Published:Updated:

பெட்ரோல் விலை உயர்வு: திமுக, மதிமுக எதிர்ப்பு

விகடன் விமர்சனக்குழு
பெட்ரோல் விலை உயர்வு: திமுக, மதிமுக எதிர்ப்பு
பெட்ரோல் விலை உயர்வு: திமுக, மதிமுக எதிர்ப்பு

சென்னை, நவ.5,2011

பெட்ரோல் விலை உயர்வு: திமுக, மதிமுக எதிர்ப்பு

பெட்ரோல் விலை உயர்வுக்கு திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. வெளியிட்ட செய்தியில், "பெட்ரோல் விலையை உயர்த்தியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்த விலை உயர்வுக்கு இது உகந்த நேரமும் இல்லை.

அடிக்கடி பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவது நல்லதல்ல. உணவுப் பொருள் பணவீக்கம் அடைந்துள்ள இந்த சூழ்நிலையில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு நிச்சயமாக ஏழை எளிய மக்களுக்கு சுமையாக இருக்கும்.

திமுக இந்த பிரச்னையை நவம்பர் 22-ம் தேதி தொடங்க இருக்கும் நாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்பும்," என்று அவர் கூறியுள்ளார்.

வைகோ எதிர்ப்பு..

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கு தொடர்வதைத்தான் பெட்ரோல் விலை உயர்வு உணர்த்துகின்றது. கடந்த 10 மாத காலத்தில் மட்டும், 23 விழுக்காடு உயர்த்தி இருக்கின்றார்கள். இதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது; வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்படுவதால், விலைவாசி மேலும் அதிகரித்து மக்கள் மீது பெரும் சுமை ஏற்றப்படுகின்றது.

எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பீட்டுத் தொகை மத்திய அரசு வழங்கி உள்ள நிலையில், அவை நட்டம் அடைவதாக எப்படிக் கூற முடியும்? பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெயின் மாறுபாடுதான் விலை உயர்வுக்கு காரணம் என்றால், சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் குறைவாக உள்ளதே? ஏழை எளிய மக்களை உடனடியாகப் பாதிக்கும் இந்த பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்," என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாமக கண்டனம்...

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "ஏழை மக்களின் நலனில் தங்களுக்கு அக்கறை இல்லை என்பதை, பெட்ரோல் விலை உயர்வு மூலம் மத்திய அரசு மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. பெட்ரோல் விலை ஏற்கெனவே ரூ.70-ஐ தாண்டிவிட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் வரிகளை உயர்த்துவதால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கும் ஏழை எளிய மக்களை இந்த விலை உயர்வு மேலும் பாதிக்கும். கடந்த ஆண்டு ஜுன் மாதம் பெட்ரோல் விலை கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பிறகு இதுவரை 13 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் தலைமையிலான அரசு கடந்த 2004-ம் ஆண்டு பதவியேற்கும்போது ரூ.36.79 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, இப்போது இருமடங்காக உயர்ந்திருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பணக்காரர்களுக்கும் சலுகைகளாக வாரி வழங்கும் மத்திய அரசு ஏழை, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பெட்ரோலுக்கான விலையை உயர்த்தியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்," என்று ராமதாஸ் கூறியுள்ளார்.