Published:Updated:

ஆதிதிராவிட மாணவ விடுதிகளில் 1500 இடங்கள் உயர்வு

விகடன் விமர்சனக்குழு
ஆதிதிராவிட மாணவ விடுதிகளில் 1500 இடங்கள் உயர்வு
ஆதிதிராவிட மாணவ விடுதிகளில் 1500 இடங்கள் உயர்வு

சென்னை,  நவ.5,2011

ஆதிதிராவிட மாணவ விடுதிகளில் 1500 இடங்கள் உயர்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் சேருவதற்கு அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் கூடுதலாக 1500 இடங்கள் ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு, சமுதாயத்தில் நலிவுற்ற நிலையில் வாழும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில்  கல்வி உதவிகள், வேலை வாய்ப்பு வசதிகள், பொருளாதார உதவிகள் போன்ற   பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டி அவர்களை அரவணைத்துப் பாதுகாத்து வருகிறது.   

இந்த வகையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் இந்த மாணவ, மாணவியருக்கான குளியல் சோப்பு, சலவை தூள், தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்கள் வாங்கிடவும் மற்றும் இதர சிறு செலவுகளுக்காகவும்,  தற்போது மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் தொகையை  ரூ.25-லிருந்து ரூ.50- ஆக உயர்த்தியும், இதே போன்று கல்லுடரி விடுதி மாணவர் / மாணவியருக்கான தொகையை  ரூ.35-லிருந்து ரூ.75-ஆக உயர்த்தியும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.  

ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் 1254 விடுதிகளில் படிக்கின்ற மாணவ மாணவியர், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 40 விடுதிகளில் பயிலுகின்ற மாணவ மாணவியர்,   296 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவ மாணவியர் என, கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும்  மாணவ மாணவியர்  13,013 பேரும், பள்ளி விடுதி மாணவர்/ மாணவியர் 1,07,002 பேரும், ஆக மொத்தம் 1,20,015 மாணவ மாணவியர் இதன் மூலம் பயன் அடைவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு அரசுக்கு ரூ.3 கோடியே 19 லட்சத்து 55 ஆயிரத்து 700 ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

மேலும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் தங்கிப் படிப்பதற்காக ஆதி திராவிடர்,  பழங்குடியினர் மற்றும் கிருத்துவ ஆதிதிராவிட மாணவ மாணவியர் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர். இந்த விடுதிகளில் அரசால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் விண்ணப்பங்கள் வரப்பெற்றதால் பல மாணவ மாணவியருக்கு விடுதியில் இடம் கிடைக்கப்பெறவில்லை.

எனவே, இதனை கருத்தில் கொண்டு,  2011-12 ஆம் கல்வியாண்டில் கூடுதலாக  1500 இருக்கைகளை ஏற்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார். இதனால், அரசுக்கு கூடுதலாக 1 கோடியே 18 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் தொடர் மற்றும் தொடராச் செலவினம் ஏற்படும் என்று அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.