15 மீனவர்கள் கைது சிங்களப்படை அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ்!

சென்னை: தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதற்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர்  ராமதாஸ் இது போன்ற தொடர் சம்பவங்களுக்கு முடிவு கட்டவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"  வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 15 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு சொந்தமான 3 படகுகளும் பறிமுதல் செய்யப் பட்டிருக்கின்றன. இலங்கைக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் 45 நாட்களாக நடைமுறையில் இருந்த மீன்பிடித் தடைக்காலம் இரு நாட்களுக்கு முன்பு தான் முடிவடைந்தது. தடைக்குப் பிறகு முதன்முறையாக மீன்பிடிக்கச் சென்ற போது இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட 15 மீனவர்களும் கச்சத்தீவு அருகே இந்தியக் கடல் எல்லையில் தான் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தால் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என்று இலங்கை பிரதமர் எச்சரித்து வந்த நிலையில், அந்நாட்டுக் கடற்படை இந்திய எல்லைக்குள் நுழைந்து மீனவர்களை கைது செய்வதை ஏற்க முடியாது. இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலுக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும்.

கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனாலும், அவர்களுக்கு சொந்தமான படகுகளில் 46 படகுகளை இலங்கை அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை. இந்த நிலையில் 15 மீனவர்கள் படகுகளுடன் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களையும், ஏற்கனவே பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; இனியும் தமிழக மீனவர்களை கைது செய்யக்கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!