுத்தர தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதனால், இரண்டு பேரின் நடவடிக்கைகள் மீது திமுக தலைமை கடும் அதிருப்தி அடைந்தது. இந்நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி கருப்பசாமி பாண்டியன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தி.மு.க. பொதுச் செயலளார் அன்பழகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் வீ.கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியுள்ளனர்.

அத்துடன், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் தி.மு.கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றனர்" எனத் தெரிவித்துள்ளனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!